vedaneri.org. Sri Swami Chidbhavananda Ashram, Vedapuri, Theni, Tamil Nadu.
ஓம்‌. குருப்யோ நம:
பூஜ்யஸ்ரீ ஜ்ஞாநாநந்த பாரதீ மஹாஸ்வாமிகள்‌ இயற்றி அருளிய
ஜீவயாத்ரா
உயிரின்‌ பயணம்
‌ விளக்கி அருளியவர்‌
ஸ்ரீ ஸ்வாமி ஓங்காராநந்தர்
‌ வெளியீடு
ஸநாதநா பதிப்பகம்‌
எண்‌. 142, முதல்மாடி, க்ரீன்வேஸ்சாலை,
ராஜா அண்ணாமலைபுரம்‌, சென்னை-600 028.
போன்‌: 044-24641600
ஜீவயாத்ரா

நூலின்‌ தலைப்பு : ஜீவ யாத்ரா (உயிரின்‌ பயணம்‌),
விளக்கம்‌ : பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள்‌

நூலின்‌ அளவு : 1/8 டெம்மி
மொத்த பக்கங்கள்‌ : 96

முதல்‌ பதிப்பு : ஸ்ரீகர வருடம்‌, மார்கழி,
(2011, டிசம்பர்‌)

மொத்த பிரதிகள்‌ : 2000

அச்சு ஒளிக்கோர்வை : ஸ்ரீமதீ க்ருஷ்ணவேணி ஹரிராம்‌

பக்கவடிவமைப்பு,
அட்டைப்படம்‌ : ஆ. சுந்தரராஜன்‌

அச்சிட்டோர்‌ : ஸநாதநா பதிப்பகம்‌, சென்னை-28.

விலை ரூ. 60/-

கிடைக்குமிடங்கள்‌

ஸநாதநா பதிப்பகம்‌, சென்னை-28.
ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆச்ரமம்‌, வேதபுரீ, தேனி
புவனேஸ்வரீ அவதூத வித்யாபீடம்‌, புதுக்கோட்டை
பூஜ்யஸ்ரீ ஞாநாநந்த பாரதீ ஸ்வாமிகள்‌

நூலாசிரியர்‌ குறிப்பு


இ்நூலை இயற்றிய பூஜ்ய ஞாநாநந்த பாரதீ ஸ்வாமிகள்‌, ஸமீப காலத்தில்‌ வாழ்ந்த மஹான்‌ (1889-1975). ஸ்ரீஸ்வாமிகளின்‌ பூர்வாச்ரமப்‌ பெயர்‌ ஸ்ரீக்ருஷ்ணஸ்வாமி ஐயர்‌ என்பதாகும்‌. மதுரையில்‌ வக்கீல்‌ தொழில்‌ புரிந்து, பிறகு துறவறம்‌ ஏற்று சோழவந்தான்‌ அருகே மன்னாடிமங்கலம்‌ என்ற ஊரில்‌ தனியாக வசித்து, பாரத ஸநாதந தர்ம சாஸ்த்ரங்களையெல்லாம்‌ நூல்வடிவில்‌ கொண்டு வருவதில்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ அயராது பணியாற்றியவர்‌.
ஸ்ரீஸ்வாமிகள்‌ ச்ருங்ககிரி மடத்தின்மீது பேரன்பு பூண்டவர்கள்‌. ச்ருங்ககிரி மடத்தின்‌ மூலம்தான்‌ துறவறம்‌ மேற்கொண்டார்கள்‌. சிறந்த ப்ரஹ்மநிஷ்டராக விளங்கினார்கள்‌. அவர்களுக்குத்‌ தமிழிலும்‌, ஸம்ஸ்க்ருதத்திலும்‌, ஆங்கிலத்திலும்‌ நல்ல பாண்டித்யம்‌ இருந்தது. ஸம்ஸ்க்ருத மொழியில்‌ ச்லோகங்கள்‌ இயற்றக்கூடிய அளவிற்கு புலமை படைத்தவராகத்‌ திகழ்ந்தார்கள்‌.
Spiritual Journey என்ற ஆங்கில நூலைப்‌ பார்த்தவுடன்‌, பாரத ஸநாதந தர்மத்திலும்‌ ஆன்மிகப்‌ பயணத்தைக்‌ குறிக்கும்‌ கருத்துக்கள்‌ மிக அழகாக இருக்கின்றன, அவற்றை ஸம்ஸ்க்ருதத்தில்‌ எழுத வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ ஸ்ரீஸ்வாமிகளால்‌ இயற்றப்பட்டதுதான்‌ ஜீவயாத்ரா.
ஜீவ யாத்ரா என்ற இந்த நூலில்‌ வேதங்களுடைய ஸாரமான விஷயங்கள்‌ உபதேசிக்கப்பட்டிருக்கின்றன.
முகவுரை
யாத்ரா என்றால்‌ பயணம்‌. யாத்ரா என்ற சொல்லுக்கு, முயற்சி செய்து நம்மைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வது என்று பொருள்‌. எத்தனையோ பிறவிகளில்‌ செய்த பாவங்களிலிருந்து நம்மை விடுவித்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ நம்‌ நாட்டில்‌: உள்ள புண்ய தீர்த்தங்களில்‌ நீராடுவது தீர்த்த யாத்திரை எனப்படும்‌.
ஜீவ யாத்ரா என்றால்‌ உயிரின்‌ பயணம்‌ அல்லது வாழ்க்கைப்‌ பயணம்‌ என்று பொருள்‌.
பொதுவாகவே, பயணத்துக்குரிய முன்னேற்பாடுகளைச்‌ செய்வது, பயணப்‌ பெட்டியைத்‌ தயார்‌ செய்வது என யாத்திரை செய்வதில்‌ பல சிரமங்கள்‌ இருக்கின்றன.
நவீன யுகத்தில்‌, நாள்தோறும்‌ வசதிகள்‌ பெருகிக்‌ கொண்டே இருக்கும்‌ இக்காலத்திலும்‌, யாத்திரை மேற்கொள்வது நமக்குச்‌ சிரமமாகத்‌ தோன்றுகிறது. ஒரு வசதியும்‌ இல்லாத அந்தக்காலத்தில்‌, எத்தனையோ சிரமங்களுக்கிடையில்‌ போற்றுதலுக்குரிய நம்‌ முன்னோர்கள்‌ பாரத தேசம்‌ முழுவதும்‌ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்கள்‌.
யாத்திரையின்போது, நமக்கு ஓரிடத்தில்‌ உணவு கிடைக்கும்‌, ஓரிடத்தில்‌ சரியாக உணவு கிடைக்காது, உடல்சோர்வு ஏற்படும்‌. இருப்பினும்‌, நம்‌ பாவங்கள்‌ நீங்க வேண்டும்‌, நாம்‌ புனிதத்தன்மை பெற வேண்டும்‌ என்ற குறிக்கோளோடு யாத்திரை மேற்கொள்கிறோம்‌.
குறிக்கோளை அடைவதில்‌ ஆசை இருந்தால்‌, அதற்கு எவ்வளவு இடையூறுகள்‌ வந்தாலும்‌, சகித்துக்கொள்ள வேண்டும்‌ என்று தோன்றும்‌. ஆசை இல்லையென்றால்‌, சகித்துக்கொள்ள வேண்டும்‌ என்று தோன்றாது.
நாம்‌ வாழ்க்கையில்‌ எத்தனையோ பயணங்கள்‌ மேற்கொள்கிறோம்‌, காரில்‌ செல்கிறோம்‌, விமானத்தில்‌ செல்கிறோம்‌. ஆனால்‌ நூலாசிரியர்‌ சொல்வது ஜீவ யாத்ரா. அதாவது உயிரின்‌ பயணம்‌.
ஜீவனானது எத்தனையோ உடல்கள்‌ எடுத்து, பிரயாணம்‌ செய்துகொண்டே இருக்கிறது. இந்த உடல்‌ மாத்திரமல்ல, இதற்கு முன்னால்‌ எத்தனைப்‌ பிறவிகள்‌ எடுத்திருக்கிறது, இனியும்‌ புத்தியில்லை என்றால்‌, நிறைய பிறவிகள்‌ எடுக்க வேண்டி வரும்‌ என்பதிலும்‌ சந்தேகமில்லை.
பயணத்துக்குரிய வாகனம்‌ மாறுவதைப்போல, உடல்கள்தான்‌ மாறிக்‌ ககொண்டே இருக்கின்றன, பயணம்‌ தொடர்ந்துகொண்டுதான்‌ இருக்கிறது.
இப்பொழுது, மனித உடலில்‌ ஜீவன்‌ யாத்திரை செய்து கொண்டிருக்கிறான்‌. இதற்கு முன்னால்‌, வேறு சரீரத்தில்‌ யாத்திரை செய்து கொண்டிருந்தான்‌. இவ்வாறு ஜீவ யாத்திரையானது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
உலக வாழ்வில்‌ நாம்‌ மேற்கொள்ளும்‌ பயணங்களில்‌, எங்கு கிளம்புகிறோம்‌ என்பதும்‌, எங்கு சென்றடையப்‌ போகிறோம்‌ என்பதும்‌ நமக்குத்‌ தெரிந்திருக்கிறது. ஆனால்‌ ஜீவ யாத்திரையில்‌ இதற்குமுன்‌, எத்தனை. பிறவிகள்‌ எடுத்தோம்‌ என்று நமக்கே தெரியாது.
இந்த ஜீவ யாத்திரை அநாதி காலமாக தொடர்ந்து வருகிறது. எப்பொழுது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால்‌, இந்தப்‌ பிறவியில்‌ மட்டும்‌ சிறிது கவனமாக இருந்துவிட்டால்‌, யாத்திரையை நிறைவு செய்துவிடலாம்‌.
இந்தப்‌ பிறவியில்‌ நாம்‌ கவனமாக இல்லையென்றால்‌, இந்தப்‌ பயணம்‌ தொடரும்‌.
ஜீவ யாத்ரா - என்ற பெயரை உடைய இந்நூலில்‌, ஆசிரியர்‌, மனிதனின்‌ வாழ்க்கைக்‌ குறிக்கோளையும்‌, அதனை அடைவதற்கான வழியையும்‌, வேதமொழிகளில்‌ கூறி, ஆன்மிக வாழ்வில்‌ ஒரு மனிதன்‌ மேற்கொள்ள வேண்டிய ஸாதனைகளை மிக அழகாக படிப்படியாக விளக்கிக்‌ கூறியிருக்கிறார்‌.
ஜீவ யாத்ரா
மனித உடலில்‌ வாழும்‌ உயிரின்‌ குறிக்கோள்‌
ஶ்லோகம்‌ 1
जीव यात्रा
नित्यानन्दसुखं पदं सुविमलं प्राप्तुं समीहायुता:
सर्वे जन्मभृत: सदा व्यसनिनस्तत्स्थान संमार्गणे।
एवं सत्यपि साध्यसाधनयुगं सम्यङ् न जानन्ति ते
न प्राप्ता ह्यधुनापि सौख्यपदवीं स्वाभीष्टरूपां यत:॥ 1
ஜீவ யாத்ரா
நித்யாநந்ஸும் பம் ஸுவிமலம் ப்ராப்தும் ஸமீஹாயுதா:
ஸர்வே ஜந்மப்த: ஸதா வ்யஸநிநஸ்தத்ஸ்தாந ஸம்மார்ணே।
ஏவம் ஸத்யபி ஸாத்யஸாநயும் ஸம்யங் ந ஜாநந்தி தே
ந ப்ராப்தா ஹ்யதுநாபி ஸௌக்யபவீம் ஸ்வாபீஷ்டரூபாம் யத:॥ 1
பதவுரை
ஜந்ம ப்ருத: ஸர்வே - பிறவி எடுத்திருக்கிற அனைவரும்‌, ஸுவிமலம்‌ - (மாசற்ற) துன்பம்‌ கலவாத, நித்யாநந்த ஸுகம்‌ - நிலையான பேரின்பமாகிய, பதம்‌ - குறிக்கோளை, ப்ராப்தும்‌ - அடைவதற்கு, ஸமீஹாயுதா: - மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்‌. தத்‌ ஸ்தாந ஸம்மார்கணே - அந்த நிலையான பேரின்பத்தை அடையும்‌ வழியைத்‌ தேடுவதிலேயே, ஸதா - எப்பொழுதும்‌, வ்யஸநிந: - முயற்சி உடையவர்களாக இருக்கிறார்கள்‌.
ஏவம்‌ ஸதி அபி - (உண்மை) இவ்வாறு இருப்பினும்‌ கூட, தே - அவர்கள்‌, ஸாத்யஸாதநயுகம்‌ - குறிக்கோள்‌, அதனை அடைவதற்குரிய நெறிமுறை ஆகிய இரண்டையும்‌, ஸம்யக்‌ - தெளிவாக, ந ஜாநந்தி - அறிகின்றதில்லை. யத: - ஏனெனில்‌ (இவ்விஷயம்‌ எவ்வாறு விளங்குகிறதெனில்‌), ஸ்வாபீஷ்டரூபாம்‌ - தங்களுக்கு மிகவும்‌ விருப்பத்திற்குரியதான, ஸெளக்யபதவீம்‌ - பேரின்ப நிலையை, அதுநா அபி ஹி - இன்று வரையிலும்‌, ந ப்ராப்தா - (அவர்கள்‌) அடையவில்லை.
பொழிப்புரை
பிறவி எடுத்திருக்கிற அனைவரும்‌, (மாசற்ற) துன்பம்‌ கலவாத, நிலையான பேரின்பமாகிய குறிக்கோளை அடைவதற்கு மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்‌.
அந்த நிலையான பேரின்பத்தை அடையும்‌ வழியைத்‌ தேடுவதிலேயே, எப்பொழுதும்‌ முயற்சி உடையவர்களாக இருக்கிறார்கள்‌. (உண்மை) இவ்வாறு இருப்பினும்‌ கூட அவர்கள்‌ குறிக்கோள்‌, அதனை அடைவதற்குரிய நெறிமுறை ஆகிய இரண்டையும்‌ தெளிவாக அறிகின்றதில்லை.
ஏனெனில்‌ (இவ்விஷயம்‌ எவ்வாறு விளங்குகிறதெனில்‌), தங்களுக்கு மிகவும்‌ விருப்பத்திற்குரியதான பேரின்ப நிலையை, இன்று வரையிலும்‌ (அவர்கள்‌) அடையவில்லை.
விளக்கவுரை
குறையே இல்லாமல்‌ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்‌ என்றுதான்‌ எல்லோரும்‌ விரும்புகிறார்கள்‌. துன்பம்‌ கலவாத பேரின்பத்தைத்தான்‌ எப்பொழுதும்‌ தேடுகிறார்கள்‌. ஆனால்‌, இதைத்தான்‌ அடைய விரும்புகிறோம்‌, அதற்கு இதுதான்‌ வழி என்று அவர்களுக்குத்‌ தெரியவில்லை.
இது எப்படித்‌ தெரிகிறது என்றால்‌, இத்தனை வருடங்களாக முயன்றும்‌ அதனை அடையாததிலிருந்து தெரிகிறது.
நூலாசிரியர்‌ இந்த நூலை நித்யாநந்தம்‌ என்ற சொல்லுடன்‌ தொடங்கியதாலேயே, அது கடவுளை வணங்குகிற மங்கள ச்லோகத்திற்கு நிகர்‌ ஆகிவிட்டது.
1.1‌ துன்பம்‌ கலவாத பேரின்பம்‌
மெய்யறிவு நூல்களாகிய சாஸ்த்ரங்கள்‌, ஸுகத்தை ஸ்வரூப ஸுகம்‌ (நம்‌ உண்மை இயல்பாக இருக்கும்‌ பேரின்பம்‌), விஷய ஸுகம்‌ (புலனின்பம்‌) என்று இரண்டாகப்‌ பிரித்துக்‌ கூறுகின்றன.
விஷய ஸுகத்திற்கு ஸுகம்‌ என்றும்‌, ஸ்வரூப ஸுகத்திற்கு ஆநந்தம்‌ என்றும்‌ பெரும்பாலான இடங்களில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது (இது சில இடங்களில்‌ மாறும்‌).
நாம்‌ துன்பமே வடிவானவர்கள்‌ என்று நாம்‌ எண்ணிக்‌ கொண்டிருக்க, “நீ பேரின்ப வடிவம்‌” என்று மெய்யறிவு நூல்கள்‌ கூறுகின்றன. அத்வைத வேதாந்த சாஸ்த்ர கருத்துக்களைத்‌ தகுந்த குருநாதரின்‌ துணையோடு முறையாக ஆராய்ச்சி செய்தால்‌, இந்தப்‌ பேருண்மையை ஒருவர்‌ உள்ளங்கை நெல்லிக்கனி போலத்‌ தெளிவாக அறிந்துகொள்ள முடியும்‌.
உலகில்‌, புறத்தே நாம்‌ அனுபவிக்கும்‌ இன்பங்கள்‌ அனைத்தும்‌ துன்பம்‌ கலந்தவையாக இருக்கின்றன.
அற்புதமான கல்யாணி ராக ஆலாபனையைக்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்போது, திடீரென்று கேட்கும்‌ கூச்சல்‌ போல, வேர்க்கடலையை ரசித்துத்‌ தின்றுகொண்டிருக்கும்போது அகப்படும்‌ பூச்சிக்கடலையைப்‌ போல, நம்‌ வாழ்க்கையில்‌ நாம்‌ அனுபவிக்கும்‌ அனைத்து இன்பங்களிலும்‌ துன்பம்‌ கலந்திருக்கிறது.
துன்பம்‌ எனும்‌ மலத்தை எவருமே விரும்புவதில்லை. துன்பமே இல்லாத, நிலையான பேரின்பத்தை அடைவதற்குத்தான்‌ எல்லோரும்‌ விரும்புகின்றனர்‌.
வாழ்க்கையில்‌ எல்லோரும்‌ எதனை அடைய விரும்புகிறார்கள்‌?
தங்களுடைய குழந்தை நன்றாகப்‌ படிக்க வேண்டும்‌, அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும்‌, திருமணம்‌ ஆக வேண்டும்‌, குழந்தை பிறக்க வேண்டும்‌, அந்தக்‌ குழந்தைக்கு விரும்பும்‌ பள்ளியில்‌ இடம்‌ கிடைக்க வேண்டும்‌, அந்தக்‌ குழந்தை நன்றாகப்‌ படிக்க வேண்டும்‌, கல்லூரியில்‌ இடம்‌ கிடைக்க வேண்டும்‌, வேலை கிடைக்க வேண்டும்‌, திருமணம்‌ ஆக வேண்டும்‌, குழந்தை பிறக்க வேண்டும்‌, அந்தக்‌ குழந்தைக்குப்‌ பள்ளியில்‌ இடம்‌ கிடைக்க வேண்டும்‌...
சுருக்கமாகச்‌ சொன்னால்‌, வாழ்வில்‌ துன்பமே வரக்கூடாது, பிரச்சினைகளே தோன்றக்‌ கூடாது என்பதுதான்‌ அனைவரின்‌ நோக்கமாகவும்‌ இருக்கிறது.
எல்லாம்‌ வல்ல இறைவா! சிறிது துன்பத்தைக்‌ கொடுப்பாயாக என்று பிரார்த்தனை செய்பவர்கள்‌ எவரும்‌ இல்லை. துன்பம்தான்‌ ஏற்கெனவே இருக்கிறதே, அதற்கு ஏன்‌ கடவுளை வேண்ட வேண்டும்‌! என்றுதான்‌ கேட்பார்கள்‌!
1.2 துன்பம் கலவாத பேரின்பத்திற்கான தேடல்‌
மக்கள்‌ விரும்புவது நிலையான பேரின்பம்‌. அந்த இன்பத்தை தொலைக்காட்சிப்‌ பெட்டியில்‌ தேடுகிறார்கள்‌, உணவில்‌ தேடுகிறார்கள்‌, உறவுகளில்‌ தேடுகிறார்கள்‌, நட்பில்‌ தேடுகிறார்கள்‌, உலகப்‌ பொருட்களில்‌ தேடுகிறார்கள்‌, ஊர்‌ ஊராகச்‌ சென்று தேடுகிறார்கள்‌.
மனிதன்‌ காலையிலிருந்து, இரவு வரை பணம்‌ ஸம்பாதிப்பதற்காகப்‌ படாதபாடுபடுகிறான்‌. பாடுபட்டால்தான்‌ பணம்‌ வரும்‌. பணம்‌ வந்தால்‌, நிம்மதியாக இருக்கலாம்‌ என்று எண்ணுகிறான்‌. பணத்தால்‌ வாழ்க்கைவசதிகள்‌ பெருகுகின்றன, அதற்கேற்றாற்போல்‌, பிரச்சினைகளும்‌ பெருகுகின்றன.
முன்பு ஓலைக்குடிசையில்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருந்தவன்‌, இப்பொழுது குளிரூட்டப்பட்ட அறையில்‌ வசதியாக அமர்ந்து, கன்னத்தில்‌ கைவைத்து கவலைப்பட்டுக்கொண்டு, அந்த நிலையான பேரின்பத்தைத்‌ தேடிக்‌ கொண்டிருக்கிறான்‌.
ஆன்மிகத்தில்தான்‌ அந்த இன்பம்‌ கிடைக்கும்‌ ஈன்று யாரோ சொல்ல, ஆன்மிக யாத்திரை மேற்கொள்கிறான்‌. கைலாயம்‌, கேதார்நாத்‌, பதரிநாத்‌, வாராணஸி எனப்‌ பல புண்ய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தேடுகிறான்‌.
மக்கள்‌ இவ்வாறு, பணத்தை, உடல்‌ உழைப்பைச்‌ செலவழித்து, அந்த இன்பத்தை நன்கு தேடுவதிலேயே எப்பொழுதும்‌ பெருமுயற்சியுடையவர்களாக இருக்கிறார்கள்‌.
எல்லோருக்கும்‌ மேலெழுந்தவாரியாக இன்பத்தைத்தான்‌ தேடுகிறோம்‌ என்று தெரியும்‌. ஆனால்‌ துன்பம்‌ கலவாத, எப்பொழுதும்‌ இருக்கின்ற இன்பத்தைத்தான்‌ விரும்புகிறோம்‌, அதனை அடைவதற்கு இதுதான்‌ வழி என்ற தெளிவான பார்வை எவருக்கும்‌ இல்லை.
அது உங்களுக்கு எப்படித்‌ தெரியும்‌ ? என்று கேட்கலாம்‌.
அவர்களின்‌ கண்களிலிருந்து தாரை தாரையாக வழியும்‌ கண்ணீரே சொல்கிறது.
அந்த இன்பத்தை அவர்கள்‌ இதுவரையிலும்‌ அடையாததிலிருந்தே தெரிகிறது.
முதல்‌ ச்லோகம்‌ மிக அழகாக நம்‌ எல்லோருடைய குறிக்கோளையும்‌ கூறுகிறது.
அடுத்த ச்லோகம்‌, துன்பம்‌ கலவாத பேரின்பத்தை அடைவதற்குரிய வழியைப்‌ பற்றிய அறிவைத்‌ தருவது எது என்பதை உபதேசிக்கிறது.
குறிக்கோளையும்‌, அதனை அடைவதற்கான நெறிமுறைகளையும்‌ பற்றிய அறிவைத்‌ தருவது எது?
ஶ்லோகம்‌ 2
तत्प्राप्त्यै प्रभुसंमितापि कृपया त्रय्यन्तसारान्विता
वळी काठकमध्यगा कविसमं प्रोत्साहयन्ती नरान्।
एवं साधनकल्पनां रचयते सन्मार्गगानां सतां
तद्विष्णो: परमं पदं च सहसा गन्तुं मनीषावताम्॥ 2
தத்ப்ராப்த்யை ப்ரபுஸம்மிதாபி க்பயா த்ரய்யந்தஸாராந்விதா
வல்லீ காகமத்கா கவிஸமம் ப்ரோத்ஸாஹயந்தீ நராந்।
ஏவம் ஸாநகல்பநாம் ரசயதே ஸந்மார்காநாம் ஸதாம்
த்விஷ்ணோ: பரமம் பம் ச ஸஹஸா ந்தும் மநீஷாவதாம்॥ 2
பதவுரை
தத்‌ ப்ராப்த்யை - அதை (அப்பேரின்பத்தை) அடைவதற்கு, த்ரய்யந்தஸாராந்விதா - வேதாந்த ஸாரமான, காடகமத்யகா வல்லீ - கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது, ப்ரபுஸம்மிதாபி - தலைவனுக்கு நிகராக இருப்பினும்‌, கவிஸமம்‌ - நண்பனைப்‌ போன்று, க்ருபயா - கருணையோடு, நரான்‌ - மனிதனை, ப்ரோத்ஸாஹயந்தீ - நன்கு உற்சாகப்படுத்துகிறது. ஸந்மார்ககாநாம்‌ - நல்வழியில்‌ செல்ல விரும்புகின்ற, ஸதாம்‌ - நல்லோர்களுக்கு, தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ச - அந்த விஷ்ணுவின்‌ பரமபதத்தை (பேரின்பத்தை), ஸஹஸா - விரைவில்‌, கந்தும்‌ - அடைவதற்கு (விரும்புகின்ற), மநீஷாவதாம்‌ - அறிவாளிகளுக்கு, ஏவம்‌ - இத்தகைய (கீழ்க்கண்ட), ஸாதந. கல்பநாம்‌ - நெறிக்கான உருவகத்தை, ரசயதே - வடிவமைத்து விளக்குகிறது. பொழிப்புரை
அதை (அப்பேரின்பத்தை) அடைவதற்கு, வேதாந்த ஸாரமான, கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது, தலைவனுக்கு நிகராக இருப்பினும்‌, நண்பனைப்‌ போன்று கருணையோடு மனிதனை நன்கு உற்சாகப்படுத்துகிறது. நல்வழியில்‌ செல்ல விரும்புகின்ற நல்லோர்களுக்கு அந்த விஷ்ணுவின்‌ பரமபதத்தை (பேரின்பத்தை) விரைவில்‌ அடைவதற்கு (விரும்புகின்ற) அறிவாளிகளுக்கு, இத்தகைய (கீழ்க்கண்ட) நெறிக்கான உருவகத்தை வடிவமைத்து விளக்குகிறது.
விளக்கவுரை
'இந்த இரண்டாவது ச்லோகம்‌, வேதங்களில்‌ கடைசிப்‌ பகுதியாக இருக்கின்ற உபநிஷத்துக்கள்‌ எல்லோரும்‌ அடைய விரும்புகின்ற நிலையான பேரின்பமாகிய குறிக்கோளுக்கான சரியான வழிமுறைகளை வழங்குகின்றன என்று சொல்கிறது,மக்களுக்கு சுயமாக ஸாதனம்‌ எது, ஸாத்யம்‌ எது என்று தெரியவில்லை, அவர்களுக்கு உபநிஷத்‌ வழி சொல்லிக்கொடுக்கிறது.
நூலாசிரியர்‌ நிலையான பேரின்பத்திற்கான திறவுகோல்‌ வேதங்களில்‌ இருக்கின்றன, வேதத்தின்‌ வாயிலாகத்தான்‌ அந்த வழிமுறையை அறிந்துகொள்ள முடியும்‌ என்கிறார்‌.
2.1 மூன்று வித நூல்கள்‌
  1. ப்ரபு ஸம்ஹிதா
    வேதங்களுக்கு ஒரு தலைவனைப்‌ போன்று ஆணையிடுவதற்கு உரிமை இருக்கிறது. அதனால்‌ அவை ப்ரபு ஸம்ஹிதா எனப்படும்‌. உண்மை பேசு, அறவழியில்‌ நட (ஸத்யம்‌ வத। தர்மம்‌ சரடு) என்று கட்டளையிடும்‌ ஆற்றல்‌ வேதத்திற்கு இருக்கிறது. வேதத்தின்‌ கட்டளைக்கு அனைவரும்‌ கீழ்படிந்தாக வேண்டும்‌. உன்‌ வாக்கு என்னப்‌ பெரிய வேதவாக்கோ? என்று கேட்கிறோம்‌. வேதவாக்கிற்கு அனைவரும்‌ கட்டுப்பட்டாக வேண்டும்‌ என்ற அர்த்தம்‌ அதில்‌ பொதிந்திருக்கிறது.
  2. ஸுஹ்ருத்‌ ஸம்ஹிதா
    ஸுஹ்ருத்‌ என்றால்‌ நண்பன்‌. வேதத்தை ஒட்டி எழுந்த இதிஹாஸங்கள்‌, ஸ்ம்ருதிகள்‌ ஆகியவை, மனிதனின்‌ நல்வாழ்விற்குரிய நெறிமுறைகளை ஒரு நண்பனைப்‌ போன்று ஹிதமாக எடுத்துக்‌ கூறுகின்றன. அதனால்‌ அவை ஸுஹ்ருத்‌ ஸம்ஹிதா எனப்படும்‌.
  3. காந்தா ஸம்ஹிதா
  4. புராணங்கள்‌, மனைவியைப்போல உள்ளத்தைக்‌ கொள்ளைகொள்ளும்‌ வகையில்‌ நற்கருத்துக்களைக்‌ கூறி மனிதனை நல்வழியில்‌ தூண்டுகின்றன. எனவே அவை காந்தா ஸம்ஹிதா எனப்படும்‌.
மூன்றினுடைய நோக்கமும்‌ நமக்கு நன்மை புரிவதே ஆகும்‌.
2.2 வேதத்தின்‌ கருணை
க்ருஷ்ண யஜுர்‌ வேதத்தில்‌, கடோபநிஷத்‌ என்றொரு உபநிஷத்‌ இருக்கிறது. வேதத்திற்கு தலைவனைப்‌ போன்று கட்டளையிடுவதற்கு தகுதி இருந்தாலும்கூட, அது கட்டளையிடவில்லை. நண்பனைப்‌ போல கருணையோடு பேசி, மனிதனை உற்சாகப்படுத்தி மனிதனை அதில்‌ ஈடுபடுத்துகிறது.
நன்னெறியில்‌ செல்லக்கூடிய நல்லோர்களுக்கு, அறத்தைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்ற ஆர்வமுள்ள மக்களுக்கு, அந்த விஷ்ணுவின்‌ மேலான பதத்தை (நிலையான பேரின்பத்தை), உடனே அடைவதற்கு விரும்புகின்ற அறிவாளிகளுக்கு, நன்கு சிந்தித்துப்‌ பகுத்தறியக்கூடியவர்களுக்கு, சாஸ்த்ரம்‌ கற்றுக்‌ கொடுக்கிறது.
2.3 விஷ்ணுவின்‌ பரமபதம்‌
விஷ்ணுவின்‌ பரமபதம்‌ என்பது குறிப்பிட்ட இடத்தில்‌, குறிப்பிட்ட ஒரு கடவுளை தரிசனம்‌ செய்வது என்று சிலர்‌ நினைக்கிறார்கள்‌.
ஸர்வம்‌ வேவேஷ்டி இதி விஷ்ணு:।
விஷ்ணு என்றால்‌ எங்கும்‌ நீக்கமற நிறைந்திருப்பவர்‌ என்று பொருள்‌. எங்கும்‌ வியாபித்திருப்பவர்‌.
எங்கும்‌ நீக்கமற நிறைந்திருக்கிறார்‌, எல்லாக்‌ காலத்திலும்‌. இருக்கிறார்‌, எல்லாப்‌ பொருட்களாகவும்‌ இருக்கிறார்‌ என்றால்‌, இப்பொழுது இங்கு இருக்கிறார்‌ என்றுதானே பொருள்‌!
ஸுவிமலம்‌ நித்யாநந்தபதம்‌ என்று முதல்‌ ச்லோகத்தில்‌ குறிப்பிடப்பட்ட துன்பம்‌ கலவாத, நிலையான பேரின்பமும்‌, விஷ்ணுவின்‌ பரமபதமும்‌ ஒன்றே ஆகும்‌.
எங்கும்‌ நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒன்றை, அடைய முடியுமா?
அடைய வேண்டும்‌ என்றால்‌, இப்பொழுது இங்கு இல்லை என்று பொருள்‌. அது அடையப்பட வேண்டியது என்று சொன்னால்‌, அதனுடைய எங்கும்‌ நீக்கமற நிறைந்திருக்கின்ற தன்மைக்கு முரணாகும்‌.
2.4 நிலைத்த பேரின்பம்‌
நாம்‌ எல்லோரும்‌ விரும்புவது துன்பம்‌ கலவாத, யாண்டும்‌. இருக்கின்ற நிலைத்த பேரின்பத்தைத்தான்‌. எப்பொழுதும்‌ இருப்பது எதுவோ, அதுவே நிலையானது (நித்யம்‌) எனப்படும்‌. நாம்‌ விரும்புவது நிலைத்த இன்பம்‌.
நிலைத்த இன்பத்தை அடைய முடியுமா?
அடுப்பின்மீது பாத்திரத்தில்‌ நீர்‌ வைக்கிறோம்‌. நீர்‌ கொதிக்கிறது. நீருக்கு இயல்பாகவே சூடு இல்லை. சுடும்தன்மை இப்பொழுது வந்திருக்கிறது, அதாவது ஏற்றுவிக்கப்பட்டிருக்கிறது. நீரில்‌ உள்ள சுடும்தன்மை அநித்யம்‌. எவையெல்லாம்‌ வருமோ, அவையெல்லாம்‌ அநித்யம்‌, நீரில்‌ உள்ள சூட்டைப்‌ போல.
நெருப்பில்‌ உள்ள சூடு இயல்பானது. எது அதனுடைய இயல்போ (ஸ்வாபாவிகம்‌), அது நித்யம்‌. எது இயற்கையாகவே இருக்கிறதோ, அது நித்யமானது.
நாம்‌ எல்லோரும்‌ விரும்புவது நித்ய ஸுகம்‌. நித்ய ஸுகம்‌ வருமானால்‌, அது அநித்யமாகிவிடும்‌. நித்ய ஸுகத்தை அடைய முடியாது என்று புரிந்துகொள்ள வேண்டும்‌.
நிலைத்த இன்பமே நம்‌ இயல்பு, நம்‌ ஸ்வபாவம்‌, நம்‌ ஸ்வரூபம்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன.
தர்க்கபூர்வமாகப்‌ பார்த்தால்‌, நித்ய ஸுகத்தை அடைய முடியாது என்று தெரிகிறது. நமக்கு அதனை அடைய வேண்டும்‌ என்ற ஆவல்‌ இருக்கிறது.
நெருப்பில்‌ உள்ள சுடும்தன்மை வருவதுமில்லை, போவதுமில்லை. அதேபோன்று நாம்‌ விரும்புகின்ற நிலையான பேரின்பம்‌ வருவதுமில்லை, போவதுமில்லை.
அது எங்கும்‌ நீக்கமற நிறைந்திருக்கிறது, அது விஷ்ணுவின்‌ பரமபதம்‌ என்றால்‌, இப்பொழுதே, இங்கேயே அது இருக்கிறது என்று பொருள்‌.
அதனை அடைய முடியாது என்பதை இவ்வாறு புரிந்துகொண்ட பிறகு, நமக்கு ஏன்‌ அது தெரியவில்லை? இப்பொழுதே ஆநந்தமாக இருப்பதை நாம்‌ ஏன்‌ உணராமல்‌ இருக்கிறோம்‌ ? என்று கேட்கலாம்‌.
அறியாமையால்‌ அது தெரியவில்லை. அறிந்துகொள்ள வைக்கிறேன்‌ என்கிறது சாஸ்த்ரம்‌. அது ஏற்கெனவே இருப்பதால்‌, அடைய வைக்க முடியாது. அறிந்துகொள்ளத்தான்‌ முடியும்‌.
அடுத்த ச்லோகத்தில்‌ ஓர்‌ உருவகம்‌ சொல்லப்படுகிறது. அந்த உருவகத்தை ஒருவன்‌ நன்கு புரிந்துகொண்டால்‌, அந்த நிலையான பேரின்பத்தைத்‌ தன்னுடைய இயல்பாக அவனால்‌ உணர்ந்துகொள்ள முடியும்‌.
மூன்றாவது ச்லோகத்தில்‌ கடோபநிஷத்தில்‌ உள்ள மந்த்ரத்தை ச்லோக வடிவில்‌ தந்திருக்கிறார்‌.
ஶ்லோகம்‌ 3
आत्मानं रथिनं ब्रवीति निगम: बुद्धिं च तत्सारथिं
देहं स्यन्दनमिन्द्रियाणि तुरगान् शब्दादि तद्गोचरम्।
चेत: प्रग्रहमादरेण य इमान् वश्यांस्तनोत्यात्मवान्
तस्यैवाप्यमिदं पदं सुखघनं पारं परं ह्यध्वन:॥ 3
ஆத்மாநம் ரதிநம் ப்ரவீதி நிம: புத்திம் ச தத்ஸாரதிம்
தேஹம் ஸ்யந்நமிந்த்ரியாணி துரகாந் ஶப்தாதித்கோசரம்।
சேத: ப்ரக்ரஹமாரேண ய இமாந் வஶ்யாம்ஸ்தநோத்யாத்மவாந்
தஸ்யைவாப்யமிம் பம் ஸுநம் பாரம் பரம் ஹ்யத்வந:॥ 3
பதவுரை
நிகம: - வேதமானது (கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது), ஆத்மாநம்‌ - ஜீவாத்மாவை, ரதிநம்‌ - தேரில்‌ வீற்றிருப்பவனாக, தேஹம்‌ - உடலை, ஸ்யந்தநம்‌ - தேராக, இந்த்ரியாணி - பொறிகளை, துரகாந்‌ - குதிரைகளாக, புத்திம்‌ - புத்தியை, தத்‌ ஸாரதிம்‌ - அதன்‌ (தேரின்‌) தேரோட்டியாக, சேத: - மனதை, ப்ரக்ரஹம்‌ - கடிவாளக்‌ கயிறாக, ஊப்தாதி - ஓசை முதலான புலன்களை, தத்‌ கோசரம்‌ - அதன்‌ (தேரின்‌) பாதையாக- கூறுகிறது.
ய: ஆத்மவாந்‌ - எந்த விழிப்புணர்வுள்ள (மனிதன்‌), இமாந்‌ - (உடல்‌, பொறிகள்‌, புத்தி, மனம்‌ ஆகிய) இவைகளை, ஆதரேண - மிகவும்‌ கவனமாக, வஸ்யாம்ஸ்தநோதி - (வசப்படுத்துகிறானோ), நெறிப்படுத்துகிறானோ, தஸ்யைவ - அவனால்தான்‌, இதம்‌ - இந்த, அத்வந: பரம்‌ பாரம்‌ - பாதையின்‌ முடிந்த முடிவாக இருக்கின்ற (அந்த சிறந்த குறிக்கோளாகிய), ஸுககநம்‌ பதம்‌ - பேரின்ப நிலையானது, ஹி- நிச்சயமாக, ஆப்யம்‌- அடைய (உணர) இயலும்‌.
பொழிப்புரை
வேதமானது (கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது) ஜீவாத்மாவை தேரில்‌ வீற்றிருப்பவனாக, உடலை தேராக, பொறிகளை குதிரைகளாக, புத்தியை அதன்‌ (தேரின்‌) தேரோட்டியாக, மனதைக்‌ கடிவாளக்‌ கயிறாக, ஓசை முதலான புலன்களை அதன்‌ (தேரின்‌) பாதையாகக்‌ கூறுகிறது.
எந்த விழிப்புணர்வுள்ள (மனிதன்‌), (உடல்‌, பொறிகள்‌, புத்தி, மனம்‌ ஆகிய) இவைகளை மிகவும்‌ கவனமாக (வசப்படுத்துகிறானோ?), நெறிப்படுத்துகிறானோ அவனால்தான்‌ இந்த பாதையின்‌ முடிவாக இருக்கின்ற (அந்த சிறந்த குறிக்கோளாகிய) பேரின்ப நிலையானது. நிச்சயமாக அடைய (உணர) இயலும்‌.
பதவுரை
நிகம: - வேதமானது (கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது), ஆத்மாநம்‌ - ஜீவாத்மாவை, ரதிநம்‌ - தேரில்‌ வீற்றிருப்பவனாக, தேஹம்‌ - உடலை, ஸ்யந்தநம்‌ - தேராக, இந்த்ரியாணி - பொறிகளை, துரகாந்‌ - குதிரைகளாக, புத்திம்‌ - புத்தியை, தத்‌ ஸாரதிம்‌ - அதன்‌ (தேரின்‌) தேரோட்டியாக, சேத: - மனதை, ப்ரக்ரஹம்‌ - கடிவாளக்‌ கயிறாக, ஊப்தாதி - ஓசை முதலான புலன்களை, தத்‌ கோசரம்‌ - அதன்‌ (தேரின்‌) பாதையாக- கூறுகிறது.
ய: ஆத்மவாந்‌ - எந்த விழிப்புணர்வுள்ள (மனிதன்‌), இமாந்‌ - (உடல்‌, பொறிகள்‌, புத்தி, மனம்‌ ஆகிய) இவைகளை, ஆதரேண - மிகவும்‌ கவனமாக, வஸ்யாம்ஸ்தநோதி - (வசப்படுத்துகிறானோ), நெறிப்படுத்துகிறானோ, தஸ்யைவ - அவனால்தான்‌, இதம்‌ - இந்த, அத்வந: பரம்‌ பாரம்‌ - பாதையின்‌ முடிந்த முடிவாக இருக்கின்ற (அந்த சிறந்த குறிக்கோளாகிய), ஸுககநம்‌ பதம்‌ - பேரின்ப நிலையானது, ஹி- நிச்சயமாக, ஆப்யம்‌- அடைய (உணர) இயலும்‌.
பொழிப்புரை
வேதமானது (கடோபநிஷத்தின்‌ நடுப்பகுதியானது) ஜீவாத்மாவை தேரில்‌ வீற்றிருப்பவனாக, உடலை தேராக, பொறிகளை குதிரைகளாக, புத்தியை அதன்‌ (தேரின்‌) தேரோட்டியாக, மனதைக்‌ கடிவாளக்‌ கயிறாக, ஓசை முதலான புலன்களை அதன்‌ (தேரின்‌) பாதையாகக்‌ கூறுகிறது.
எந்த விழிப்புணர்வுள்ள (மனிதன்‌), (உடல்‌, பொறிகள்‌, புத்தி, மனம்‌ ஆகிய) இவைகளை மிகவும்‌ கவனமாக (வசப்படுத்துகிறானோ?), நெறிப்படுத்துகிறானோ அவனால்தான்‌ இந்த பாதையின்‌ முடிவாக இருக்கின்ற (அந்த சிறந்த குறிக்கோளாகிய) பேரின்ப நிலையானது. நிச்சயமாக அடைய (உணர) இயலும்‌.
விளக்கவுரை
இரண்டாவது ச்லோகத்தில்‌ குறிப்பிடப்பட்ட நெறிக்கான உருவகத்தைக்‌ கூறுகிறார்‌.
8.1 ரதகல்பநா- தேர்‌ உருவகம்‌
ஆத்மாநம்‌ ரதிநம்‌ வித்தி ரீரம்‌ ரதமேவது ।
புத்திம்‌ து ஸாரதிம்‌ வித்தி மந: ப்ரக்ரஹமேவ ச
(கடோபநிஷத்‌ 1-8-8)
ஜீவாத்மாவை தேரில்‌ அமர்ந்திருப்பவனாகவும்‌, உடலைத்‌ தேராகவும்‌ அறிவாயாக. புத்தியைத்‌ தேரோட்டியாகவும்‌, மனதைக்‌ கடிவாளமாகவும்‌ அறிவாயாக.
இந்த்ரியாணி ஹயாநாஹு: விஷ்யாம்ஸ்தேஷு கோசராந்‌।
ஆத்மேந்த்ரியமநோயுக்தம்‌ போக்தேத்யாஹுர்மநீஷிண:।
(கடோபநிஷத்‌ 1-3-4)
இந்த்ரியங்களைக்‌ குதிரைகளாகவும்‌, பொருட்களை அவற்றின்‌ பாதைகளாகவும்‌ கூறுகிறார்கள்‌. இவற்றுடன்‌ கூடிய ஜீவாத்மாவை அனுபவிப்பவன்‌ என்று ஞானிகள்‌ கூறுகிறார்கள்‌.
யஸ்து விஜ்ஞாநவாந்‌ பவதி யுக்தேந மநஸா ஸதா।
தஸ்யேந்த்ரியாணி வஸ்யாநிஸதஸ்வா இவ ஸாரதே:।।
(கடோபநிஷத்‌ 1-3-8)
யார்‌ அறிவுடையவனாகவும்‌, என்றும்‌ நெறிப்படுத்தப்பட்ட மனதுடன்‌ கூடியவனாகவும்‌ இருக்கிறானோ, அவனுடைய இந்த்ரியங்கள்‌ தேரோட்டியின்‌ நல்ல குதிரைகள்‌ போல்‌ கட்டுப்பட்டு இருக்கின்றன.
உபநிஷத்‌ வாழ்க்கையின்‌ குறிக்கோளையும்‌, அந்தக்‌ குறிக்கோளை அடைவதற்குரிய வழிமுறையையும்‌ ஒரு தேர்‌ பயணத்தோடு ஒப்பிட்டு உருவகப்படுத்துகிறது.
தேர்‌ பயணத்தில்‌ முக்கியமானவன்‌ பயணிப்பவன்‌. அவனுக்காகத்தான்‌ பயணமே மேற்கொள்ளப்படுகிறது.
பயணத்தின்‌ குறிக்கோள்‌ மிக முக்கியம்‌. எங்கு செல்ல விரும்புகிறோம்‌ என்பது தெளிவாகத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. காரில்‌ ஏறி அமர்ந்துவிட்டு, எங்கோ போ என்று ஓட்டுனரிடம்‌ நாம்‌ சொல்வதில்லை. பயணி, பயணத்தின்‌ குறிக்கோள்‌, பயணத்திற்குரிய வாஹனம்‌, வாஹனத்துக்குரிய பாதை, வாஹனத்தைச்‌ செலுத்துபவன்‌ ஆகிய ஐந்தும்‌ சரியாக இருந்தால்தான்‌ பயணம்‌ வெற்றிகரமாக அமையும்‌. இதில்‌ தெளிவான பார்வை இருக்க வேண்டும்‌.
உயிராகிய ஜீவாத்மாதான்‌ பயணி. நிலையான பேரின்பமே பயணத்தின்‌ குறிக்கோள்‌. உடலே பயணத்திற்குரிய வாகனம்‌. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி -ஆகிய ஐம்பொறிகளே குதிரைகள்‌. புத்தியே அந்தக்‌ குதிரைகளைச்‌ செலுத்துகின்ற ஸாரதி. மனமே. கடிவாளக்‌ கயிறு. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்‌ ஆகிய ஐம்புலன்களாகிய விஷயங்களே பாதைகள்‌.
புத்தியானது மனதைத்‌ தன்வசம்‌ வைத்து, மனம்‌ சொல்வதை பொறிகள்‌ கேட்டால்‌, குறிக்கோளை நாம்‌ அடையலாம்‌. உயிரானது. இந்த்ரியங்களை ஒழுங்குபடுத்தி, உடம்பையும்‌, மனதையும்‌ சரியாக வைத்துக்கொண்டால்தான்‌ ஜீவாத்மாவே பரமாத்மா என்ற குறிக்கோளை உணர இயலும்‌.
3.2. ஆத்மவாந்‌ - தன்னைக்‌ கட்டியவன்‌
“தன்னைக்‌ கட்டுதல்‌ அறம்‌” என்பார்‌ மஹாகவி பாரதியார்‌. ஆத்மவாந்‌ என்றால்‌ உறுதியுடன்‌ கூடியவன்‌, விழிப்புணர்வுடன்‌ கூடியவன்‌, தன்னை நன்றாகக்‌ கட்டுப்படுத்தியிருப்பவன்‌, உடலையும்‌, மனதையும்‌, புத்தியையும்‌ நெறிப்படுத்தி, தன்‌ கட்டுப்பாட்டில்‌ வைத்திருப்பவன்‌, (ஆத்மாவை) தன்னை உடையவன்‌ என்று பொருள்‌. உயிர்‌ தன்‌ கட்டுப்பாட்டில்‌ புத்தி, மனம்‌, உடல்‌, இந்திரியங்களை வைத்திருக்குமானால்‌ அவைகளுக்கு உடமையாளனாகிறது. மாறாக இருந்தால்‌, அவைகளுக்கு அது (உயிர்‌) அடிமையாகிறது.
3.2.1. உடலைநெறிப்படுத்துவது எப்படி?
உடலின்‌ வசத்தில்‌ நாம்‌ இருக்கக்‌ கூடாது. நம்‌ வசத்தில்‌ உடல்‌ இருக்க வேண்டும்‌. கடவுள்‌ நமக்குக்‌ கொடுத்திருக்கும்‌ சுதந்திரத்தை நன்கு பயன்படுத்தி, முயற்சித்துச்‌ சரீரத்தை நம்‌ வசப்படுத்த வேண்டும்‌. உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய உணவைக்‌ கொடுத்து, தேவையான உடற்பயிற்சியைக்‌ கொடுத்து, உடலை நம்‌ வசத்தில்‌ வைத்திருக்க வேண்டும்‌. தேவையான போது அதற்கு ஓய்வு அளித்து, தேவையான போது, அதனைச்‌ செயல்புரிய வைக்க வேண்டும்‌.
உடம்பார்‌ அழியின்‌ உயிரார்‌ அழிவர்‌
திடம்பட மெய்ஞானமும்‌ சேரவும்‌ மாட்டார்‌
உடம்பினை வளர்க்கும்‌ உபாயம்‌ அறிந்தேன்‌
உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே
என்று பாடினார்‌ திருமூலர்‌.
உடல்‌ சரியாக இருந்தால்தான்‌ ஆன்மிக ஸாதனைகளைச்‌ செய்ய முடியும்‌. உடம்பு நன்றாக இல்லையென்றால்‌, படிக்க முடியாது, ஸாதனை செய்ய முடியாது, எங்கு ஞானத்தில்‌ உறுதி பெறுவது ? உடம்பைச்‌ சரி செய்வதற்கே நேரம்‌ சரியாகப்‌ போய்விடும்‌. உடம்பினைப்‌ பாதுகாத்து, உயிரானது ஸாதனை செய்து, திடமான ஞானத்தைப்‌ பெற வேண்டும்‌.
இந்த சரீரம்‌ அழியக்கூடியது, மாம்ஸ பிண்டம்‌ என்பதெல்லாம்‌ உண்மைதான்‌. அவையெல்லாம்‌ நமக்குப்‌ பற்றற்ற தன்மை வர வேண்டும்‌ என்பதற்காகக்‌ கூறப்பட்டது.
அதற்காக உடலைக்‌ காப்பாற்றக்‌ கூடாது என்று பொருளல்ல. அதனைக்‌ காப்பாற்றுவதும்‌, அதில்‌ பற்றில்லாமல்‌ இருப்பதும்‌ நம்‌ கடமை.
உடலைக்கட்டு, உயிரைக்‌ கட்டலாம்‌.
உயிரைக்‌ கட்டு, உள்ளத்தைக்‌ கட்டலாம்‌.
உள்ளத்தைக்‌ கட்டு, சக்தியைக்‌ கட்டலாம்.
என்றார்‌ மஹாகவி பாரதியார்‌.
3.2.2. பொறிகளை நெறிப்படுத்துவது எப்படி?
ஐம்பொறிகளாகிய குதிரைகள்‌ ஐம்புலன்களின்‌ வழியே உடலை இழுத்துச்‌ செல்கின்றன.
ஐம்பொறிகளை நெறிப்படுத்த வேண்டுமானால்‌, அறநூல்களில்‌ எதைப்‌ பார்க்க வேண்டும்‌ என்று சொல்லியிருக்கிறதோ, எதைக்‌ கேட்க வேண்டும்‌ என்று சொல்லியிருக்கிறதோ, எதைச்‌ சுவைக்க வேண்டும்‌ என்று சொல்லியிருக்கிறதோ, எதை முகர வேண்டும்‌ என்று சொல்லியிருக்கிறதோ, எதைத்‌ தொட்டுணர வேண்டும்‌ என்று சொல்லியிருக்கிறதோ, அவற்றையே நுகர வேண்டும்‌.
தர்ம சாஸ்த்ரங்கள்‌ புலனின்ப விஷயங்களை தர்மமானவை, அதர்மமானவை என்று பிரித்திருக்கின்றன. அவற்றுள்‌, அதர்மமான விஷயங்களை அனுபவிக்கக்‌ கூடாது, தர்மமான விஷயங்களை அனுபவிக்கலாம்‌.
பொதுவாக எதை அதர்மம்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றனவோ, அதில்தான்‌ பொறிகள்‌ செல்லுகின்றன, அது அதன்‌ இயல்பு. அவற்றை தர்மமான விஷயங்களில்‌ செயல்படுத்தப்‌ பழக்க வேண்டும்‌.
பகவான்‌ இந்த்ரியங்களைக்‌ கொடுத்திருப்பது உலகை அனுபவிப்பதற்காகத்தான்‌. ஆனால்‌ தர்மமாக அனுபவிக்க வேண்டும்‌. தர்மமாக அனுபவித்தால்‌, அது நம்‌ கட்டுப்பாட்டில்‌ இருக்கிறது. அதர்மமாக அனுபவித்தால்‌, அது நம்‌ கட்டுப்பாட்டில்‌ இல்லை.
இந்த்ரியங்களை வசப்படுத்துவதற்கு ஸம்ஸ்க்ருதத்தில்‌ தம: என்றும்‌, தமிழில்‌ புலனடக்கம்‌ என்றும்‌ பெயர்‌.
ஒருமையுள்‌ ஆமைபோல்‌ ஐந்தடக்கல்‌
ஆற்றின்‌ எழுமையும்‌ ஏமாப்பு உடைத்து
என்றார்‌ திருவள்ளுவர்‌.
ஆமை ஆபத்து வரும்போது, தன்‌ அவயவங்களை உள்‌ இழுத்துக்‌ கொள்கிறது. அதன்‌ ஓட்டின்மீது பெரிய பாறாங்கல்லைப்‌ போட்டால்கூட, ஒன்றும்‌ ஆவதில்லை. அதுபோல, நாமும்‌ அதர்மமான விஷயங்கள்‌ வரும்போது, பகுத்தறிவின்‌ துணைகொண்டு, உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும்‌. பகுத்தறிவு என்பதுதான்‌ ஓடு. ஆக, இந்த்ரியங்களைப்‌ புலனடக்கப்‌ பயிற்சியால்‌ வசப்படுத்த வேண்டும்‌.
3.2.8. மனதை நெறிப்படுத்துவது எப்படி?
மனதின்‌ இயல்பே அலைபாய்ந்துகொண்டிருத்தல்தான்‌. உள்ளத்தில்‌, உயிருக்கு உயிரான இறைவனை ஆழ்ந்து எண்ணி, த்யானம்‌ செய்வதன்‌ மூலம்‌ மனதை நெறிப்படுத்தி, வசப்படுத்த முடியும்‌.
இந்த்ரிய விஷயங்களில்‌ உள்ள குற்றங்களைச்‌ சிந்தித்து, மனதைக்‌ கட்டுப்படுத்த வேண்டும்‌.
பெரும்பாலும்‌ விஷயங்களின்‌ பிடியில்‌ சிக்கியிருக்கும்‌ மனதை, ஜபம்‌, த்யானம்‌ முதலிய ஸாதனைகளின்‌ மூலம்‌ கட்டுப்படுத்த முடியும்‌.
8.2.4. புத்தியை நெறிப்படுத்துவது எப்படி ?
புத்தி எதையும்‌ நியாயப்படுத்தும்‌ இயல்புடையது. அவர்கள்‌ அப்படிச்‌ செய்யவில்லையா, இப்படிச்‌ செய்யவில்லையா என்று பல நியாயங்களைக்‌ கற்பித்து, நம்‌ புத்தியே நம்மை ஏமாற்றும்‌. அநியாயத்தை நியாயப்படுத்தும்‌. புத்திக்கு தர்ம சாஸ்த்ர ஞானத்தைக்‌ கொடுத்து, விவேகத்தினால்‌ புத்தியை வசப்படுத்த வேண்டும்‌.
உணவையும்‌ உடற்பயிற்சியையும்‌ முறையாகக்‌ கொடுப்பதன்‌ மூலம்‌ உடலை வசப்படுத்த வேண்டும்‌. அறநூல்களில்‌ கூறப்பட்டுள்ளபடி, புலனின்பங்களைத்‌ துய்ப்பதன்‌ மூலம்‌ பொறிகளை வசப்படுத்த வேண்டும்‌. உருவக்‌ கடவுளை ஆழ்ந்து எண்ணுவதன்‌ மூலம்‌ மனதை வசப்படுத்த வேண்டும்‌. அறநூல்களின்‌ துணைகொண்டு, பகுத்தறிவினால்‌ புத்தியை வசப்படுத்த வேண்டும்‌.
தர்ம சாஸ்த்ரப்படி வாழத்‌ தொடங்கிவிட்டால்‌, அனைத்தும்‌ வசமாகும்‌. அனுபவிக்கும்‌ விஷயங்களில்‌ ஹிதம்‌, மிதம்‌ வேண்டும்‌. கடுமையான தவமும்‌ தேவையில்லை. யதா சாஸ்த்ரம்‌ தப: என்பார்‌ ஆதிசங்கரர்‌. மிகக்‌ கடுமையாகச்‌ செய்தால்‌ சரீரம்‌ தாங்காது.
ஓர்‌ இசைக்‌ கச்சேரியில்‌, பாடகர்‌ எந்த ராகத்தில்‌ பாடுகிறாரோ, அதே ராகத்தில்தான்‌ வயலின்‌ வாசிக்க வேண்டும்‌, அதற்குத்‌ தகுந்த தாளத்தில்தான்‌ மிருதங்கம்‌ வாசிப்பவர்‌ வாசிக்க வேண்டும்‌.
அதுபோல்‌, உடல்‌, இந்த்ரியங்கள்‌, மனம்‌, புத்தி - இவை அனைத்தும்‌ இணைந்து செயலாற்ற வேண்டும்‌. எல்லாம்‌ ஒரே நேரத்தில்‌ நமக்கு உதவிசெய்ய வேண்டும்‌. ஒத்துழைக்க வேண்டும்‌.
விழிப்புணர்வுள்ள எந்த மனிதன்‌, தன்‌ உடலையும்‌, பொறிகளையும்‌, உள்ளத்தையும்‌, புத்தியையும்‌ தன்‌ கட்டுப்பாட்டில்‌ வைத்திருக்கிறானோ, அவனால்‌ மட்டுமே, இந்தப்‌ பாதையின்‌ முடிவாகிய அந்தக்‌ குறிக்கோளை, அழியாத அந்த இன்பத்தை நிச்சயமாக அடைய முடியும்‌ (உணர இயலும்‌).
அடுத்த ச்லோகத்தில்‌ ஆசிரியர்‌ மோக்ஷத்தையும்‌, அதனை அடைவற்குரிய ஸாதனமாகிய மெய்யறிவையும்‌ அறிமுகப்படுத்துகிறார்‌.
ஶ்லோகம்‌ 3
प्राप्यं तत्परमं सुखं हि मुनय: मोक्षं समाचक्षते
जीवेशानजगद्विशेषरहितं ज्ञानैकसाध्यं ध्रुवम्।
येनात्मन्यतिरोहित: स्वमहिमानन्दात्मको भासते
मिथ्याध्यासमतिश्च येन गलति ज्ञानं तदेवामलम्॥ 4
ப்ராப்யம் தத்பரமம் ஸும் ஹி முநய: மோக்ஷம் ஸமாசக்ஷதே
ஜீவேஶாநஜத்விஶேஷரஹிதம் ஜ்ஞாநைகஸாத்யம் த்ருவம்।
யேநாத்மந்யதிரோஹித: ஸ்வமஹிமாநந்தாத்மகோ பாஸதே
மித்யாத்யாஸமதிஶ்ச யேந லதி ஜ்ஞாநம் ததேவாமலம்॥ 4
பதவுரை
முநய: - முனிவர்கள்‌, ப்ராப்யம்‌ - அடையப்பட வேண்டிய, (தத்‌ பரமம்‌ ஸுகம்‌ ஹி - அந்த மேலான இன்பத்தை, ஜ்ஞாநைகஸாத்யம்‌ - மெய்யறிவு ஒன்றால்‌ மட்டுமே அடையத்தக்க, ஜீவேஸாநஜகத்வியோஷரஹிதம்‌ - ஜீவன்‌-ஈச்வரன்‌-உலகம்‌ என்ற வேற்றுமைகள்‌ அற்ற, த்ருவம்‌ - நிலையான, மோக்ஷம்‌ - மோக்ஷம்‌ (என்று), ஸமாசக்ஷதே - நன்கு பகர்ந்துள்ளார்கள்‌. யேந - எதனால்‌, ஆத்மநி- உள்ளத்தில்‌, அதிரோஹித: - மறைவின்றி, ஸ்வமஹிமா - தனது பெருமைபொருந்திய, ஆநந்தாத்மகோ பாஸதே - ஆனந்த வடிவமானது விளங்குகிறதோ, யேந - எதனால்‌, மித்யா அத்யாஸ மதிஸ்ச - தவறான கற்பனை எண்ணங்களானவை, கலதி - விழுங்கப்படுகின்றனவோ, தத்‌- அது, அமலம்‌ - குற்றமற்ற, ஞாநம்‌ ஏவ - அறிவாகும்‌.
பொழிப்புரை
முனிவர்கள்‌ அடையப்பட வேண்டிய அந்த மேலான இன்பத்தை, மெய்யறிவு ஒன்றால்‌ மட்டுமே அடையத்தக்க, ஜீவன்‌-ஈச்வரன்‌-உலகம்‌ என்ற வேற்றுமைகள்‌ அற்ற, நிலையான, மோக்ஷம்‌ (என்று) நன்கு பகர்ந்துள்ளார்கள்‌! எதனால்‌, உள்ளத்தில்‌ மறைவின்றி தனது பெருமைபொருந்திய ஆனந்த வடிவமானது விளங்குகிறதோ, எதனால்‌, தவறான கற்பனை எண்ணங்களானவை, விழுங்கப்படுகின்றனவோ, அது குற்றமற்ற அறிவாகும்‌.
விளக்கவுரை
ஸாுவிமலம்‌ நித்யாநந்த ஸுகம்‌, ஸெளக்யபதவீ, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌, ஸுககநம்‌ பதம்‌ என்றெல்லாம்‌ சொல்லப்பட்ட அந்த மேலான இன்பத்தைத்தான்‌ மோக்ஷம்‌ என்று முனிவர்கள்‌ கூறுகிறார்கள்‌.
மெளனமாக இருப்பதால்‌ முனிவர்‌; நன்கு தத்துவக்‌ கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதால்‌ முனிவர்‌; என முநி: என்ற சொல்லுக்கு இரண்டுவிதமாகப்‌ பொருள்கூறலாம்‌.
ஆசிரியர்‌ இதுவரை ஆநந்தம்‌, ஸுகம்‌ போன்ற சொற்களையே பயன்படுத்தினார்‌. இதைத்தான்‌ பெரியவர்கள்‌ மோக்ஷம்‌ என்று சொல்கிறார்கள்‌ என்று கூறி, மோக்ஷம்‌ என்ற சொல்லை இங்குதான்‌ அறிமுகப்படுத்துகிறார்‌.
4.1. அறிவுபூர்வமான பயணம்‌
நிலைத்த பேரின்பத்தை அடைய மேற்கொள்ளப்படுகின்ற இந்தப்‌ பயணமானது, உண்மையில்‌ ஓரிடத்திலிருந்து மற்றோர்‌ இடத்திற்குச்‌ செல்கின்ற பயணம்‌ போன்றது அல்ல.
ஆன்மிகச்‌ சிந்தனையாளர்கள்‌ சிலர்‌, ஜீவாத்மா பரமாத்மாவை விட்டுப்‌ பிரிந்து வெகுதூரம்‌ வந்துவிட்டான்‌ என்றும்‌, மீண்டும்‌ இறைவனை நோக்கிப்‌ போய்ச்‌ சேர வேண்டும்‌ என்றும்‌ கூறுகிறார்கள்‌. உண்மையில்‌ இறைவனை விட்டு நாம்‌ ஒருநாளும்‌ பிரிந்ததே இல்லை. பிரிந்ததாக நினைத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌, அவ்வளவே.
தவறுகள்‌ செய்பவனும்‌ இறைவனோடு சேர்ந்துதான்‌ இருக்கிறான்‌, நேர்மையாகவும்‌, நியாயமாகவும்‌ இருப்பவனும்‌ இறைவனோடு சேர்ந்துதான்‌ இருக்கிறான்‌. யாரும்‌ இறைவனை விட்டு ஒருபொழுதும்‌ பிரியவே முடியாது. அப்படிப்‌ பிரிந்ததாக நினைப்பது அறியாமை.
நாம்‌ ஓர்‌ அடி எடுத்து வைத்தால்‌, கடவுள்‌ பதினாறு அடி எடுத்து வைக்கிறார்‌ என்று சொல்கிறார்கள்‌. இறைவன்‌ நமக்கு அவ்வளவு தொலைவில்‌ இல்லை. நாம்‌ முயற்சி செய்தால்‌, விரைவில்‌ நமக்கு அருள்புரிவார்‌ என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்கள்‌.
உண்மையிலேயே இந்தப்‌ பயணம்‌ செயல்முறையிலான பயணமன்று. அறிவுபூர்வமான பயணம்‌. அறியாமையிலிருந்து அறிவுக்குச்‌ செல்லும்‌ பயணமே தவிர, கர்மரூபமான பயணம்‌ அல்ல.
கடவுளை அடைவது என்பது, இங்கிருந்து கேதாரநாத்திற்குச்‌ செல்வது போன்றது அல்ல. த்யானம்‌ செய்து, கடவுளை அடைவது என்பது கிடையாது. ஜீவாத்மா பரமாத்மாவை த்யானம்‌ செய்து செய்து, அவரருகில்‌ சென்று, பரமாத்மாவாக ஆகிவிடுகிறார்‌ என்பதும்‌ அன்று. பரமாத்மா ஓரிடத்தில்‌ இருப்பவர்‌ அல்ல, அவர்‌ எங்கும்‌ நிறைந்திருப்பவர்‌.
ஜீவனுடைய பயணத்தின்‌ குறிக்கோளாகிய மோக்ஷமானது, உடலால்‌ செய்யப்படும்‌ செயலாலோ, சொல்லால்‌ செய்யப்படும்‌ செயலாலோ, மனதால்‌ செய்யப்படும்‌ செயலாலோ அடையப்படுவதன்று.
4.2. அறிதலே அடைதல்‌
உடல்‌, மனம்‌, பொறிகள்‌ ஆகியவற்றை ஒழுங்குபடுத்தினால்‌, அந்த பேராநந்தத்தை அடையலாம்‌ என்று கூறுவதற்குப்‌ பொருள்‌ என்ன? இவற்றைச்‌ செய்தால்‌, ஏதோ ஒன்றை அடைவது போன்ற அனுபவம்‌ ஏற்படுமா? அப்படி அல்ல.
இப்படியெல்லாம்‌ செய்தால்‌, உண்மையிலேயே நாம்‌ பரமாத்ம ஸ்வரூபம்‌ என்ற மெய்யறிவு ஏற்படும்‌. இப்பொழுதே, இங்கேயே நான்‌ நிறைவான ஆநந்தமாக இருக்கிறேன்‌ என்ற தெளிந்த அறிவு ஏற்படும்‌.
நமக்குத்‌ துன்பமாக இருக்கிறது என்று சொல்லும்பொழுதும்‌ நாம்‌ இன்பமாகத்தான்‌ இருக்கிறோம்‌. துன்பம்‌ வந்திருக்கிறது, போய்விடும்‌. ஆநந்தம்‌ வருவதுமில்லை, போவதுமில்லை. உண்மையில்‌ ஆநந்தமாகத்தான்‌ நாம்‌ இருக்கிறோம்‌.
ஸாதனைகளைச்‌ செய்தால்‌, கடவுளை அடையலாம்‌ என்று சொல்கிறோம்‌. ஆனால்‌ உண்மையில்‌ ஸாதனைகளைச்‌ செய்யும்போதும்‌, கடவுளுடன்தான்‌ இருக்கிறோம்‌. ஸாதனையைத்‌ தொடங்காதபோதும்‌, ஸாதனையை முடித்த பிறகும்‌, கடவுளிடம்தான்‌ இருக்கிறோம்‌.
அப்படியென்றால்‌, ஸாதனைகள்‌ எதற்கு? கடவுள்‌ இருக்கிறார்‌ என்பதைப்‌ புரிந்துகொள்வதற்காக. ஸாதனைகளைச்‌ செய்யாத காலத்திலும்‌, ஸாதனைகளைச்‌ செய்கின்ற காலத்திலும்‌, ஸாதனைகள்‌ நிறைவேறிய காலத்திலும்‌, இறைவன்‌ நம்மை விட்டுப்‌ பிரியாமல்‌ இருக்கிறார்‌.
நாம்‌ பிரிந்ததாக நினைத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்‌. எண்ணத்தைத்தான்‌ மாற்றிக்கொள்கிறோம்‌, எதையும்‌ அடைவதில்லை.
கனவிலிருந்து விழிப்பிற்கு பயணம்‌ செய்கிறான்‌ என்று கவிதை நடையில்‌ சொல்லலாம்‌. உண்மையில்‌ அது பயணம்‌ அல்ல, விழித்தவுடன்‌ விழிப்புநிலை உணரப்படுகிறது, அவ்வளவுதான்‌. நிஜமாகவே பயணம்‌ அல்ல.
பேராநந்த வடிவமான பரம்பொருளாக நம்மை அறிந்துகொள்வதே, மோக்ஷத்தை அடைதலாகும்‌.
4.3. மோக்ஷத்திற்கு அடைமொழிகள்‌
4.3.1. ஜீவ ஈஸ்வர ஜகத்‌ விஶேஷ ரஹிதம்‌
ஜீவாத்மா, பரமாத்மா, உலகம்‌ என்ற வேற்றுமைகள்‌ இல்லாதது மோக்ஷம்‌
ஜீவேஸாநஜகத்விஸோஷரஹிதம்‌ என்றால்‌ அத்வைதம்‌ என்று பொருள்‌.
நாம்‌ இருக்கிறோம்‌, உலகம்‌ இருக்கிறது, கடவுள்‌ இருக்கிறார்‌. மூன்றுவிதமான பேதங்கள்‌ இருக்கின்றன என்று நாம்‌ நினைக்கிறோம்‌, நம்மை வேறாக நினைக்கிறோம்‌, உலகை நமக்கு வேறாக நினைக்கிறோம்‌, கடவுளை நமக்கு வேறாக நினைக்கிறோம்‌.
இவை மூன்றையும்‌ வேறுவேறாக நினைத்து, உலக விஷயங்களிலிருந்து வருகின்ற ஸுகம்‌, இறைவனை த்யானம்‌ செய்வதால்‌ ஏற்படுகின்ற ஸுகம்‌ என்று ஸுகத்தை வேறுபடுத்துகிறோம்‌. மோக்ஷம்‌ என்றால்‌ விஷயங்களை அனுபவிப்பதால்‌ வருகின்ற இன்பமல்ல, பக்தியினால்‌ வருகின்ற இன்பமும்‌ அல்ல.
பாராயணம்‌, ஜபம்‌ போன்ற ஸாதனைகளைச்‌ செய்வதாலும்‌, இஷ்ட தெய்வத்தை மனதில்‌ த்யானம்‌ செய்வதாலும்‌ ஏற்படுகின்ற ஸுகம்‌ மோக்ஷமல்ல. அதுவும்‌, மனதில்‌ புறப்பொருளாக எண்ணுவதால்தானே ஏற்படுகிறது? ஆகையினால்‌, விஷய ஸுகமும்‌, ஈச்வர த்யானத்தினால்‌ உண்டாகிற ஸுகமும்கூட அநித்யம்தான்‌.
இந்த ஆநந்தமானது இந்த்ரியங்களால்‌ அனுபவிக்கப்‌ படுவதல்ல, மனதினால்‌ அனுபவிக்கப்படுவதல்ல. வேற்றுமைகளற்ற, பிளவுபடாத பேரின்பமே மோக்ஷ ஆநந்தமாகும்‌.
4.3.2, ஜ்ஞாநைக ஸாத்யம்‌ மோக்ஷம்‌
மோக்ஷமானது அறிவு ஒன்றினால்‌ மட்டுமே அடையப்படுவதாகும்‌. அது எப்பொழுதும்‌ இருக்கின்ற காரணத்தினால்‌, இருப்பதைத்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌, அவ்வளவே.
முக்தி என்பது செயலால்‌ அடையப்படுவதன்று, அறிவால்‌ அறிந்துகொள்ளப்படுவது. இதனைச்‌ சொல்ல வேண்டிய அவசியம்‌ ஏன்‌ ஏற்பட்டது?
3 வது ச்லோகத்தில்‌ தேர்‌ இருக்கிறது, அதற்கு பாதை, குறிக்கோள்கள்‌ இருக்கின்றன என்றெல்லாம்‌ கூறினார்‌. உடல்தான்‌ தேர்‌, ஜீவாத்மா தான்‌ பயணி, இவன்‌ பரமாத்மாவாகிய குறிக்கோளைச்‌ சென்று அடைய வேண்டும்‌ என்று சொன்னவுடன்‌, என்னவோ செய்ய வேண்டும்‌ என்று தோன்றுகிறது.
அது மட்டுமல்ல, எவனொருவன்‌ இவைகளை முறையாக வைத்துக்‌ கொள்கிறானோ, அவனால்தான்‌ இதை அடைய முடியும்‌ என்று சொல்லப்பட்டது. அவற்றையெல்லாம்‌ கட்டுப்படுத்திவிட்டு, உள்ளதைத்‌ தெரிந்துகொள்ளத்தான்‌ முடியுமே தவிர, அடைவது ஒன்றுமில்லை. மோக்ஷமானது கர்மத்தினால்‌ தோன்றுவதன்று, அறிவினால்‌ அறிந்துகொள்ளப்படுவதாகும்‌. இது உண்மையிலேயே பயணமல்ல. அறியாமையிலிருந்து அறிவுக்குச்‌ செல்லும்‌ பயணம்‌ எனப்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌.
அறியாமையிலிருந்து அவர்‌ அறிவுக்குப்‌ பயணம்‌ செய்கிறார்‌ என்றால்‌ என்ன? முறையாக மெய்யறிவு நூல்களை முறையாகக்‌ கற்கிறார்‌ என்று பொருள்‌. கற்றால்தான்‌ அறிவு வரும்‌. கற்காமல்‌ அறிவு ஏற்படாது. கற்று ஈண்டுதான்‌ மெய்பொருள்‌ காண வேண்டும்‌. அடையப்படுமானால்‌, அது அழிந்துவிடும்‌. நான்‌ ஆநந்தமாக இருக்கிறேன்‌ என்று தெரிந்துகொள்ளத்தான்‌ முடியுமே தவிர, ஆநந்தத்தை ஏதாவது செய்து அடைய முடியாது.
இப்படிச்‌ சொல்லுவதன்‌ மூலம்‌, நூலாசிரியர்‌ பக்தி சாஸ்த்ரங்களில்‌ கூறப்பட்டுள்ள ஸாலோக, ஸாமீப, ஸாரூப, ஸாயுஜ்ய முக்திகளையெல்லாம்‌ நீக்குகிறார்‌.
கோயிலில்‌ பூக்களைப்‌ பறித்து, கோலம்‌ போட்டு, ஸ்வாமியின்‌ பரிவட்டத்தைத்‌ துவைத்துக்‌ கொண்டு தொண்டு செய்தால்‌, சிவலோகத்தில்‌ அல்லது வைகுண்டத்தில்‌ இடம்‌ பெறலாம்‌, அதற்கு. ஸாலோக முக்தி என்று பெயர்‌.
இறைவனுக்கு அருகில்‌ சென்று தொண்டு செய்யும்‌ வாய்ப்பைப்‌ பெறுவதற்கு ஸாமீப முக்தி என்று பெயர்‌.
இறைவனைப்‌ போன்றே நாமும்‌ சங்கு சக்ர கதை அல்லது சூலம்‌, ஜடாபாரம்‌, விபூதி முதலியவற்றோடு உருவம்‌ பெறுவதற்கு ஸாரூப முக்தி என்று பெயர்‌. இறைவனோடு இரண்டறக்‌ கலப்பதற்கு ஸாயுஜ்ய முக்தி என்று பெயர்‌.
இந்த முக்திகளை அடைய கர்மம்‌ செய்தாக வேண்டும்‌. த்யானம்‌, ஜபம்‌, ஸாதனை செய்தாக வேண்டும்‌.
இங்கு கூறப்படுவது, அதுபோன்ற முக்தி அல்ல. அது எங்கும்‌ நிறைந்திருக்கிறது, இங்கேயே இருக்கிறது.
ஸ்ருதி, யுக்தி, அனுபவத்தின்‌ துணைகொண்டு, அது நம்‌ ஸ்வரூபமாக இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்‌. இங்கேயே இப்பொழுதே அதுவாகத்தான்‌ நாம்‌ இருக்கிறோம்‌ என்று புரிந்துகொள்ள வேண்டும்‌.
மோக்ஷம்‌ என்பது அடையப்பட வேண்டியதாக இல்லாமல்‌, அடையப்பட்டதாகவே இருக்கிறது (already accomplished).
அறிந்துகொள்வதே மோக்ஷம்‌ என்பதுதான்‌ இதுவரை ஆராய்ந்ததின்‌ ஸாரம்‌.
ஆநந்தத்தை அடைய முடியாது, நானே ஆநந்தம்‌ என்று தெரிந்துகொள்வதுதான்‌ ஆநந்தம்‌. ஆநந்தத்தைத்‌ தேடுவதைவிட முட்டாள்தனம்‌ வேறில்லை என்று தெரிந்து கொள்வதும்‌ ஆநந்தம்தான்‌.
4.3.3. த்ருவம்‌ மோக்ஷம்‌.
மோக்ஷமாகிய பேரின்பம்‌ யாண்டும்‌ நிலைத்திருப்பது, என்றும்‌ அழியாதது.
4.4, மெய்யறிவின்‌ பயன்‌
மெய்யறிவின்‌ முக்கியமான பயன்கள்‌ இரண்டு.
  1. ஒன்று, நம்முடைய ஆநந்த ஸ்வரூபத்தை விளங்க வைக்கிறது. அத்வைத வேதாந்த நூல்களை, குருமுகமாக விசாரம்‌ செய்வதால்‌, மறைப்பு நீங்கி நானே ஆநந்த ஸ்வரூபம்‌ என்பது மனதில்‌ தெளிவாக விளங்குகிறது.
    தன்னுடைய மஹிமையே தன்‌ மனதில்‌ ப்ரகாசிக்கிறது. ஞானத்தினால்‌ தன்னுடைய ஸ்வரூபம்‌ நன்கு விளங்குகிறது.
  2. ஞானத்தின்‌ இரண்டாவது பயன்‌, அது கற்பனையான தவறான எண்ணத்தை விழுங்கிவிடுகிறது என்பதாகும்‌.
    இந்த உலகம்‌, மக்கள்‌, வாழ்க்கை, ஸுகம்‌, துக்கம்‌ எல்லாம்‌ உண்மை என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. அது வெறும்‌ தோற்றம்‌, உண்மையல்ல என்பதை ஞானம்‌ உணர்த்துகிறது.
    கனவு காணும்பொழுது, கனவு உண்மையாகத்தான்‌ தெரிகிறது. நனவிலும்‌, இவையெல்லாம்‌ உண்மையாகத்தான்‌ தெரிகிறது. மெய்யறிவு ஏற்பட்ட பிறகு, நனவும்‌ கனவைப்‌ போன்று ஒரு தோற்றமே என்பது விளங்குகிறது.
    நனவை உண்மை என்று நினைத்திருந்த தவறான எண்ணம்‌ மெய்யறிவினால்‌ விழுங்கப்படுகிறது.
    ஆக, ஞானத்தினால்‌ தவறான கற்பனை அழிகிறது, உண்மையான ஆநந்தம்‌ விளங்குகிறது.
4.5. மெய்யறிவின்‌ பெருமை
உலகில்‌ எத்தனையோ அறிவுத்துறைகள்‌ இருக்கின்றன. ஆனால்‌ மெய்யறிவு மட்டுமே குற்றமற்ற அறிவாகும்‌. நூலாசிரியர்‌ அதனை அமலம்‌ ஞானம்‌ என்று கூறுகிறார்‌.
மெய்பொருளைப்‌ பற்றிய மெய்யறிவு மட்டுமே குற்றமற்ற அறிவு. மற்றவையெல்லாம்‌ குறையோடு கூடிய அறிவாகும்‌.
எப்பொருள்‌ எத்தன்மைத்‌ தாயினும்‌ அப்பொருள்‌
மெய்பொருள்‌ காண்பது அறிவு
எப்பொருள்‌ எத்தன்மையதாய்த்‌ தோன்றினாலும்‌, (அத்தோற்றத்தை மட்டும்‌ கண்டு மயங்காமல்‌) அப்பொருளின்‌ உண்மையான இயல்பை அறிவதே மெய்‌ உணர்வாகும்‌ என்பது திருவள்ளுவரின்‌ பொய்யாமொழி.
உள்ளதை உள்ளவாறு பார்ப்பதுதான்‌ குறைவில்லாத ஞானம்‌.
அறிவியல்துறைகள்‌ அனைத்தும்‌ பொய்யை உண்மையாகக்‌ காட்டுகின்றன. வேதத்தின்‌ கர்ம காண்டம்‌, உபாஸனா காண்டம்‌ ஆகியவையும்‌ பொய்யை உண்மையென்று கூறுகின்றன. அது குறையோடு கூடிய ஞானம்தான்‌.
வேதாந்தத்திற்குள்‌ வந்தால்தான்‌, வேதத்தின்‌ கர்ம காண்டமும்‌, உபாஸனா காண்டமும்‌ குறைவோடு கூடிய ஞானத்தைத்‌ தருகின்றன என்பது விளங்கும்‌.
வேதத்தின்‌ கர்ம காண்டமும்‌, உபாஸனா காண்டமும்‌ குறையோடு கூடிய ஞானத்தைக்‌ கொடுத்தாலும்‌, குறைவில்லாத பொருளைப்‌ பற்றிய நிறைஞானத்தை அடைவதற்கு அவை உதவிபுரிகின்றன.
நாம்‌ வேறு, கடவுள்‌ வேறு, உலகம்‌ வேறு அல்ல. உலகையும்‌, நம்மையும்‌, கடவுளையும்‌ பிரிப்பது மாயையின்‌ வேலை.
தூய உணர்வின்மீதுதான்‌, உயிருக்கு உயிரான இறைவனும்‌, உயிர்களும்‌, உள்ளங்களும்‌, உடல்களும்‌, உலகங்களும்‌ மாயையால்‌ கற்பிக்கப்பட்டிருக்கின்றன என்ற பேருண்மையை விளங்க வைத்து, நம்மை மோக்ஷத்தில்‌ நிலைத்திருக்கச்‌ செய்வது மெய்யறிவே ஆகும்‌.
ஐந்தாவது ச்லோகத்திலிருந்து எட்டாவது ச்லோகம்‌ வரை, நிலையான பேரின்பத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ ஆன்மிக ஸாதனைகள்‌ படிப்படியாகக்‌ உபதேசிக்கப்படுகின்றன.
ஶ்லோகம்‌ 5
आस्तिक्यं दृढमूलमेव मनुज: सम्पादयत्वादित:
कर्माचारयुतस्ततश्च भवतु स्वर्गादिभोगेच्छया।
स्वर्गादावपि च क्रमेण गमितो नैराश्यमेवास्थिरे
नित्यानित्यविचारणे स्वधिकृतस्तत्वं समन्विच्छतु॥ 5
ஆஸ்திக்யம் த்மூலமேவ மநுஜ: ஸம்பாயத்வாதித:
கர்மாசாரயுதஸ்ததஶ்ச வது ஸ்வர்காதிபோகேச்யா।
ஸ்வர்காதாவபி ச க்ரமேண மிதோ நைராஶ்யமேவாஸ்திரே
நித்யாநித்யவிசாரணே ஸ்வதிக்தஸ்தத்வம் ஸமந்விச்து॥ 5
பதவுரை
மநுஜ: - மனிதன்‌, ஆதித: - முதலில்‌, த்ருடமூலம்‌ - நன்கு உறுதியான, ஆஸ்திக்யம்‌ - (வேதத்தில்‌) நம்பிக்கையை, ஸம்பாதயது ஏவ - பெற்றே ஆக வேண்டும்‌. ததஸ்ச - பிறகு, ஸ்வர்காதிபோகேச்சயா - விண்ணுலகம்‌ முதலான இன்பப்பொருள்‌ நுகர்ச்சியை விரும்பி, கர்மாசாரயுத: - முறைப்படி செயல்களைச்‌ செய்பவனாக, பவது - விளங்கட்டும்‌.
க்ரமேண ச - பிறகு காலப்போக்கில்‌, அஸ்திரே - நிலையில்லாத, ஸ்வர்காதெள அபி - விண்ணுலகம்‌ முதலானவைகளிலும்‌, நைராஸ்யம்‌ கமி: - ஆசையை அகற்றியவனாய்‌, நித்யாநித்யவிசாரணே - நிலைத்தது எது, நிலையில்லாதது எது என்கிற ஆராய்ச்சியில்‌, ஸ்வதிக்ருத: - ஆழ்ந்த ஈடுபாடு உடையவனாய்‌, தத்வம்‌ - மெய்பொருளை, ஸமந்விச்சது - நன்கு தேடுவதற்கு விரும்பட்டும்‌.
பொழிப்புரை
மனிதன்‌ முதலில்‌ நன்கு உறுதியான, (வேதத்தில்‌) நம்பிக்கையைப்‌ பெற்றே ஆக வேண்டும்‌. பிறகு, விண்ணுலகம்‌ முதலான இன்பப்பொருள்‌ நுகர்ச்சியை விரும்பி முறைப்படி செயல்களைச்‌ செய்பவனாக விளங்கட்டும்‌.
பிறகு காலப்போக்கில்‌ நிலையில்லாத, விண்ணுலகம்‌ முதலானவைகளிலும்‌ ஆசையை அகற்றியவனாய்‌, நிலைத்தது எது, நிலையில்லாதது எது என்கிற ஆராய்ச்சியில்‌ ஆழ்ந்த ஈடுபாடு உடையவனாய்‌ மெய்பொருளை நன்கு தேடுவதற்கு விரும்பட்டும்‌.
விளக்கவுரை
மநுஜ: என்ற சொல்லுக்கு, மனுவின்‌ வழித்தோன்றல்‌ என்றும்‌ ஒரு பொருள்‌. இப்படி வாழ வேண்டும்‌, இப்படி வாழக்‌ கூடாது என்று மனுவானவர்‌, தர்ம சாஸ்த்ரத்தின்‌ மூலம்‌ வழிவகுத்துக்‌ கொடுத்திருக்கிறார்‌.
5.1. வேதங்களில்‌ நம்பிக்கை
வேதம்‌ என்றால்‌ அறிவுநூல்‌ என்று பொருள்‌. கண்ணுக்கும்‌ கருத்துக்கும்‌ எட்டாத, வாழ்க்கைக்குப்‌ பயனுள்ள பல கருத்துக்களை வேதங்கள்‌ நமக்கு எடுத்துக்‌ கூறுகின்றன.
அதனை ரிஷிகள்‌ நமக்கு அருளியிருக்கிறார்கள்‌. வேதத்தில்தான்‌ எது தர்மம்‌, எது அதர்மம்‌ என்பது சொல்லப்பட்டிருக்கிறது. தத்துவங்கள்‌ கூறப்பட்டிருக்கின்றன. கடவுள்‌, புண்ய பாபம்‌, ஸ்வர்கம்‌ நரகம்‌, மறுபிறவி முதலிய பல விஷயங்களை நாம்‌ வேதத்தின்‌ வாயிலாகத்தான்‌ அறிந்துகொள்கிறோம்‌.
புண்யம்‌, பாபம்‌, ஸ்வர்கம்‌, நரகம்‌ முதலியவை இருக்கின்றன. தவறு செய்தால்‌ தண்டனையும்‌, நல்லது செய்தால்‌ அதற்குரிய பயனும்‌ கிடைக்கும்‌ என்ற நம்பிக்கைக்குப்‌ பெயர்‌ ஆஸ்திக்யம்‌.
அஸ்தி என்றால்‌ இருக்கிறது என்று பொருள்‌. இறைவன்‌ இருக்கிறார்‌ என்று ஏற்றுக்கொள்வதற்குப்‌ பெயர்‌ ஆஸ்திக்யம்‌.
இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு ஆஸ்திக்யம்‌ என்று பெயர்‌. நமக்குப்‌ புரியாவிட்டாலும்‌, அது உண்மைதான்‌ என்ற நம்பிக்கைக்குப்‌ பெயர்‌ ஆஸ்திக்யம்‌.
நம்பிக்கையற்றவர்கள்‌ ஏதேதோ சொல்வார்கள்‌. மூளைச்சலவை என்பார்கள்‌, கட்டுக்கதை என்பார்கள்‌. நம்‌ நம்பிக்கையைக்‌ குலைக்க முயற்சி செய்வார்கள்‌.
மக்களுக்கு இயல்பாகவே தவறு செய்வதில்‌ நாட்டம்‌ இருக்கிறது. தவறு செய்யக்கூடாது, செய்தால்‌ இந்த தண்டனை கிடைக்கும்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. அதெல்லாம்‌ சும்மா, நான்‌ எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன்‌ என்று சொல்வார்கள்‌. நமக்கு இருக்கின்ற அரைகுறை நம்பிக்கையை அசைத்துப்‌ பார்ப்பார்கள்‌.
“வேதமானது எண்ணற்றத்‌ தாய்‌, தந்‌தையரைக்‌ காட்டிலும்‌ கருணையோடு நமக்கு நன்மையை மட்டுமே உபதேசித்து அருளுகிறது. அஹங்காரத்தை விட்டு அதுகூறும்‌ கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌" என்று ஆதிசங்கரர்‌ கூறியிருக்கிறார்‌.
நமக்கு சாஸ்த்ரங்களில்‌ அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை வேண்டும்‌. நூலாசிரியர்‌ உலகம்‌ அறிந்தவர்‌. அவர்‌ இதன்‌ முக்கியத்துவத்தை அறிந்து சொல்கிறார்‌.
த்ருடமூலம்‌ என்றால்‌ சாஸ்த்ரத்தில்‌ வைத்துள்ள ச்ரத்தை வேர்‌ பிடிக்க வேண்டும்‌ என்று பொருள்‌. சாஸ்த்ரக்‌ கருத்துக்கள்‌ உள்ளத்தில்‌ நன்கு ஊறிமிருக்க வேண்டும்‌, உறுதியாக இருக்க வேண்டும்‌. மரத்தை வேர்‌ தாங்குவதுபோல்‌, மதநூல்களில்‌ உள்ள நம்பிக்கை ஆன்மிக வாழ்க்கையைத்‌ தாங்கியிருக்கிறது. மதநூல்களில்‌ நம்பிக்கை இல்லையென்றால்‌, ஆன்மிக வாழ்க்கையில்‌ வெறுமைதான்‌ மிஞ்சும்‌.
அடிக்கடி மனம்‌ துன்பப்படும்‌. எனவே சாஸ்த்ரத்தில்‌ ச்ரத்தையானது ஆழ்ந்து பற்றப்பட்டிருக்க வேண்டும்‌.
வேதங்களின்‌ கருத்துக்களை புரியாமல்‌ ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏற்றுக்கொள்ளத்‌ தேவையில்லை என்பதால்‌, அதைத்‌ தவறு என்று நிராகரிக்கவும்‌ கூடாது. கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும்‌ கூடாது, நிராகரிக்கவும்‌ நமக்கு அதிகாரம்‌ இல்லை.
ஏன்‌ நிராகரிக்கக்‌ கூடாது ?
நம்‌ அறிவு சிற்றறிவு. உயர்ந்த அரிய பெரிய விஷயங்களை உடனே புரிந்துகொள்ளும்‌ ஆற்றல்‌ நம்‌ மனதிற்கு இல்லை. அதனால்‌ நிராகரிக்கக்‌ கூடாது.
ஏன்‌ கண்மூடித்தனமாக ஏற்றுக்‌ கொள்ளக்கூடாது ?
கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதால்‌, அதில்‌ அறிவுபூர்வமான முழுமையான பிடிப்பு இருக்காது. அவ்வப்போது சந்தேகம்‌ வரும்‌. வந்தால்‌ விட்டுவிடலாம்‌ எனத்‌ தோன்றும்‌.
சாஸ்த்ரம்‌ மிக உயர்ந்தது, தெய்விகமானது, எத்தனையோ ரிஷிகளால்‌ உபதேசிக்கப்பட்டது. அநாதி காலமாக இருந்து வருகிறது. அதில்‌ சில விஷயங்கள்‌ நமக்குப்‌ புரியவில்லை. புரியவில்லை என்றாலும்‌, நாம்‌ அதை மதித்து, நன்றாகச்‌ சிந்தித்து அதனைப்‌ புரிந்துகொள்வதற்கு முயற்சிப்பதற்குப்‌ பெயர்‌ ச்ரத்தை.
இறைவன்‌ இருக்கிறார்‌, வினைப்பயன்‌ இருக்கிறது, நித்யமான மோக்ஷம்‌ என்ற ஒன்று இருக்கிறது என்பதுபோன்ற அரிய பெரிய விஷயங்களை சாஸ்த்ரம்‌ கூறுகிறது. அவை இருக்கிறதா, இல்லையா என்பதுபற்றி நமக்கு சந்தேகம்‌ எழக்கூடாது.
வேதங்களை அறிவைத்‌ தரும்‌ கருவியாக, ப்ரமாணமாக நாம்‌ ஏற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌. கண்ணை ஏற்றுக்கொள்வதால்தான்‌, கண்‌ காட்டுகின்ற நிறத்தைப்‌ பற்றிய அறிவை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறோம்‌.
ஒன்றை ப்ரமாணம்‌ என்று ஏற்றுக்கொள்வதாலேயே, அந்த ப்ரமாணம்‌ காட்டுகின்ற பொருள்‌ இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறோம்‌. அதே போன்று, சாஸ்த்ரம்‌ சப்த ப்ரமாணம்‌. அவை கூறும்‌ விஷயங்களை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. முதலில்‌ ச்ரத்தையை வளர்த்துக்கொள்ள வேண்டும்‌. ச்ரத்தை இல்லையென்றால்‌, ஆன்மிக வாழ்வில்‌ அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. ச்ரத்தை என்பது மிக மிக முக்கியம்‌.
ஸ்ரத்தாவாந்‌ லபதேஜ்ஞாநம்‌।
ச்ரத்தை உடையவனே மெய்யறிவைப்‌ பெறுவான்‌ என்று பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ணர்‌ கீதையில்‌ கூறுகிறார்‌. வேதக்‌ கருத்துக்களை உள்வாங்கிக்‌ கொள்வதற்காகவும்‌, வேதத்தில்‌ ச்ரத்தையை 'வளர்த்துக்கொள்வதற்காகவும்‌ ஏற்படுத்தப்பட்டதுதான்‌ ப்ரஹ்மசர்ய ஆச்ரமம்‌ அல்லது மாணவப்‌ பருவம்‌.
சாஸ்த்ரத்தில்‌ ச்ரத்தை இருக்கிறது என்று சொன்னால்‌ மட்டும்‌ போதாது, அதில்‌ கூறப்படுகின்ற தர்மங்களைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌.
5.2. இன்பத்தில்‌ ஆசையோடு, கர்மங்களை முறையாகச்‌ செய்தல்‌
உலகில்‌ எல்லோருக்கும்‌ ஏதாவது ஒரு பொருளைச்‌ சார்ந்திருந்து இன்பமாக இருக்க வேண்டும்‌ என்ற எண்ணம்‌ இருக்கிறது.
உலக இன்பங்களை விரும்புவது மனிதனின்‌ இயல்பு. சாஸ்த்ரம்‌ அந்த இயல்பை ஏற்றுக்கொண்டு, அதனை முறைப்படுத்துகிறது. இயல்புக்கு மாறாகச்‌ சென்றால்‌, கஷ்டப்பட வேண்டியிருக்கும்‌. அப்படி சாஸ்த்ரம்‌ உபதேசிக்கவில்லை. இயல்பை ஒழுங்குபடுத்த வேண்டும்‌ என்று சொல்கிறது.
சாஸ்த்ரம்‌ ப்ராக்ருதமான மனிதனை ஸம்ஸ்க்ருதமாக்குகிறது. தன்‌ மனம்‌ போனபடி வாழ்கின்ற மனிதனைப்‌ பண்படுத்துகிறது.
த்ஶம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்தேர்ஜ்ஞாநவாநபி ।
ப்ரக்திம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி ॥ 3-33॥
(ஸ்ரீமத்பகவத்கீதை : 3-33)
உயிர்களும்‌ தம்‌ இயல்பின்‌ போக்கிலேயே இயங்குகின்றன. அறிவாளியும்‌ கூட தன்‌ இயல்புப்படிதான்‌ நடக்கிறான்‌. தடை செய்வதால்‌ ஆவதென்ன ? என்று கேட்கிறார்‌ பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ண்‌.
இந்த்ரியங்கள்‌ இயல்பாகவே புறநோக்குடன்‌ படைக்கப்‌ பட்டிருக்கின்றன. அளவுக்கு அதிகமாக அவற்றைக்‌ கட்டுப்படுத்த முடியாது.
அப்படியானால்‌, மனம்‌ போன போக்கில்‌ வாழலாமா? என்று கேட்டால்‌, அவ்வாறு வாழக்‌ கூடாது, விருப்பு வெறுப்பைக்‌ களைந்து, இந்த்ரியங்களை நம்‌ வசப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ பகவான்‌ கீதையில்‌ உபதேசித்திருக்கிறார்‌.
ஒழுக்கமாக வாழ்வதே முதல்‌ தர்மம்‌.
ஒழுக்கம்‌ விழுப்பம்‌ தரலான்‌ ஒழுக்கம்‌
உயிரினும்‌ ஓம்பப்‌ படும்‌. (திருக்குறள்‌ : 131)
என்றார்‌ திருவள்ளுவர்‌.
ஆசாரம்‌ (ஒழுக்கம்‌) இருந்தால்தான்‌ தர்மமாக ஸுகத்தை அனுபவிக்க முடியும்‌.
சாஸ்த்ரங்கள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு என நான்கு உறுதிப்பொருட்களைக்‌ கூறியிருக்கின்றன.
அறத்தை வைத்துத்தான்‌ பொருளையோ, இன்பத்தையோ அனுபவிக்க முடியும்‌. “அறத்தான்‌ வருவதே இன்பம்‌” என்றார்‌ திருவள்ளுவர்‌.
அறத்தை முறையாகக்‌ கடைப்பிடிப்பதற்கென்று சாஸ்த்ரங்களில்‌ நித்ய, நைமித்திக கர்மங்கள்‌ விதிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா கர்மங்களுக்கும்‌ இவையே அடிப்படை. இவற்றைச்‌ செய்யாமல்‌ வேறு எந்த கர்மங்களையும்‌ செய்வதற்கு ஒருவருக்கு அதிகாரம்‌ இல்லை.
5.2.1. நித்ய கர்மங்கள்‌
நித்ய கர்மங்கள்‌ என்றால்‌, நாள்தோறும்‌ செய்ய வேண்டிய கர்மங்கள்‌ என்று பொருளல்ல. நிச்சயமாகச்‌ செய்ய வேண்டியவை என்று பொருள்‌. இதனை நியத கர்மம்‌ எனவும்‌ கூறுவர்‌.
நாள்தோறும்‌ செய்ய வேண்டியவை, ஒரு வாரத்திற்கொரு முறை செய்ய வேண்டியவை, பதினைந்து நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டியவை, ஒரு மாதத்திற்கு ஒரு முறை செய்வது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்வது, வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டியவை அனைத்தும்‌ நித்ய கர்மம்‌ எனப்படும்‌.
காலையிலும்‌ மாலையிலும்‌ கடவுளை வணங்குவது, அமாவாஸ்யை அன்று தர்ப்பணம்‌ செய்வது, சிவராத்ரீ வ்ரதம்‌ முதலியவை அனைத்தும்‌ நித்ய கர்மத்தில்‌ அடங்கும்‌.
5.2.2. நைமித்திக கர்மங்கள்‌
ஒரு மனிதனின்‌ வாழ்வில்‌ குறிப்பிட்ட தருணங்களில்‌ செய்யப்படுபவை நைமித்திக கர்மங்கள்‌ ஆகும்‌. குழந்தை பிறத்தல்‌, திருமணம்‌ முதலியவற்றின்போது செய்யப்படும்‌ சடங்குகள்‌, க்ரஹண காலத்தில்‌ செய்ய வேண்டியவை அனைத்தும்‌ நைமித்திக கர்மங்கள்‌ ஆகும்‌.
வேதத்தில்‌ நம்பிக்கை உள்ள மனிதன்‌, நித்ய நைமித்திக கர்மங்களை ஒருபொழுதும்‌ விடக்கூடாது. அவனுக்கு உலக இன்பங்களில்‌ நாட்டம்‌ இருந்தாலும்‌, இல்லாவிட்டாலும்‌ விடக்கூடாது. இஷ்டம்‌ இருந்தாலும்‌, இல்லாவிட்டாலும்‌ செய்துதான்‌ ஆக வேண்டும்‌. செய்ய மாட்டேன்‌ என்று சொல்ல நமக்கு அதிகாரம்‌ இல்லை. துறவறம்‌ ஏற்றால்தான்‌ விடலாம்‌.
நான்கு புருஷார்த்தங்களில்‌ அறம்‌ எனப்படும்‌ புண்யத்தைப்‌ பெறுவதற்காக நித்ய நைமித்திக கர்மங்களைச்‌ செய்ய வேண்டும்‌.
5.2.3. காம்ய கர்மம்‌.
உலகில்‌ ஏதேனும்‌ பொருட்களை, உறவுகளை அடைய வேண்டும்‌. என்ற ஆசை இருந்தால்‌, அதற்காகச்‌ செய்யப்படுபவை காம்ய கர்மம்‌ எனப்படும்‌. இதனைச்‌ செய்துதான்‌ ஆக வேண்டும்‌ என்று கட்டாயமில்லை. தேவைப்பட்டால்‌ செய்யலாம்‌.
புத்ரகாமேஷ்டி யாகம்‌ எல்லோரும்‌ செய்ய வேண்டும்‌ என்று விதி இல்லை. யாருக்கு புத்ரன்‌ வேண்டுமோ அவர்கள்‌ செய்யலாம்‌.
ஆசையை முறையாகப்‌ பூர்த்திசெய்துகொள்வதற்கு சாஸ்த்ரம்‌ இவ்வாறு வழியைக்‌ கற்றுக்கொடுக்கிறது.
5.2.4. ப்ராயச்சித்த கர்மம்‌
மனதில்‌ குற்ற உணர்ச்சியைப்‌ போக்கிக்‌ கொள்வதற்காக சாஸ்த்ரங்களால்‌ வகுக்கப்பட்டவை ப்ராயச்சித்த கர்மங்கள்‌. இதற்கு முன்னால்‌ பல பிறவிகளில்‌ செய்த பாபம்‌, இந்தப்‌ பிறவியில்‌ செய்த பாபம்‌ ஆகியவற்றை நீக்கிக்‌ கொள்வதற்காக இது செய்யப்படுகிறது. இதுவும்‌ செய்தே ஆக வேண்டும்‌ என்று கட்டாயம்‌ இல்லை.
முந்தைய பிறவிகளில்‌ செய்த பாபம்‌ இப்பொழுது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்தப்‌ பிறவியில்‌ செய்த பாபத்திற்கு, குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்‌ என்பதற்காக, ப்ராயச்சித்த காண்டம்‌ என்றே தர்ம சாஸ்த்ரங்களில்‌ கூறப்பட்டுள்ளன.
என்ன பாபத்துக்கு என்ன ப்ராயச்சித்தமோ அதைச்‌ செய்ய வேண்டும்‌. குற்ற உணர்ச்சி நீங்கிவிடும்‌.
காம்ய கர்மம்‌ பொருளையும்‌, இன்பத்தையும்‌ நன்றாக அனுபவிக்க வேண்டும்‌ என்பதற்காகச்‌ செய்யப்படுவதாகும்‌. ப்ராயச்சித்த கர்மம்‌ துன்பங்களுக்குக்‌ காரணமான பாபம்‌ நீங்குவதற்காகச்‌ செய்யப்படுவதாகும்‌.
இந்த உலகில்‌ மனிதனாகப்‌ பிறந்தவன்‌, வேத சாஸ்த்ரங்களில்‌, நம்பிக்கை உள்ளவன்‌, புண்ணியம்‌ செய்வதற்கு இடையில்‌ பொருளுக்காகவும்‌, இன்பத்துக்காகவும்‌ முயற்சி செய்யலாம்‌.
வெறும்‌ பொருளையும்‌, இன்பத்தையும்‌ அனுபவிப்பதற்கு மாத்திரம்‌ செயல்படுவதற்கு ஆன்மிக வாழ்வில்‌ உரிமையில்லை. தர்மம்‌ என்கின்ற புண்யத்தை அடைவதற்காக அவன்‌ கர்மம்‌ செய்யத்தான்‌ வேண்டும்‌.
தர்மத்திற்காக முயல்வதற்கிடையில்தான்‌ பொருளுக்காகவும்‌ இன்பத்திற்காகவும்‌ முயற்சி செய்யலாமே தவிர, அதை (தர்மத்தை) விட்டுவிட்டு செய்வதற்கு அதிகாரம்‌ இல்லை.
வேதமானது “இவ்வாறு கர்மங்களைச்‌ செய்‌" என்று கூறி, “நீ இவற்றையெல்லாம்‌ செய்தால்‌ ஸ்வர்கத்திற்குச்‌ செல்வாய்‌” என்று முதலில்‌ கூறுகிறது. எடுத்தவுடனே, “ஆநந்தமே உன்‌ வடிவம்‌" என்று சொன்னால்‌ ஒன்றும்‌ புரியாது. ஆகையினால்‌, ஒழுங்காக ஸாதனைகளைச்‌ செய்தால்‌, வாழ்வில்‌ உனக்கு அனைத்து வளங்களும்‌ கிடைக்கும்‌. இங்கேயே எல்லாம்‌ கிடைக்கும்‌, இங்கு இல்லை என்றாலும்‌, ஸ்வர்கத்தில்‌ கிடைக்கும்‌.
நீ ஸ்வர்கத்திற்குச்‌ செல்லும்போது, எல்லோரும்‌ உன்‌ பாதத்தில்‌ மலர்களை இட்டு உன்னை அழைத்துச்‌ செல்வார்கள்‌. புண்யம்‌ தீருகின்ற வரை நீஅங்கு இருக்கலாம்‌. ஆகையால்‌ விண்ணுலக இன்பங்களில்‌ ஆசையோடு கர்மத்தைக்‌ கடைப்பிடிக்கின்றவனாக இருப்பாயாக, சிறந்த செயல்‌ ஒழுக்கத்தை உடையவனாக இருப்பாயாக என்று வேதம்‌ கூறுகிறது.
இரண்டாயிரம்‌ ரூபாய்‌ கொடுத்தால்‌, ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ கிடைக்கும்‌ என்று கூறி சிலர்‌ ஏமாற்றுகிறார்கள்‌. வேதம்‌ நமக்கு அது கிடைக்கும்‌, இது கிடைக்கும்‌ என்று ஆசை காட்டினாலும்‌, அதனுடைய நோக்கம்‌ நம்மை மோசம்‌ செய்வதல்ல.
வேதம்‌ ஆசை காட்டி ஆசையை நீக்குகிறது. ஆசைப்படுவதை வழங்கி, அவை அநித்யம்‌ என்ற அறிவையும்‌ வழங்கும்‌.
5.3. நிலையற்றது எது, நிலையானது எது என்ற பகுத்தறிவைப்‌ பெறுதல்‌
மேற்கூறியவாறு கர்மங்களைச்‌ செய்துகொண்டே இருந்தால்‌, நாளாக நாளாக புண்ய மிகுதியால்‌ ஓர்‌ உண்மை விளங்கும்‌. இந்த உலக வாழ்க்கையும்‌ அந்த உலக இன்பங்களும்‌ நிலையில்லாதவைகள்‌ என்பது புரியும்‌.
இந்த உலகத்தைக்‌ காட்டிலும்‌ நமக்கு ஸ்வர்கத்தில்‌ என்றும்‌ இளமை இருக்கலாம்‌, வாழ்நாள்‌ அதிகம்‌ இருக்கலாம்‌. ஆனாலும்‌, கால அளவுதான்‌ நீளமே தவிர, அங்கும்‌ மாற்றம்‌ வரும்‌. அங்கும்‌ துன்பம்‌ வரும்‌.
யதா இஹ கர்மசிதோ லோக: க்ஷீயதே ததா அமுத்ர புண்யசிதோ லோக: க்ஷீயதே।
எப்படி கர்மத்தைச்‌ செய்து நாம்‌ அடைகின்ற பலன்கள்‌ அழிவதை. கண்‌ முன்னால்‌ பார்க்கிறோமோ, அதேபோன்று ஸ்வர்கம்‌ முதலானவற்றில்‌ நம்‌ புண்யம்‌ கழிந்தவுடன்‌, அந்த வாழ்க்கையும்‌ இல்லாமல்‌ போகிறது.
கட்டிடம்‌ அழிகிறது, செடி அழிகிறது, உடல்‌ அழிகிறது. பொருட்களெல்லாம்‌ நாசமடைகின்றன. இதை வைத்து அனுமானம்‌ செய்துகொள்ளலாம்‌.
இங்குள்ளவற்றை விட ஸ்வர்கத்தில்‌ அதிக வசதிகள்‌ இருப்பதுபோல்‌ தோன்றலாம்‌. பிறக்கும்போதே அங்கு இளமையாகப்‌ பிறப்போம்‌. ஒருநாளும்‌ வயதாகாது, அஜரா: - தேவர்கள்‌ மூப்பில்லாதவர்கள்‌, பிணியில்லாதவர்கள்‌.
புண்ணியம்‌ தீர்ந்தவுடன்‌, இப்பூவுலக வாழ்க்கை முடிந்துவிடுவதைப்‌ போல, புண்ணியம்‌ தீர்ந்தவுடன்‌, விண்ணுலக வாழ்க்கையும்‌ முடிவுக்கு வந்துவிடும்‌.
எது வரையறைக்கு உட்பட்டதோ, அது நிலையில்லாதது என்பதை ஊகித்தும்‌ புரிந்துகொள்கிறோம்‌.
இந்த உலகம்‌ நிலையில்லாதது என்பது ப்ரத்யக்ஷமாகத்‌ தெரிகிறது. சாஸ்த்ரமும்‌ அதை ஆமோதிக்கிறது. ஸ்வர்கமும்‌ அநித்யம்‌ என்பதை சாஸ்த்ரம்‌ கூறுகிறது. சாஸ்த்ர வாக்கியத்தை வைத்துக்‌ கொண்டும்‌, 'இவ்வுலகில்‌ நம்‌ ப்ரத்யக்ஷ அனுபவத்தைக்‌ கொண்டும்‌, ஸ்வர்கமும்‌ அநித்யம்‌ என்பதை அனுமானபூர்வமாக அறிந்துகொள்கிறோம்‌. மனிதன்‌ உலகில்‌ அனுபவிக்கின்ற புலனின்பங்கள்‌ அனைத்தும்‌ நிலையற்றவையாக இருக்கின்றன. எந்த விஷயங்களைக்‌ குறித்து, சாஸ்த்ரங்கள்‌ கர்மங்களைச்‌ செய்யச்‌ சொல்கிறதோ, அந்த விஷயங்கள்‌ நிலையில்லாதவையாக இருக்கின்றன.
எதுதான்‌ நிலையானது என்று அவனுடைய புத்தி கேள்வி கேட்கத்‌ தொடங்குகிறது.
கர்மங்களை ஒழுக்கதோடு செய்து வருவதால்‌, ஒரு மனிதனுக்கு காலப்போக்கில்‌, நிலையில்லாத ஸ்வர்கம்‌ முதலியவைகளில்‌, ஆசையற்ற தன்மை ஏற்படுகிறது. நிலையற்ற, துன்பம்‌ கலந்த இந்த இன்பம்‌ வேண்டாம்‌ என்ற எண்ணத்திற்கு நிராசை என்று பெயர்‌.
அப்படிப்பட்ட நிராசை உடைய ஒரு மனிதனின்‌ உள்ளத்திற்குள்‌, எது நித்யம்‌ எது அநித்யம்‌ என்ற எண்ணம்‌ ஓடிக்‌ கொண்டிருக்கிறது. நித்யமான ஒன்று இருக்க வேண்டும்‌ என்ற எண்ணம்‌ அவனுக்கு இருக்கிறது.
பரம்பொருள்‌ ஒன்றுதான்‌ நிலையானது, மற்றவை எல்லாம்‌ மாறக்கூடியது என்று கேள்விப்படுகிறான்‌.
நித்யமான ஒரு பொருள்‌ இருக்கிறது என்ற கேள்வி ஞானம்‌ ஒரு பக்கம்‌ இருக்கிறது. இந்த உலகம்‌ அநித்யம்‌ என்பது அனுபவபூர்வமான ஞானம்‌ மறுபக்கமும்‌ இருக்கிறது.
வேதத்தில்‌ நம்பிக்கை வைத்து, அவன்‌ புண்ய கர்மங்களைச்‌ செய்துவருவதால்‌, அவனுடைய உள்ளத்தில்‌, எது நிலையானது, எது நிலையற்றது என்ற பகுத்தறிவு மெல்ல முளைவிடத்‌ துவங்குகிறது.
மண்ணுலக விண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும்‌ என்ற ஆசை அகன்று, நிலையான பொருளை அறிந்துகொள்ள வேண்டும்‌ என்ற ஆசை ஏற்படுகிறது. நித்யமான பொருளை அறிந்துகொள்ள விருப்பம்‌ கொண்டு, மெய்ப்பொருள்‌ தத்துவத்தை அவன்‌ நாடிச்‌ செல்கிறான்‌.
நூலாசிரியர்‌ அடுத்த ச்லோகத்தில்‌ கர்மயோகத்தையும்‌, உபாஸனையையும்‌ கூறுகிறார்‌. இவை மனதிலுள்ள இரண்டுவித அழுக்குகளை நீங்குகின்றன.
நம்முடைய உள்ளத்தில்‌ ஐந்துவிதமான அழுக்குகள்‌ இருக்கின்றன என்று சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. அவை:
  1. விருப்பு வெறுப்பு (ராகத்வேஷம்‌)
  2. அலைபாயும்‌ தன்மை (விக்ஷேபம்‌)
  3. அறியாமை (அஜ்ஞாநம்‌)
  4. ஐயம்‌ (ஸந்தேஹம்‌)
  5. திரிபு (விபரீத பாவனை, தவறாகப்‌ புரிந்து கொள்வது)
ஐந்து அழுக்குகள்‌ நீங்குவதற்காக ஐந்து ஸாதனைகள்‌ கூறப்பட்டிருக்கின்றன.
விருப்பு வெறுப்பை நீக்குவதற்காக கர்மயோகத்தையும்‌, மனதின்‌ அலைபாயும்‌ தன்மையை நீக்குவதற்காக உபாஸனையையும்‌, அறியாமையை நீக்குவதற்காக ச்ரவணத்தையும்‌, சந்தேகத்தை நீக்குவதற்காக மனனத்தையும்‌, விபரீத பாவனையை நீக்குவதற்காக நிதித்யாஸனத்தையும்‌ சாஸ்த்ரங்கள்‌ உபதேசித்திருக்கின்றன. இந்தக்‌ கருத்துக்கள்‌ அனைத்தும்‌ அடுத்து வருகின்ற சுலோகங்களில்‌ வருகின்றன.
ஶ்லோகம்‌ 6
ज्ञानाप्ते: परिपन्थिनौ किल मलौ विक्षेपदोषस्तथा
चेतोनिष्ठमहारिपू प्रथमतश्चोन्मूलनीयौ यत:।
कामं दूरमपास्य कर्मनिरतो मालिन्यरिक्तस्तत:
चित्तैकाग्रयसुसिद्धये च भजतां निष्कामनोपासनम्॥ 6
ஜ்ஞாநாப்தே: பரிபந்திநௌ கில மலௌ விக்ஷேபதோஷஸ்ததா
சேதோநிஷ்மஹாரிபூ ப்ரமதஶ்சோந்மூலநீயௌ யத:।
காமம் தூரமபாஸ்ய கர்மநிரதோ மாலிந்யரிக்தஸ்தத:
சித்தைகாக்ரயஸுஸித்யே ச ஜதாம் நிஷ்காமநோபாஸநம்॥ 6
பதவுரை
ஜ்ஞாநாப்தே: - (மெய்ப்பொருளைப்‌ பற்றிய) அறிவைப்‌ பெறுவதற்கு, மலெள - விருப்புவெறுப்பாகிய அழுக்குகள்‌ இரண்டும்‌, பரிபந்திநெள - வழிப்பறித்திருடர்கள்‌, கில - அன்றோ! ததா - அவ்வாறே, விக்ஷேதோஷ: - மனதின்‌ சிதறும்தன்மையாகிய குறை. யத: - எனவே, சேதோநிஷ்டமஹாரிபூ - மெய்யறிவில்‌ நிலைத்திருப்பதற்கு மாபெரும்‌ எதிரியான (இவைகளை), ப்ரதமத: - முதலில்‌, உந்மூலநீயெள ச - வேரோடு களைய வேண்டும்‌. (அதன்பொருட்டு), காமம்‌ - செயலின்‌ பலனைப்‌ பெற வேண்டும்‌ என்ற எண்ணத்தை, தூரம்‌ அபாஸ்ய - அறவே நீக்கிவிட்டு, கர்மநிரத: - (செயலில்‌ நன்கு ஈடுபடுபவனாய்‌) நித்ய நைமித்திக கர்மங்களை நன்கு கடைப்பிடிப்பவனாய்‌, மாலிந்யரிக்த: - விருப்பு வெறுப்பாகிய மாசுகளை நீக்கியவனாய்‌, தத: - பின்னர்‌, சித்த ஐகாக்ர்ய ஸுஸித்தயே ச - மன ஒருமுகப்பாட்டை நன்கு பெறுவதற்காக, நிஷ்காமநோபாஸநம்‌ - பலனில்‌ பற்றற்றவனாய்‌, ஸகுண ப்ரஹ்ம த்யானத்தை, பஜதாம்‌ - மேற்கொள்ளட்டும்‌.
பொழிப்புரை
(மெய்ப்பொருளைப்‌ பற்றிய) அறிவைப்‌ பெறுவதற்கு, விருப்புவெறுப்பாகிய அழுக்குகள்‌ இரண்டும்‌ வழிப்பறித்திருடர்கள்‌ அன்றோ! அவ்வாறே மனதின்‌ சிதறும்தன்மையாகிய குறை. எனவே மெய்யறிவில்‌ நிலைத்திருப்பதற்கு மாபெரும்‌ எதிரியான (இவைகளை), முதலில்‌ வேரோடு களைய வேண்டும்‌.
(அதன்பொருட்டு) செயலின்‌ பலனைப்‌ பெற வேண்டும்‌ என்ற எண்ணத்தை அறவே நீக்கிவிட்டு, (செயலில்‌ நன்கு ஈடுபடுபவனாய்‌) நித்ய நைமித்திக கர்மங்களை நன்கு கடைப்பிடிப்பவனாய்‌, விருப்பு வெறுப்பாகிய மாசுகளை நீக்கியவனாய்‌, பின்னர்‌ மன ஒருமுகப்பாட்டை நன்கு பெறுவதற்காக பலனில்‌ பற்றற்றவனாய்‌, ஸகுண ப்ரஹ்ம த்யானத்தை மேற்கொள்ளட்டும்‌.
விளக்கவுரை
இந்த ச்லோகம்‌ நித்யமான பொருளைத்‌ தெரிந்து கொள்வதற்கான தகுதியை உறுதிப்படுத்துகிறது. தகுதியைக்‌ கூறி, அந்தத்‌ தகுதியில்‌ நாம்‌ நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளைக்‌ கூறுகிறது.
6.1 விருப்பு வெறுப்பாகிய வழிப்பறித்‌ திருடர்கள்‌
ஓரிடத்திற்கு நிறைய பணம்‌ எடுத்துக்கொண்டு செல்கிறோம்‌. வழியில்‌ நான்கு பேர்‌ சுற்றி வளைத்துப்‌ பறித்துச்‌ சென்றுவிடுகிறார்கள்‌. அவர்களுக்கு வழிப்பறித்‌ திருடர்கள்‌ என்று பெயர்‌.
மெய்யறிவை அடைவதற்காக நாம்‌ மேற்கொள்ளும்‌ பயணத்தில்‌, விருப்பு வெறுப்பானது நம்மிடமுள்ள நிராசையையும்‌, எது நிலையானது, எது நிலையற்றது என்ற பகுத்தறிவையும்‌ அபகரித்துவிடும்‌ தன்மையுடைய மாபெரும்‌ வழிப்பறித்திருடர்கள்‌ ஆகும்‌. இதனை பகவத்கீதையில்‌ பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ணர்‌ பின்வருமாறு கூறுகிறார்‌.
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராத்வேஷௌ வ்யவஸ்திதௌ ।
தயோர்ந வஶமாச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ ॥ 3-34॥
(ஸ்ரீமத்பகவத்கீதை 3-34)
பொறிகள்‌ புலனின்பப்‌ பொருட்களோடு தொடர்பு வைப்பதால்‌, அதில்‌ விருப்பு வெறுப்பு ஏற்படுகின்றன. அவற்றுக்கு வசப்படலாகாது. அவை இரண்டும்‌ மனிதனின்‌ பகுத்தறிவாகிய செல்வத்தைக்‌ கவர்ந்துசெல்லும்‌ வழிப்பறித்‌ திருடர்களாகும்‌.
நிராசை வந்தால்‌ கூட, விருப்பு வெறுப்பு போவதில்லை. உலக ஸாகத்திலும்‌, ஸ்வர்க ஸுகத்திலும்‌ நமக்குப்‌ பற்றில்லை. ஆனாலும்‌, மனதில்‌ விருப்பு வெறுப்பு நீண்ட நாள்‌ பழக்கத்தினால்‌ இருக்கிறது. நிராசை உறுதிபெறவில்லை.
காமக்ரோதஸ்ச லோபஸ்ச: தேஹே திஷ்டந்தி தஸ்கரா:।
ஜ்ஞாநரத்நாபஹாராய தஸ்மாத்‌ ஜாக்ரத ஜாக்ரத
ஆசை, கோபம்‌, பொருட்பற்று ஆகிய மூன்று திருடர்கள்‌ நம்‌ நுண்ணுடலில்‌ (உள்ளத்தில்‌), பகுத்தறிவு என்ற செல்வத்தை கவருவதற்காகக்‌ காத்திருக்கிறார்கள்‌, எனவே கவனமாக இருக்க வேண்டும்‌ என்று ஒரு ச்லோகம்‌ கூறுகிறது.
6.2 மனதின்‌ அலைபாயும்‌ தன்மை
ஒருவேளை நமக்கு விருப்பு வெறுப்பு இல்லாவிட்டாலும்‌, வகுப்பில்‌ அமர்ந்திருக்கும்போது, மனம்‌ அலைபாய்கிறது.
ஞானத்தைப்‌ பெறுவதற்கு, மனதின்‌ அலைபாயும்‌ தன்மையும்‌ ஒரு தடையாகும்‌. மனம்‌ தியானத்தில்‌ ஈடுபட மாட்டேன்‌ என்கிறது. ஜபம்‌ முதலிய ஸாதனைகளிலும்‌ ஆர்வமின்றி இருக்கிறது.
மனம்‌ சிதறிக்‌ கிடக்கிறது. பல்வேறு திசைகளை நோக்கி பறக்கிறது. பல்வேறு விஷயங்களில்‌ ஊறியிருந்த மனதை ஓரிடத்தில்‌ குவிக்க வேண்டும்‌.
மனதின்‌ சிதறல்‌ என்ற குறைபாடு மனம்‌ உறுதியாக நிலைத்திருப்பதற்குப்‌ பெரிய எதிரியாக இருக்கிறது.
மனிதன்‌ உலக இன்பங்களில்‌ நிலையற்ற தன்மையை அனுபவத்தில்‌ உணர்ந்திருக்கிறான்‌. நிலையான ஒன்றைப்‌ பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறான்‌. பகுத்தறிவு இருப்பினும்‌, அது உறுதியாக இல்லாமல்‌ இருக்கும்படி இந்த விருப்புவெறுப்பும்‌, மனதின்‌ அலைபாயும்‌ தன்மையும்‌ எதிரிகளாக இருக்கின்றன.
அவற்றை வேரோடு களைவதற்கு வழி கூறப்படுகிறது.
6.3 கர்மயோகம்‌
விருப்பு வெறுப்பை வேரோடு களைவதற்கு கர்மயோகமே உற்ற உபாயமாகும்‌.
நித்ய நைமித்திக கர்மங்களை மட்டும்‌ ஈச்வரார்ப்பண புத்தியோடு, பலனை விரும்பாமல்‌ செய்வதே கர்மயோகம்‌ எனப்படும்‌.
கடமையைச்‌ செய்‌. பலனை எதிர்பார்க்காதே, பலனில்‌ உனக்கு உரிமை இல்லை என்று நவீனமாக சிலர்‌ கர்மயோகத்திற்கு விளக்கம்‌ கொடுக்கிறார்கள்‌.
சாஸ்த்ரத்தின்படி, கர்மம்‌ செய்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது, கர்மத்தை செய்வதற்கு எப்பொழுது உரிமை இருக்கிறதோ, அப்பொழுதே, அதன்‌ பலனிலும்‌ நமக்கு உரிமை இருக்கிறது.
பலனில்‌ உரிமை இருக்கிறது, அதனை வேண்டும்‌ என்றோ, வேண்டாம்‌ என்றோ கருதுகிறோம்‌.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசந ।
மா கர்மஃபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ(அ)ஸ்த்வகர்மணி ॥ 2-47॥
(ஸ்ரீமத்பகவத்கீதை 2-47)
பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ணர்‌, செயலில்‌ உன்‌ கவனத்தைச்‌ செலுத்து, பலனில்‌ கவனத்தைச்‌ செலுத்த வேண்டாம்‌. பலனில்‌ ஒட்டிக்கொள்வது மக்களின்‌ இயல்பு. அவ்வாறு பலனில்‌ நீஒட்டிக்‌. கொள்ள வேண்டாம்‌ என்று உபதேசிக்கிறார்‌. பலனில்‌ உரிமை இல்லை என்று பொருளல்ல, பலனில்‌ விருப்பம்‌ கொள்ள வேண்டாம்‌ என்று பொருள்‌.
விவசாயம்‌ செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன்‌ பலனில்‌ உனக்கு உரிமை இல்லை என்று சொல்ல முடியாது. நாம்‌. விவசாயம்‌ செய்துவிட்டு, பலனை வேறொருவருக்குக்‌ கொடுப்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. பலன்‌ நம்முடையது, அதனால்தான்‌ அதை வேண்டும்‌ என்றோ, வேண்டாம்‌ என்றோ சொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.
கர்மம்‌ செய்வதற்குத்தான்‌ உனக்கு உரிமை இருக்கிறது. கர்மபலனில்‌ உனக்கு உரிமை இல்லை. அது கடவுளுடையது என்றெல்லாம்‌ சொல்கிறார்கள்‌. ஆனால்‌ சாஸ்த்ரத்தில்‌ அப்படிச்‌ சொல்லப்படவில்லை.
பலனில்‌ உரிமை இருப்பதால்தான்‌, அதில்‌ விருப்பத்தை விட்டுவிடு என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது.
காம்ய கர்மத்திலும்‌, ப்ராயச்சித்த கர்மத்திலும்‌ விருப்பம்‌ வைக்காதே என்று சொல்ல முடியாது. அதில்‌ பலனை எதிர்பார்த்துத்தான்‌ செய்ய முடியும்‌.
ஆனால்‌, நித்ய நைமித்திக கர்மங்களை நாம்‌ விரும்பினாலும்‌, விரும்பாவிட்டாலும்‌, செய்துதான்‌ ஆக வேண்டும்‌ என்று சாஸ்த்ரம்‌ உபதேசித்திருக்கிறது.
கர்மயோகம்‌ செய்தால்தான்‌ விவேகம்‌ நன்கு உறுதியாகும்‌. மனம்‌ உற்சாகமாக இருந்தாலும்‌, இல்லாவிட்டாலும்‌, நித்ய நைமித்திக கர்மத்தைச்‌ செய்துதான்‌ ஆக வேண்டும்‌. விவேகம்‌ முதலான ஞானத்தகுதி ஸாதனங்கள்‌ உள்ளத்தில்‌ உறுதியான பிறகே அவற்றை முறைப்படி விடலாம்‌.
நித்ய நைமித்திக கர்மங்கள்‌ புண்யத்தைக்‌ கொடுக்கின்றன. ஒருவன்‌ சாஸ்த்ரத்தில்‌ ச்ரத்தை வைத்து, இறைவனுடைய ஆணையாக ஏற்று, அந்தக்‌ கர்மங்களைச்‌ செய்கிறான்‌. ஆனால்‌, அதன்‌ பலனில்‌ விருப்பம்‌ கொள்வதில்லை.
எப்பொழுது பலனில்‌ இச்சை இல்லையோ, அப்பொழுதே மனம்‌ தானாகத்‌ தூய்மைப்‌ பெறத்‌ துவங்கிவிடும்‌. வைதிக கர்மத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
பூர்வ மீமாம்ஸா சாஸ்த்ரத்தில்‌ இதற்கு ஸம்யோக ப்ருதக்த்வ ந்யாயம்‌ என்று பெயர்‌. ஒரு கர்மத்தைப்‌ பலனை விரும்பிச்‌ செய்தால்‌, பலன்‌ கிடைக்கும்‌. பலனை விரும்பவில்லை யென்றால்‌, பலனை விரும்பாத தன்மைக்காக ஒரு பலன்‌ கிடைக்கும்‌, அதுதான்‌ மனத்தூய்மை. பலனை விரும்பினால்‌ பலன்தான்‌ கிடைக்கும்‌. பலனை விரும்பாமல்‌ செய்தால்‌, அதற்கு மதிப்பு அதிகம்‌.
ஒரு கல்லூரியில்‌ ஓர்‌ ஆசிரியர்‌ பணியாற்றுகிறார்‌, சம்பளம்‌ பெறுகிறார்‌. சம்பளம்‌ பெறுபவருக்கு என்ன மரியாதையோ, அந்த மரியாதை அவருக்குக்‌ கிடைக்கும்‌. ஆனால்‌ மற்றோர்‌ “ஆசிரியர்‌ சம்பளம்‌ வேண்டாம்‌ என்று சொல்லிப்‌ பணியாற்றுகிறார்‌. அவருக்கு மதிப்புக்‌ கூடும்‌.
சாஸ்த்ரங்களில்‌ கூறப்பட்டுள்ள நித்ய நைமித்திக கர்மங்களை, கடவுள்‌ எனக்கு மண்ணுலக விண்ணுலக இன்பங்களைக்‌ கொடுப்பார்‌ என்ற எண்ணத்தோடு பலன்களை எதிர்பார்த்துச்‌ செய்பவருக்கு புண்யத்தின்‌ வாயிலாக எதிர்பார்த்த பலன்‌ கிடைக்கும்‌.
சம்பளம்‌ பெற்றுக்கொண்டு பணியாற்றும்‌ ஆசிரியருக்குக்‌ கிடைக்கும்‌ மரியாதை அது போன்றது.
ஆனால்‌, கர்மயோகியானவர்‌ நித்ய நைமித்திக கர்மங்களை, இறைவன்‌ இட்ட கட்டளைக்காகச்‌ செய்கிறார்‌. பலனை எதிர்பார்க்காமல்‌ செய்கிறார்‌, அதனால்‌ அவர்‌ மனத்துக்கண்‌ மாசிலன்‌ ஆகிறார்‌. அவர்‌ கெளரவப்‌ பேராசிரியர்‌ போன்றவர்‌. அவருக்கு மரியாதை அதிகம்‌.
கர்மயோகி ஒழுங்காக பிரார்த்தனை செய்து, அந்த பிரார்த்தனையைக்‌ கூட ஈச்வரனுக்கு அர்ப்பணம்‌ செய்துவிடுகிறான்‌. பிரார்த்தனையில்‌ துன்பமே இல்லாத ஒரு வாழ்க்கையைக்‌ கடவுள்‌ கொடுக்க வேண்டும்‌ என்று கேட்பதில்லை.
கர்மயோகியானவர்‌, பிரார்த்தனை செய்ய வேண்டும்‌ என்று இறைவன்‌ நியதியை வகுத்திருப்பதால்‌, பிரார்த்தனை செய்கிறார்‌. மண்ணுலக இன்பமோ, விண்ணுலக இன்பமோ கிடைக்கும்‌ என்ற எண்ணத்துடன்‌ செய்யவில்லை.
கர்மயோகி செயலையும்‌, செயலின்‌ பலனையும்‌ இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறார்‌.
உலக வாழ்வு நடைமுறையில்‌, “உங்கள்‌ கர்மங்களை முறையாகச்‌ செய்யுங்கள்‌. மேலதிகாரிக்காக செயலாற்றாதீர்கள்‌, மனிதனாகப்‌ பிறந்த நீங்கள்‌, ஸமுதாயத்திற்கு உங்கள்‌ கடமையை ஆற்றுங்கள்‌. பிறருடைய விமர்சனங்களைப்‌ பொருட்படுத்தாதீர்கள்‌. நீங்கள்‌ செய்கின்ற வேலையை த்ருப்தியாகச்‌ செய்யுங்கள்‌, கடவுளுக்குக்‌ கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்‌ - இதுதான்‌ கர்மயோகம்‌" என்று எளிமையாகச்‌ சொல்கிறார்கள்‌.
ஆனால்‌, வேதம்‌ கண்ணுக்குத்‌ தெரியாத பலன்களைக்‌ கூறுகிறது. வேதங்களின்படி, நித்ய நைமித்திக கர்மங்களைப்‌ பலனை விரும்பாமல்‌ ஈச்வரார்ப்பண புத்தியோடு செய்வது கர்மயோகம்‌.
விருப்பு வெறுப்புகள்‌ நீங்க வேண்டுமானால்‌, காம்ய கர்மங்களை, இயலுமானால்‌ (ப்ராயச்சித்த கர்மங்களையும்‌) அறவே நீக்கிவிட்டு அல்லது நித்ய நைமித்திக கர்மங்களில்‌ பலனை விரும்பாமல்‌ செய்ய வேண்டும்‌.
நித்ய நைமித்திக கர்மங்களை மட்டும்தான்‌ பலனில்‌ விருப்பத்தை விட்டுச்‌ செய்ய முடியும்‌. அலுவலக வேலையில்‌ பலனை விட்டுச்‌ செய்ய முடியாது.
கர்மயோகி, காம்ய கர்மபலன்கள்‌ அநித்யமாக இருப்பதால்‌ விட்டுவிடுகிறான்‌. முடிவு இல்லாத காரணத்தால்‌ ப்ராயச்சித்த கர்மங்களை விட்டுவிடுகிறான்‌.
எத்தனை பிறவிகளில்‌ எத்தனை பாவங்கள்‌ செய்தோமோ நமக்கே தெரியாது. அவை அனைத்துக்கும்‌ ப்ராயச்சித்தம்‌ செய்து முடிக்க முடியாது.
கர்மங்களை முறையாகச்‌ செய்தால்‌, கடவுள்‌, பணம்‌, பதவி, பொருட்களைக்‌ கொடுப்பார்‌ என்று நினைத்துச்‌ செய்யவில்லை. இறைவனின்‌ கட்டளையை நிறைவேற்றினால்‌, அவர்‌ திருப்தியடைவார்‌ என்று செய்கிறான்‌.
ஆதிசங்கரர்‌ கீதை (2-48) உரையில்‌, கடவுள்‌ திருப்தி அடையட்டும்‌ என்ற புத்தியையும்‌ விட்டுவிட வேண்டும்‌ என்கிறார்‌.
கர்மபலன்களில்‌ ஆசையை துறந்த பின்னரும்‌ ஏன்‌ கர்மயோகி தொடர்ந்து செயல்புரிகிறான்‌ என்று கேட்டால்‌, அவன்‌ ஸமுதாயத்தில்‌ பிறந்திருக்கிறான்‌. இந்த உலகம்‌ நிலையில்லாதது என்பதைப்‌ புரிந்து வைத்திருக்கிறான்‌. உடல்‌ எடுத்தவர்கள்‌ கர்மத்தைவிடக்கூடாது என்று சாஸ்த்ரம்‌ கூறியிருக்கிறது. இந்த வைதிக தர்மத்தில்‌ இருப்பதால்‌ செய்கிறான்‌.
ஓர்‌ உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக, கர்மபலனில்‌ ஆசையைத்‌ துறந்திருக்கிறான்‌. அவனுடைய குறிக்கோள்‌ நிலையான பேரின்பம்‌. அதனை அடைவதற்கு ஞானம்‌ வேண்டும்‌.
ஞானத்தை அடைய வேண்டுமானால்‌, மனமாசுகள்‌ அகன்று, மனம்‌ தூய்மை பெற வேண்டும்‌. மனம்‌ தூய்மை பெற வேண்டுமானால்‌, கர்மயோகம்‌ செய்ய வேண்டும்‌.
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்ந ।
ஹுஶாகா ஹ்யநந்தாஶ்ச புத்யோ(அ)வ்யவஸாயிநாம் ॥ 2-41॥
(ஸ்ரீமத்பகவத்கீதை 2-41)
கர்மிக்குப்‌ பலவிதமான ஆசைகள்‌ இருக்கின்றன. கர்மயோகியின்‌ மனதில்‌ ஒரே ஒரு குறிக்கோள்‌ இருக்கிறது. கர்மகாண்டத்தில்‌ பலனை எதிர்பார்ப்பவர்கள்‌ மனம்‌ பலவிதமாகச்‌ செல்கிறது.
கர்மயோகத்தில்‌ நாட்டம்‌ உள்ளவனுக்கு மனம்‌ ஒரே புத்தியில்‌ நிலைபெறுகிறது என்று பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ணர்‌ இதில்‌ கூறியிருக்கிறார்‌.
கர்மயோகி, அநித்யமான பொருட்களில்‌ இன்பம்‌ வேண்டும்‌ என்ற எண்ணத்தை அறவே நீக்கிவிட்டு, அதாவது பலனைக்‌ கருதுகின்ற எண்ணத்தை விட்டுவிட்டு, கர்மங்களை ச்ரத்தையோடு முறையாக, ஓர்‌ எதிர்பார்ப்புமின்றி செய்கிறான்‌.
“கர்மயோகிக்கு செய்யும்‌ வேலையே பரிசு" என்பார்‌ ஸ்ரீஸ்வாமீ சிந்மயாநந்தர்‌.
கடமைகளில்‌ விருப்புவெறுப்பின்றி, கடமைகளின்‌ பலன்களிலும்‌ விருப்புவெறுப்பின்றி, கடமைகளைக்‌ கடவுள்‌ வழிபாட்டுணர்வுடன்‌ இயற்றுவதே கர்மயோகமாகும்‌.
6.4 உபாஸனை “விவேகம்‌ உறுதியாக வேண்டுமானால்‌, நம்மிடத்தில்‌ உள்ள விருப்பு வெறுப்பையும்‌, அலைபாயும்‌ தன்மையையும்‌ களைய வேண்டியிருக்கிறது. ஏனென்றால்‌, அவைதான்‌ ஒரு மனிதனின்‌ ஆன்மிக முன்னேற்றத்திற்கு மாபெரும்‌ எதிரிகளாக இருக்கின்றன. பலனில்‌ விருப்பம்‌ கொள்ளாது, நமது கடமைகளை நன்கு செய்வதால்‌, உள்ளத்தில்‌ உள்ள மாசுகள்‌ அகலும்‌” என்று பார்த்தோம்‌.
கர்மத்தை பற்றற்று முறையாகச்‌ செய்வதால்‌, த்யானம்‌ செய்வதற்குரிய தகுதியைப்‌ பெற முடியும்‌. அதுவரையில்‌ ஓரிடத்தில்‌ உட்கார்ந்து நம்மால்‌ த்யானம்‌ செய்ய முடியாது. எடுத்த எடுப்பில்‌ த்யானம்‌ செய்துவிட முடியாது.
சிதறியிருக்கின்ற மனதைக்‌ குவிக்க உள்ளத்தை நன்கு ஒருமுகப்படுத்த, எந்தவிதமான பலனையும்‌ எதிர்பாராமல்‌, இறைவனுடைய வடிவத்தை த்யானம்‌ செய்ய வேண்டும்‌.
உப என்றால்‌ அருகில்‌, ஆஸனம்‌ என்றால்‌ அமர்வது. உபாஸனம்‌ என்றால்‌ அருகில்‌ அமர்வது. யாருக்கு ஸமீபத்தில்‌ ? இறைவனுக்கு அருகில்‌ அமருதல்‌. அப்படி என்றால்‌, விக்ரஹத்தின்‌ அருகில்‌, படத்தின்‌ அருகில்‌ அமர்வது என்று பொருளல்ல. ஒரு கோவிலுக்குச்‌ சென்று அமர்வது என்றும்‌ பொருளல்ல. இறைவனைப்‌ பற்றி எண்ணுவது என்று பொருள்‌.
நம்‌ உள்ளத்தில்‌ நாம்‌ விரும்புகின்ற இறைவனுடைய வடிவத்தை எண்ணுவதுதான்‌ உபாஸனம்‌ என்று அழைக்கப்படுகிறது.
இடைவிடாமல்‌ இறைவனுடைய திருவுருவத்தை மனதில்‌ ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்‌. அந்த இறைவனிடம்‌ எந்த உலகப்‌ பொருட்களையும்‌ கேட்கக்கூடாது. மனதை ஒருமுகப்படுத்துவது ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும்‌.
6.5 மனத்தூய்மை
மனத்‌ தூய்மைக்குரிய வழிகள்‌ அனைத்தும்‌ கர்மயோகம்‌ ஆகும்‌. மனத்‌ தூய்மை பெற நிறைய வழிகள்‌ இருக்கின்றன. மக்களுக்கு ஸேவை செய்து மனதைத்‌ தூய்மைப்படுத்தலாம்‌.
கோயிலுக்குச்‌ சென்று வழிபட்டு, மனதைத்‌ தூய்மைப்படுத்தலாம்‌. ஜபம்‌ செய்து, மனதைத்‌ தூய்மைப்படுத்தலாம்‌.
சாஸ்த்ரப்படி நித்ய நைமித்திக கர்மங்களைப்‌ பலனை எதிர்பார்க்காமல்‌ செய்தால்தான்‌ மனம்‌ தூய்மைபெறும்‌. பிறருக்கு ஸேவை செய்தால்‌, விருப்பு வெறுப்பு குறைவது அனுபவத்தில்‌ தெரிகிறது. ஆகையால்‌ அதையும்‌ சித்தசுத்தி ஸாதனத்தில்‌ சேர்த்துக்கொண்டுள்ளோம்‌.
கர்மயோகத்தின்‌ ஓர்‌ அங்கம்தான்‌ உபாஸனை ஆகும்‌. சாஸ்த்ரப்படி கர்மயோகம்‌, ஞானயோகம்‌ ஆகிய இரண்டே யோகங்கள்தான்‌ கூறப்படுகின்றன. கர்மயோகத்தின்‌ பல்வேறு பிரிவுகள்தான்‌ ராஜயோகம்‌, பக்தியோகம்‌, ஹடயோகம்‌ போன்றவை.
பொருள்‌ ஒன்று, அதனை அடைவதற்குரிய வழிகள்‌ பல! என்ற கருத்தைக்‌ கவனமாகப்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌.
மனத்‌ தூய்மைக்குத்தான்‌ பல வழிகள்‌, உண்மையை உணர்ந்துகொள்வதற்கு ஒரே வழிதான்‌.
கர்ம யோகம்‌ செய்தும்‌ முக்தியடையலாம்‌; உபாஸனை செய்தும்‌ முக்தியடையலாம்‌; ஜபம்‌ செய்தும்‌, ஸேவை செய்தும்‌ முக்தி அடையலாம்‌ என்று சொல்வதை மனத்‌ தூய்மையடையலாம்‌ என்று புரிந்துகொள்ள வேண்டும்‌.
உண்மையில்‌ நான்‌ ப்ரஹ்மமாக இருக்கிறேன்‌ என்ற அறிவு ஒன்றைத்‌ தவிர, வேறு எதனாலும்‌ முக்தியடைய முடியாது. அந்த ஞானமோவெனில்‌ ஸேவை செய்வதால்‌ மட்டும்‌ வராது. ஆகவே, ஸேவை செய்வது தவறு என்று அர்த்தம்‌ அல்ல. ஸேவை செய்வதால்‌ மட்டும்‌, நான்‌ ப்ரஹ்மமாக இருக்கிறேன்‌ என்ற ஞானம்‌ கிடைக்காது. எனவே அதனால்‌ மோக்ஷம்‌ கிடைக்காது.
மனத்‌ தூய்மைக்காகவும்‌, மன ஒருமுகப்பாட்டுக்காகவும்‌ உரிய ஸாதனைகளை இந்த ஆறாவது ச்லோகம்‌ சொல்லியிருக்கிறது. மனத்தூய்மை வாயிலாக விவேகம்‌ உறுதிபெறுவதற்காக கர்மயோகமும்‌, உபாஸனையும்‌ இந்த ச்லோகத்தில்‌ உபதேசிக்கப்பட்டன.
மனத்தூய்மை அடைந்தவன்‌ ஞானத்தைப்‌ பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்‌ என்று இந்த ச்லோகம்‌ கூறுகிறது.
ஶ்லோகம்‌ 6
कर्मोपासनतो विशुद्धहृदयस्तत्वार्थसंसिद्धये
स्वाचार्यं परिचर्य शास्त्रविधिना तस्माच्च विद्यां पराम्।
श्रुत्वा संशयनुत्तये च मननं स्थाम्ने निदिध्यासनं
अभ्यस्य क्रमश: समाधिनिलय: प्राप्नोतु शान्तिं ध्रुवाम्॥ 7
கர்மோபாஸநதோ விஶுத்ஹ்யஸ்தத்வார்ஸம்ஸித்யே
ஸ்வாசார்யம் பரிசர்ய ஶாஸ்த்ரவிதிநா தஸ்மாச்ச வித்யாம் பராம்।
ஶ்ருத்வா ஸம்ஶயநுத்தயே ச மநநம் ஸ்தாம்நே நிதித்யாஸநம்
ப்யஸ்ய க்ரமஶ: ஸமாதிநிலய: ப்ராப்நோது ஶாந்திம் த்ருவாம்॥ 7
பதவுரை
கர்மோபாஸநத: - நித்ய நைமித்திக கர்மங்களாலும்‌ (கேர்மயோகத்தாலும்‌), ஸகுண ப்ரஹ்ம த்யானத்தாலும்‌, வித்த ஹ்ருதய: - நன்கு தூய உள்ளத்தைப்‌ பெற்றவன்‌, தத்த்வார்த்த - மெய்ப்பொருளைப்‌ பற்றிய அறிவை, ஸம்ஸித்தயே - நன்கு பெறுவதற்காக, ஸ்வாசார்யம்‌ - தனது. குருவை, ஸாஸ்த்ரவிதிநா - சாஸ்த்ர முறைப்படி, பரிசர்ய - வழிபட்டு (ஸேவைகள்‌ புரிந்து), தஸ்மாத்‌ ச - அவரிடமிருந்து, பராம்‌ வித்யாம்‌ - (முக்தியைத்‌ தரும்‌) மேலான சிறந்த மெய்யறிவை, ஸ்ருத்வா - கேட்டுப்‌ பெற்று, ஸம்மயநுத்தயே ச - ஐயங்களை அகற்றுவதற்காக, மநநம்‌ - (யுக்திபூர்வமாக) சிந்தித்து, ஸ்தாம்நே - அறிவில்‌ நிலைத்திருப்பதற்காக, நிதித்யாஸநம்‌ - ஸ்வரூப த்யானத்தை, க்ரமற: - முறையே, அப்யஸ்ய - பயின்று, ஸமாதிநிலய: - மெய்யறிவில்‌ நிலைத்திருப்பவனாய்‌, த்ருவாம்‌ மாந்திம்‌ - நிலைத்த பேரமைதியை, ப்ராப்நோது - அடைவானாக!
பொழிப்புரை
நித்ய நைமித்திக கர்மங்களாலும்‌ (கர்மயோகத்தாலும்‌), ஸகுண ப்ரஹ்ம த்யானத்தாலும்‌ நன்கு தூய உள்ளத்தைப்‌ பெற்றவன்‌ மெய்ப்பொருளைப்‌ பற்றிய அறிவை நன்கு பெறுவதற்காக தனது குருவை சாஸ்த்ர முறைப்படி வழிபட்டு (ஸேவைகள்‌ புரிந்து), அவரிடமிருந்து, (முக்தியைத்‌ தரும்‌) மேலான சிறந்த மெய்யறிவைக்‌ கேட்டுப்‌ பெற்று, ஐயங்களை அகற்றுவதற்காக (யுக்தியூர்வமாக) சிந்தித்து, அறிவில்‌ நிலைத்திருப்பதற்காக ஸ்வரூப த்யானத்தை முறையே பயின்று மெய்யறிவில்‌ நிலைத்திருப்பவனாய்‌ நிலைத்த பேரமைதியை அடைவானாக!
விளக்கவுரை
நான்காவது ச்லோகத்தில்‌ ஒரு கருத்து கூறப்பட்டது. முக்தி என்பது அடையப்படுவதன்று, அறிந்துகொள்ளப்படுவதாகும்‌. இது அத்வைத வேதாந்த ஸித்தாந்தம்‌. மோக்ஷம்‌ அடையப்படுமானால்‌, அந்த மோக்ஷம்‌ அநித்யமாகும்‌.
எல்லோரும்‌ மோக்ஷத்தை அடைய வேண்டும்‌ என்று நினைக்கிறார்கள்‌. மோக்ஷத்தை அடைய வேண்டும்‌ என்று நினைப்பது இயல்புதான்‌. சாஸ்த்ரமும்‌ அதனை ஆரம்பத்தில்‌ ஏற்றுக்கொள்வதுபோலத்தான்‌ பேசுகிறது.
ஆனால்‌, பிறகு, மோக்ஷம்‌ என்பது அடையப்பட வேண்டியது அல்ல. ஏற்கெனவே அடையப்பட்டிருப்பது என்று உபதேசிக்கிறது. அடையப்பட்டிருக்கின்ற ஒன்றை நாம்‌ மீண்டும்‌ அடைய முடியாது. ஆகாயத்தில்‌ இருந்துகொண்டே ஆகாயத்தை அடைய முடியாது. அது அடையப்பட்டுவிட்டது.
நாம்‌ அனைவரும்‌ முக்தியில்தான்‌ இருக்கிறோம்‌. அடைய வேண்டும்‌ என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும்‌.
முக்தி ஸ்வரூபமாகவே நாம்‌ இருக்கிறோம்‌.
நாமே பேரின்ப வடிவமாக இருக்கிறோம்‌ என்பது நமக்குத்‌ தெரியாமல்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ அறியாமை. அறியாமையை நீக்குவதற்கு அறிவைப்‌ பெற வேண்டும்‌. இருளை நீக்குவதற்கு ஒளியை நாடுவதுபோல்‌, அறியாமையை நீக்கிக்கொள்ள அறிவைப்‌ பெற முயல வேண்டும்‌.
7.1 மெய்யறிவைப்‌ பெறுவது எப்படி?
மோக்ஷம்‌ என்பது அடையப்பட்டதாகவே இருக்கிறது என்பதை எப்படி நாம்‌ அறிந்துகொள்வது ?
அறிந்துகொள்வதற்கு ஒருமுறை இருக்கிறது. வேதாந்த சாஸ்த்ரத்தையும்‌ குருவையும்‌ சேர்த்து அணுக வேண்டும்‌.
குரு சாஸ்த்ர ப்ரமாணத்தினால்தான்‌ அடையப்பட்டிருக்கின்ற அந்த மோக்ஷத்தை நம்‌ ஸ்வரூபமாக நாம்‌ அறிந்துகொள்ள முடியும்‌.
மோக்ஷத்திற்கு மற்றொரு பெயர்தான்‌ ப்ரஹ்மன்‌, ஆனந்தம்‌. ப்ரஹ்மன்‌ மோக்ஷ ஸ்வரூபமாகத்தான்‌ இருக்கிறது. அதை அறிந்துகொள்ளத்தான்‌ முடியும்‌, அடைய முடியாது. அடைந்திருப்பதை அறிந்துகொள்வதே அடைவது என்று சொல்லப்படுகிறது.
எப்பொழுதும்‌ இருக்கின்ற ஒன்றை, அறியாமல்‌ இருக்கிறோம்‌. அறிந்துகொண்ட பிறகு, அதை அடைந்துவிட்டோம்‌ என்று உபசாரமாக சொல்கிறோம்‌, அது உண்மையில்‌ அடைய இயலாததே; யாண்டும்‌ அடையப்பட்டிருப்பதால்‌.
7.2 ஸத்குருநாதரை நாடுதல்‌
கர்மயோகம்‌, உபாஸனை ஆகியவற்றை நிறைவேற்றி, தன்னுடைய உள்ளத்தை நன்கு தூய்மைப்படுத்திக்‌ கொண்டவன்‌, தத்துவப்‌ பொருளை நன்கு அறிந்துணர்வதற்காக, தனக்குரிய குருவை சாஸ்த்ர முறைப்படி அணுகி, அவருக்கு ஸேவைகள்‌ புரிய வேண்டும்‌.
நிச்சயமாக ஸமுதாயத்தில்‌ எல்லோருக்கும்‌ குலகுரு என்று ஒருவர்‌ இருப்பார்‌ என்பதை ஆசிரியர்‌ இதன்மூலம்‌ சொல்ல விரும்புகிறார்‌.
பாரதப்‌ பண்பாட்டில்‌ குரு என்ற ஒருவர்‌ இல்லாமல்‌ ஒரு குடும்பமும்‌ இல்லை. எந்தவித கஷ்டத்தையும்‌ அவரிடம்‌ சொல்லி, ஆசீர்வாதம்‌ பெறுவதும்‌, அறிவுரை பெறுவதும்‌, குடும்பப்‌ ப்ரச்சனைகளை அவரிடம்‌ சொல்லித்‌ தீர்த்துக்கொள்வதும்‌ வழக்கம்‌. குரு என்பவர்‌ சுயநலமில்லாமல்‌ எல்லோருக்கும்‌ உதவி செய்பவர்‌.
ஆசிநோதி ஹிராஸ்த்ரார்த்தம்‌ ஆசாரே ஸ்தாபயத்யபி।
ஸ்வயம்‌ ஆசரதே யஸ்ச தமாசார்யம்‌ ப்ரசக்ஷதே।।
சாஸ்த்ர கருத்துக்களை முழுமையாக விளக்குபவர்‌, மக்களை நல்லொழுக்கத்தில்‌ இருக்கும்படி செய்பவர்‌. தானும்‌ அதனைக்‌ கடைப்பிடித்துக்‌ காட்டுபவர்‌ எவரோ, அவரை ஆசார்யர்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன.
ஆசார்யரின்‌ முதல்‌ தகுதி, சாஸ்த்ரப்படி அவர்‌ வாழ வேண்டும்‌. எல்லாவற்றையும்‌ புத்தகத்தைக்‌ கொண்டு கற்றுக்கொடுத்துவிட முடியாது. வாழ்ந்துகாட்டித்தான்‌ புரிய வைக்க முடியும்‌. புத்தகம்‌ அதற்கு உதவிபுரியும்‌.
ஆசார்யரின்‌ இரண்டாவது தகுதி சாஸ்த்ர கருத்துக்களைத்‌ தெள்ளத்‌ தெளிவாகப்‌ புரிய வைப்பதே ஆகும்‌.
மூன்றாவது தகுதி, மற்றவர்களையும்‌ சாஸ்த்ரப்படி வாழும்படி செய்ய வேண்டும்‌. மாணவர்களை நல்வழியில்‌ தூண்ட வேண்டும்‌. இந்த மூன்றும்‌ யாரிடம்‌ இருக்கிறதோ, அவருக்கு ஆசார்யர்‌ என்று பெயர்‌. சுச்ரூஷா என்றால்‌ கேட்க விருப்பம்‌ என்று பொருள்‌. சாஸ்த்ரம்‌ கேட்கும்‌ ஆவலில்‌ நாம்‌ அவருக்குச்‌ செய்கின்ற சிறு சிறு ஸேவைகளையே சுச்ரூஷா என்கிறோம்‌.
குருவினிடமிருந்து சாஸ்த்ர கருத்துக்களைக்‌ கேட்டுத்‌ தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்‌, குருவிற்கும்‌, நமக்கும்‌ நல்ல இணக்கம்‌ இருக்க வேண்டும்‌. அதன்பொருட்டு குருநாதருக்கு ஸேவைகள்‌ செய்கிறோம்‌.
குருவிற்குப்‌ பணிவிடை செய்வதால்‌, பணிவு உண்டாகும்‌. அவருடைய தவ ஆற்றல்‌ நமக்கு அருள்புரியும்‌.
இவ்வாறு, குருஸேவையினால்‌ கண்ணுக்குத்‌ தெரிகின்ற, கண்ணுக்கும்‌ கருத்துக்கும்‌ எட்டாத பல நற்பயன்கள்‌ ஏற்படுகின்றன.
பகவான்‌ ஸ்ரீக்ருஷ்ணர்‌ கீதையில்‌, ஆசார்ய உபாஸநம்‌ என்ற பண்பைக்‌ கூறுகிறார்‌.
குருவை வழிபடுவதால்‌ கிடைக்கும்‌ முதல்‌ பலன்‌ புண்ணியம்‌. குரு, வேறு, ஈச்வரன்‌ வேறு அல்ல என்று சாஸ்த்ரம்‌ கூறியிருக்கிறது.
ஈச்வரன்தான்‌ குரு வடிவில்‌ இருப்பதாக குருகீதை கூறுகிறது. குருவை வணங்குவது ஈச்வரனை வணங்குவதற்கு நிகரானது. கடவுளை வழிபட்டால்‌ கிடைக்கும்‌ புண்ணியம்‌, குருவை வழிபடுவதாலும்‌ கிடைக்கும்‌.
இறைவனைப்‌ போற்றி வழிபடுவதால்‌, அத்ருஷ்ட பலன்‌ கிடைக்கும்‌; குருவைக்‌ கடவுளாகக்‌ கருதி வழிபட்டால்‌ அத்ருஷ்ட பலனும்‌, த்ருஷ்ட பலனும்‌ ஒருசேரக்‌ கிடைக்கும்‌. அத்ருஷ்ட பலன்‌ புண்யம்‌; த்ருஷ்ட பலன்‌ ஞானோபதேசம்‌.
இரண்டாவது பலன்‌, சாஸ்த்ரத்தில்‌ நம்பிக்கை உறுதியாகும்‌. குரு பேசுவது அனைத்தும்‌ சாஸ்த்ர கருத்துக்களே ஆகும்‌. சாஸ்த்ரத்தைத்‌ தவிர வேறு எதையும்‌ பற்றி அவர்‌ பேசுவதில்லை.
சாஸ்த்ரம்‌ இவ்வாறு உபதேசித்திருக்கிறது என்று சாஸ்த்ர ப்ரமாணத்தைத்‌ திரும்பத்‌ திரும்ப வலியுறுத்திக்‌ கூறுகின்ற காரணத்தினால்‌, குருவை வழிபடுகின்ற சீடனுக்கு, தேவையான ஸேவையைச்‌ செய்கின்ற சீடனுக்கு சாஸ்த்ரத்தில்‌ ச்ரத்தை கூடுகிறது.
மூன்றாவது பலன்‌, குருவின்‌ குணங்கள்‌ சீடனுக்கு வருகின்றன. நமக்கு மிகவும்‌ பிடித்தவர்கள்‌ போன்று நடக்க முயல்வது நம்‌ இயல்பு. தான்‌ யாரை உயர்வாக நினைக்கிறானோ, அவருடைய குணத்தைப்‌ பின்பற்றுவது மனித இயல்பு.
பலர்‌ சினிமா நடிகர்களை வழிபடுகிறார்கள்‌, அவர்களது நடை உடை பாவனைகளைப்‌ பின்பற்றுகிறார்கள்‌. குரு என்பவர்‌ உத்தமமான குணங்களை உடையவர்‌. அவரைப்‌ போன்றே புறத்தோற்றத்தில்‌ ஆக வேண்டும்‌ என்று அவசியமில்லை. அவருடைய குணங்கள்‌ நம்மையும்‌ அறியாமல்‌ நம்மிடம்‌ வர ஆரம்பிக்கும்‌.
அமைதியாக இருப்பது, எந்தச்‌ செயலை எப்படிச்‌ செய்ய வேண்டுமோ, அப்படிச்‌ செய்வது, தர்மத்தை எப்படிக்‌ கடைப்பிடிப்பது என்பவையெல்லாம்‌ நம்மையும்‌ அறியாமல்‌ நம்முள்‌ பதியும்‌. குருவுடன்‌ கூட இருந்தால்தான்‌ இதனை அறிந்துகொள்ள முடியும்‌.
குருகுலத்தில்‌, குருவுடன்‌ சேர்ந்து வாழ்ந்தால்தான்‌ இதனைக்‌ கடைப்பிடிக்க முடியும்‌. குருவின்‌ நல்ல குணங்கள்‌ நமக்கும்‌ வருகின்றன.
எல்லாவற்றையும்விட, அவரின்‌ உபதேச விஷயத்தில்‌ ச்ரத்தை இருப்பதால்‌ உயர்ந்த ஞானம்‌ கிடைக்கிறது.
தர்ம சாஸ்த்ரத்தைப்‌ பற்றிய ஞானத்திலும்‌ தெளிவு கிடைக்கிறது. தத்துவ சாஸ்த்ரத்தையும்‌ தெளிவாகக்‌ கேட்டு அறிந்துகொள்ள முடிகிறது.
குரு நின்றுகொண்டிருக்கின்றபோது நாம்‌ அமரக்‌ கூடாது. அவருக்கு, ஸமமான ஆஸனத்தில்‌ அமரக்‌ கூடாது. அவர்‌ பேசுகின்றபோது, குறுக்கே பேசக்‌ கூடாது - இப்படி குருவிடம்‌ எப்படி நடந்துகொள்ள வேண்டும்‌ என்பதற்கு சாஸ்த்ரத்தில்‌ பல்வேறு விதிகள்‌ கூறப்பட்டுள்ளன. அவை குருகீதையிலும்‌, பல சாஸ்த்ர நூல்களிலும்‌ இருக்கின்றன.
குரு நல்ல மனநிலையில்‌ இருக்கும்போது, ப்ரஸன்னமாக இருக்கும்‌ நேரத்தில்‌, நான்‌ ஒரு கேள்வி கேட்‌௬ வேண்டும்‌ என்று நினைக்கிறேன்‌, கேட்கலாமா என்று அனுமதிபெற்று குருவிடம்‌ கேள்வி கேட்க வேண்டும்‌. அவரிடமிருந்து பராவித்தையைக்‌ கேட்க வேண்டும்‌.
பராவித்யா என்றால்‌, உபநிஷத்‌, ப்ரஹ்மவித்யா, ஆத்மவித்யா என்று பொருள்‌.
7.3 ச்ரவணம்‌- கேட்டல்‌
கேட்பது என்றால்‌ வெறுமனே காதுகொடுத்துக்‌ கேட்டுக்‌ கொண்டிருப்பதல்ல. உபநிஷத்துக்களின்‌ உள்ளார்ந்த கருத்து என்ன என்பதைக்‌ கேட்க வேண்டும்‌. உபநிஷத்தின்‌ தாத்பர்யத்தைத்‌ தெரிந்துகொள்வதே ச்ரவணம்‌. அதற்குக்‌ காதுகளைப்‌ பயன்படுத்துகிறோம்‌. கேட்டாலே புண்ணியம்‌ என்று ஏனோதானோவென்று அரைகுறையாகக்‌ கேட்கக்‌ கூடாது.
வேதவாக்கியங்களை ரிஷிகள்‌ இறைவனுடைய ஆணைவடிவமாக, ஆகாசத்திலிருந்து க்ரஹித்திருக்கிறார்கள்‌. அவை அருள்வாக்கு போன்றவை. அவற்றில்‌ சில இடங்களில்‌ வரிசை இருக்காது.
சிலவிடங்களில்‌ ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்றும்‌, சிலவிடங்களில்‌ ஜீவாத்மாவும்‌ பரமாத்மாவும்‌ ஒன்று என்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறியிருக்கிறது.
சில இடங்களில்‌ கர்மாவினால்‌ மோக்ஷம்‌ என்று கூறுவதுபோல்‌ வாக்கியங்கள்‌ இருக்கின்றன. பல இடங்களில்‌ கர்மாவினால்‌ பயன்‌ இல்லை என்று கூறியிருக்கிறது. இப்படி மாறி மாறி இருக்கின்றன. குழப்பமாக இருந்தால்‌, நம்மால்‌ தெளிந்த அறிவைப்‌ பெற முடியாது. அதற்கு ஓர்‌ ஆராய்ச்சிமுறை இருக்கிறது. அதற்குத்தான்‌ மீமாம்ஸா என்று பெயர்‌ (method of enquiry).
ச்ரத்தையோடும்‌, பக்தியோடும்‌ செய்யப்படுகின்ற சாஸ்த்ர விசாரத்திற்கு மீமாம்ஸா என்று பெயர்‌. பூஜித விசார: என்று ஆநந்தகிரி அழகாகக்‌ குறிப்பிடுகிறார்‌.
இது அறிவியல்‌ ஆராய்ச்சிப்‌ படிப்பைப்‌ போன்றதன்று, சாந்தி பாடம்‌, குரு ஸ்தோத்ரம்‌ கூறி, குருவை வணங்கி பக்தியோடு படிக்கின்ற படிப்பாகும்‌. “அருளோடு கூடிய அறிவு" என்பார்‌ ஸ்வாமீ சித்பவாநந்தர்‌. அருளோடு கூடிய அறிவுதான்‌ உண்மையிலேயே துன்பத்தைப்‌ போக்கும்.
வேதத்தில்‌ சில வாக்கியங்கள்‌ குழப்புவதுபோல்‌ இருக்கின்றன. புரிந்துகொள்ள நமக்குப்‌ பக்குவம்‌ இல்லை. அதனால்‌ பெரியவர்கள்‌ அதற்கு ஒரு முறையை வைத்திருக்கிறார்கள்‌.
குருமுகத: உபக்ரமாதி ஷட்லிங்கபூர்வக வேதாந்த மாஸ்த்ர தாத்பர்ய நிஸ்சய: ஸ்ரவணம்‌।
குருமுகமாக, உபக்ரமம்‌ முதலான ஆறு (குறிப்புகளோடு) அடையாளங்களோடு, வேதாந்த சாஸ்த்ரத்தின்‌ தாத்பர்யத்தை அறிந்துகொள்ளுதல்‌ ச்ரவணம்‌.
உபக்ரமோபஸம்ஹாரெள அப்யாஸோ$பூர்வதா பலம்‌।
அர்த்தவாதோபபத்தீச லிங்கம்‌ தாத்பர்ய நிர்ணயே।
என்பது எப்படி விசாரம்‌ செய்ய வேண்டும்‌ என்பதற்குரிய பூர்வ மீமாம்ஸா விதிமுறை. உபநிஷத்துக்களின்‌ மையக்‌ கருத்து எது என்பதை இதை வைத்துத்தான்‌ நிர்ணயம்‌ செய்கிறோம்‌.
ஆறு குறிப்புகள்‌
  1. உபக்ரம: (தொடக்கம்‌) உபஸம்ஹாரம்‌ (முடிவு)
  2. அப்யாஸ: (மறுபடி மறுபடி எந்தக்‌ கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தல்‌)
  3. அபூர்வதா (வேறு எந்த ப்ரமாணத்தினாலும்‌ தெரிந்துகொள்ள முடியாத தன்மை)
  4. பலம்‌ (பயன்‌)
  5. உபபத்தி (யுக்தி)
  6. தொடக்கமும்‌ முடிவும்‌ ஒரே கருத்தைப்‌ பற்றியதாக இருக்க வேண்டும்‌. உதாரணத்திற்கு பகவத்கீதையில்‌, இரண்டாவது அத்யாயத்தின்‌ பதினோராவது ச்லோகம்தான்‌ தொடக்கம்‌. ( நாநுஸோசந்தி பண்டிதா:) ஞானிகள்‌ கவலைப்பட மாட்டார்கள்‌ என்று தொடங்குகிறார்‌ பகவான்‌. கவலைப்படாதே (மா ஶுச: ।) என்று முடிக்கிறார்‌. (18-66)
உபக்ரமும்‌, உபஸம்ஹாரமும்‌ சேர்ந்து ஒரு குறிப்பாகும்‌.
அப்யாஸ: - பலவிடங்களில்‌
ந த்வம்‌ ஸோசிதுமர்ஹஸி।
நாநுஸோசிதுமர்ஹஸி। தத்ர கா பரிதேவநாட மா ரச; ஸம்பதம்‌ தைவீம்‌
கவலைப்படத்‌ தேவையில்லை என்ற கருத்தை பகவான்‌ திரும்பத்‌ திரும்பக்‌ கூறுகிறார்‌.
எந்த ஒரு கருத்தை அந்த சாஸ்த்ரம்‌ திரும்பத்‌ திரும்ப அதிகமாக வலியுறுத்திச்‌ சொல்கிறதோ, அதுதான்‌ அந்த சாஸ்த்ரத்தின்‌ மையக்‌ கருத்தாகும்‌.
மேலும்‌, வேறு எந்த சாஸ்த்ரத்திலும்‌ தெரிந்துகொள்ள முடியாத விஷயம்‌ அதில்‌ கூறப்பட்டிருக்க வேண்டும்‌. வேதபூர்வத்தில்‌ இந்த ஞானம்‌ கிடைக்காது.
ஜீவாத்மாவும்‌ பரமாத்மாவும்‌ ஒன்று என்று கூறும்‌ அத்வைதம்‌ ஞானம்‌, வேதாந்த சாஸ்த்ரத்தில்‌ கூறப்படும்‌ அபூர்வ விஷயமாகும்‌.
எந்த பலனை அந்த சாஸ்த்ரம்‌ கூறுகிறதோ, அந்தப்‌ பலனை வைத்து தாத்பர்யத்தை அறிகிறோம்‌. எந்த ஒன்றை அதிகமாகப்‌ புகழ்கிறதோ, அது அந்த சாஸ்த்ரத்தின்‌ தாத்பர்யம்‌.
புகழுரை அர்த்தவாதம்‌ எனப்படும்‌. அர்த்தவாதமும்‌ இருவகைப்படும்‌. ஒன்று ஸ்துத்யர்த்தவாதம்‌, மற்றொன்று நிந்தார்த்தவாதம்‌.
ஒன்றை நிந்திப்பதன்‌ மூலம்‌, மற்றொன்றை புகழ்வது நிந்தார்த்தவாதம்‌. கர்மகாண்டத்தை இகழ்வதன்‌ மூலம்‌, ஞானகாண்டத்தைப்‌ புகழ்கின்ற வாக்கியங்கள்‌, நிந்தார்த்தவாத: என்று சொல்லப்படும்‌. ஞானகாண்டம்‌ நேரடியாகப்‌ புகழப்படுகின்ற இடங்கள்‌ ஸ்துத்யர்த்தவாத: எனப்படும்‌.
கர்ம காண்ட கண்டனத்தை, ஞானகாண்டத்தின்‌ பெருமையைக்‌ கூறியிருப்பதாகப்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. கர்மகாண்டத்தை கண்டிப்பதில்‌, அதற்கு தாத்பர்யம்‌ இல்லை, ஞானகாண்டத்தைப்‌ புகழ்வதில்தான்‌ தாத்பர்யம்‌. இரண்டுமே மனிதனுக்குத்‌ தேவை. ஆனால்‌ ஞானகாண்டத்திற்குச்‌ செல்வதற்கு கர்மகாண்டத்தில்‌ உள்ள குறைபாடுகளைச்‌ சுட்டிக்‌ காட்டியாக வேண்டும்‌.
அடுத்ததாக, யுக்தி - கூறுகின்ற விஷயத்திற்கு ந்யாயம்‌ கூற வேண்டும்‌.
கிழிந்த ஆடைகளை களைந்துவிட்டு, எப்படிப்‌ புதிய ஆடைகளை மனிதன்‌ உடுத்திக்‌ கொள்கிறானோ, அப்படி ஜீவாத்மா உடல்களை விட்டுவிட்டு, வேறு உடல்‌ எடுக்கிறது என்று பகவான்‌ கீதையில்‌ கூறுகிறார்‌. யுக்திக்கு முக்கியம்‌ உதாரணம்‌.
வேதத்தில்‌ ந்யாயமாகக்‌ கூறும்‌, யுக்தி வாக்கியங்கள்‌ இருக்கின்றன. யுக்திக்குரிய விஷயங்கள்‌ தாத்பர்யமாக எடுத்துக்கொள்ளப்படும்‌.
மெய்ப்பொருளே உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, குடம்‌ உண்மையல்ல, மண்ணே உண்மை என்ற உதாரணம்‌ உபநிஷத்தில்‌ கூறப்படுகிறது.
எங்கும்‌ நிறைந்திருக்கின்ற ஆகாசம்‌ எப்படி எதிலும்‌ ஒட்டாமல்‌ இருக்கிறதோ, அதுபோன்று எல்லா உடல்களிலும்‌ இருக்கின்ற ஆத்மா எதிலும்‌ ஒட்டுவதில்லை.
எப்படி ஒரே ஸூர்யன்‌ அனைத்து உலகங்களையும்‌ ஒளிர்விக்கின்றானோ, அப்படி ஆத்மா ஒன்றே அனைத்தையும்‌ ப்ரகாசப்படுத்துகிறது என்பது போன்று பல உதாரணங்கள்‌ கீதையில்‌ கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு குருநாதரிடம்‌ சென்று, வேதாந்த நூல்களை முறையாகக்‌ கற்க வேண்டும்‌. மத்தைப்‌ போட்டுக்‌ கடைந்தால்‌, வெண்ணெய்‌ வருவதுபோல்‌, விசாரம்‌ செய்தால்தான்‌ ஞானம்‌ வரும்‌.
"கடைந்தெடுத்தளித்தேன்‌ இந்த கைவல்ய நவநீதத்தை" என்கிறார்‌ கைவல்ய நவநீத ஆசிரியர்‌ ஸ்ரீதாண்டவராய ஸ்வாமிகள்‌.
ச்ரவணத்தை குருவின்‌ துணையின்றி, நாமாகச்‌ செய்யக்கூடாது. குருநாதருக்குத்தான்‌ ஸம்ப்ரதாயம்‌ தெரியும்‌. ஏற்றுக்கொள்ள முடியாத சில வாக்கியங்களுக்கு எப்படிப்‌ பொருள்‌ கூற வேண்டும்‌, ஏற்படும்‌ சந்தேகங்களுக்கு நியாயமாக எப்படி பதில்‌ கூற வேண்டும்‌ என்பதையெல்லாம்‌ குருநாதர்‌ அறிந்திருப்பார்‌.
ஆதிசங்கரர்‌, முண்டகோபநிஷத்‌ உரையில்‌, "ஒருவன்‌ வ்யாகரணம்‌, தர்க்கம்‌, பூர்வ மீமாம்ஸா ஆகிய சாஸ்த்ரங்களைப்‌ படித்திருந்தாலும்‌, வேதாந்தத்தைத்‌ தனியாகப்‌ படிக்கக்கூடாது” என்று கூறுகிறார்‌.
வேதாந்த சாஸ்த்ரத்தைக்‌ கற்பதற்கு வ்யாகரணம்‌, தர்க்கம்‌ முதலியவை உதவலாம்‌. ஆனால்‌, வெறும்‌ தர்க்கத்தை, வ்யாகரணத்தை வைத்துப்‌ படித்துவிட முடியாது.
ஸம்ப்ரதாயம்‌ என்பது முக்கியம்‌. இடத்திற்குத்‌ தகுந்தாற்போல்‌, பொருள்‌ மாறும்‌. மாண்டூக்ய காரிகையில்‌, கடோபநிஷத்தில்‌, தர்மம்‌ என்ற சொல்லுக்கு ப்ரஹ்மன்‌ என்று பொருள்‌ கூறப்பட்டிருக்கிறது, கீதையில்‌ ஒரிடத்தில்‌, ப்ரஹ்மன்‌ என்ற சொல்லுக்கு மாயை என்று பொருள்‌ கூறப்பட்டிருக்கிறது.
எந்த அகராதியிலும்‌ இந்தப்‌ பொருளைத்‌ தெரிந்துகொள்ள முடியாது, எந்த இலக்கணத்தை வைத்துக்கொண்டும்‌, இதனைத்‌ தெரிந்துகொள்ள முடியாது. தர்க்கத்தில்‌ இருக்கின்ற குறைபாடுகளை அறிந்து, தர்க்கத்தைப்‌ பயன்படுத்தாமல்‌, சாஸ்த்ரம்‌ சில கருத்துக்களைக்‌ கூறும்‌.
ஆதிசங்கரர்‌ ப்ரஹ்மஸூத்ர உரைகளில்‌, தர்க்கத்தைக்கொண்டு எல்லா மதங்களையும்‌ நிராகரித்து, பிறகு தர்க்கமும்‌ பயனற்றது என்று கூறுகிறார்‌. தர்க்கத்தினால்‌ கடவுளை நிரூபிக்க முடியாது என்பதை தர்க்கபூர்வமாக நிரூபிக்கிறார்‌. ச்ருதிதான்‌ ப்ரமாணம்‌ என்பதை நிலைநாட்டுகிறார்
‌. கீதையில்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ உத்தராயண புண்யகாலம்‌, தக்ஷிணாயண புண்ய காலம்‌ பற்றிக்‌ கூறப்பட்டிருக்கிறது. அது காலம்‌ அல்ல, தேவதை என்று ஆதிசங்கரர்‌ விளக்கம்‌ கூறியிருக்கிறார்‌. பொதுவாக, நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும்‌ விடை அளிக்கிறார்‌. கடோபநிஷத்தில்‌ நாம்‌ நினைத்துப்‌ பார்க்காத சந்தேகங்களைக்‌ கூறி அதற்கு ப்ரஹ்மஸூத்ரத்தில்‌ பதில்‌ கூறுகிறார்‌.
ஆக, குரு இல்லாமல்‌ வேதாந்தம்‌ படிக்கக்‌ கூடாது. குருமுகமாக வேதாந்த கருத்துக்களைக்‌ கேட்டு, அதன்‌ மையக்கருத்தை உள்வாங்கிக்‌ கொள்வதுதான்‌ ச்ரவணம்‌. காதுகொடுத்துக்‌ கேட்பதால்‌, ச்ரவணம்‌ என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு உபநிஷத்திலும்‌ என்ன கூறப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு உபநிஷத்தின்‌ மையக்கருத்து என்ன என்பதைத்‌ தெளிவாகப்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌.
ச்ரவணம்‌ என்றால்‌ கேட்பது என்று மட்டும்‌ பொருளல்ல. கேட்பதன்‌ மூலம்‌ அறிவு ஏற்படுகிறது. அந்த நிச்சய ஞானம்தான்‌ முக்கியம்‌. இது புராணக்கதை கேட்பது போன்றதன்று. அதனைக்‌ கேட்பதற்கு புத்தியில்‌ மிகுந்த முயற்சி தேவையில்லை.
ஆனால்‌, உபநிஷத்‌ விசாரம்‌ செய்வதற்கு புத்தி சக்தியைப்‌ பயன்படுத்த வேண்டும்‌. சரியாகப்‌ பயன்படுத்தவில்லை என்றால்‌ புரியாது.
ஸம்ப்ரதாயப்படி ப்ரஸ்தாந த்ரய பாஷ்யம்‌ படிப்பதுதான்‌ ச்ரவணம்‌. முக்தியை அடைவதற்குரிய ஞானத்தைத்‌ தருகின்ற ப்ரமாணமாக அமைந்திருக்கிற மூன்று நூல்களுக்கு ப்ரஸ்தாந த்ரயம்‌ என்று பெயர்‌. அவை உபநிஷத்துக்கள்‌, கீதை, ப்ரஹ்மஸூத்ரம்‌ ஆகும்‌. முக்திக்கு வழி இந்த மூன்று நூல்களில்‌ இருக்கிறது.
7.4 சிந்தித்தல்‌ - மநநம்‌ உபநிஷத்‌, எல்லாம்‌ அறிந்த கடவுளும்‌, ஒன்றும்‌ அறியாத நீயும்‌ ஒன்று என்று கூறுகிறது. ஜீவாத்மாவும்‌ பரமாத்மாவும்‌ ஒன்று என்று கூறும்பொழுது, நிறைய சந்தேகங்கள்‌ ஏற்படும்‌.
கடவுளும்‌ நாமும்‌ எப்படி ஓன்றாக முடியும்‌? ஏழையும்‌ பணக்காரனும்‌ ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது ? இருளும்‌ ஒளியும்‌ ஒன்று என்று கூறுவதை எப்படிப்‌ புரிந்துகொள்வது ?
ஏனென்றால்‌, நம்‌ அனுபவம்‌ வேற்றுமையை அறிவது, சாஸ்த்ரம்‌ ஒற்றுமையை உணர்த்துகிறது. உண்மையில்‌ வேற்றுமையே இல்லை, எல்லாம்‌ ஒன்றாகத்தான்‌ இருக்கிறது, என்பதை எப்படிப்‌ புரிந்துகொள்வது என்பதற்கு, நிறைய சிந்திக்க வேண்டும்‌.
சாஸ்த்ரம்‌ எந்தக்‌ கோணத்தில்‌ பேசுகிறது? அனுபவத்தின்‌ கோணத்தில்‌ பேசுகிறதா, அடிப்படை தத்துவத்தைப்‌ பேசுகிறதா? என்று விசாரம்‌ செய்ய வேண்டும்‌. அதற்கு மனனம்‌ என்று பெயர்‌.
யுக்திபூர்வக சிந்தநம்‌ மநநம்‌।
சாஸ்த்ரத்தில்‌ சரத்தை இருப்பதால்‌, சாஸ்த்ரத்தை மறுப்பதில்லை. அதே நேரத்தில்‌ அது கூறுவது புரியவில்லை, ஏற்றுக்கொள்ளவும்‌ முடியவில்லை. அப்பொழுது செய்ய வேண்டியது மனனம்‌.
ஐயத்தை அகற்றிக்‌ கொள்வதற்காக செய்யப்படுவது மனனம்‌. பெரும்பாலும்‌, ச்ரவணத்தின்போதே குரு மனனத்தையும்‌ கொடுத்துவிடுவார்‌. மனனத்திற்கும்‌ குருவின்‌ உதவி வேண்டும்‌.
ப்ரஹ்மஸூத்ரம்‌ மனனத்துக்குரிய நூல்‌ (உபநிஷத்துக்களும்‌, கீதையும்‌ ச்ரவணத்துக்குரிய நூல்கள்‌).
வடநாட்டில்‌ ப்ரஹ்மஸூத்ரம் படித்தால்தான்‌ வேதாந்தம்‌ படித்ததாக ஆகும்‌. ப்ரஹ்ம ஸூத்ரம்‌ படிக்க வேண்டும்‌ என்றால்‌, அதற்கு உபநிஷத்தும்‌ கீதையும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. துறவி தினமும்‌ ப்ரஹ்மஸூத்ரம்‌ படித்தாக வேண்டும்‌.
ப்ரஹ்மஸூத்ரத்தைத்‌ தெளிவாகக்‌ கற்பதன்‌ மூலம்‌ அசைக்க முடியாத அறிவு ஏற்படுகின்றது. பூர்ணமாகப்‌ புரியும்வரை படிக்க வேண்டும்‌.
இஷ்ட ஸித்தி, அத்வைத ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி, சித்ஸுகி போன்றவை மனனத்துக்குரிய நூல்கள்‌. நாம்‌ நினைத்தே பார்க்க முடியாத சந்தேகங்களைக்‌ கூறி, அவற்றுக்கு ஸமாதானம்‌ கூறி, அந்த ஸமாதானம்‌ ஏன்‌ அவ்வாறு கூறப்படுகிறது என்று அதற்கு விளக்கம்‌ கூறுகின்றன.
சாஸ்த்ரம்‌ ப்ரத்யக்ஷ அனுபவத்தை மறுக்கவில்லை, ஏற்றுக்கொள்கிறது. ஆனால்‌ அது ஸத்யமில்லை என்று கூறுகிறது. விசாரம்‌ செய்து பார்த்தால்‌ அது உண்மையில்லை என்பது விளங்கும்‌.
ஸூர்யன்‌ உதிக்கிறான்‌, மறைகிறான்‌ என்பது நம்‌ அனுபவம்‌. ஆனால்‌ ஸூர்யன்‌ இருந்த இடத்தில்தான்‌ இருக்கிறது, பூமி சுற்றுகிறது என்று அறிவியல்‌ கூறுகிறது.
எது உண்மை?
அனுபவம்‌ மாறவில்லை என்றபோதிலும்‌, அறிவியல்‌ கூறுவதைத்தான்‌ ஏற்றுக்கொள்கிறோம்‌.
அதுபோல்‌, உலகம்‌ உண்மை என்பது அனுபவமாக இருந்தாலும்‌, உலகம்‌ ஒரு மாயத்தோற்றம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதை ஏற்றுக்கொண்டுதான்‌ ஆக வேண்டும்‌.
மனனம்‌ செய்வதால்‌, சந்தேகம்‌ முழுவதும்‌ நீங்குகிறது.
நம்‌ ப்ரத்யக்ஷ அனுபவம்‌ வெறும்‌ தோற்றம்தான்‌. சாஸ்த்ர உபதேசம்தான்‌ சரி என்று யுக்திபூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்‌.
7.5 நிதித்யாஸநம்‌ - ஆழ்ந்து எண்ணுதல்‌ (தெளிதல்‌)
வேற்றுமை என்பது ஒரு மாயத்தோற்றம்‌. உண்மையில்‌ இருப்பது ஒரே பொருள்‌ மட்டுமே. வேற்றுமையே இல்லை, நான்‌ பரம்பொருளாக இருக்கிறேன்‌, நான்‌ உடல்‌ அல்ல, மனம்‌ அல்ல, புத்தி அல்ல, ஈச்வரனும்‌ இல்லை, இருப்பது ஒரே பொருள்‌, அது நானே என்பது சந்தேகமில்லாமல்‌ தெளிவாகப்‌ புரிந்துவிட்டது.
ஆனாலும்‌, நான்‌ உடலாக இருக்கிறேன்‌ என்ற அபிமானம்‌ நம்மிடம்‌ இருக்கிறது. எவரேனும்‌ நம்மைத்‌ தவறாகச்‌ சொன்னால்‌ உடனே கோபம்‌ வருகிறது. நீண்டநாள்‌ பழக்கத்தால்‌ நம்மை நாம்‌ உடலாகக்‌ கருதிக்கொள்கிறோம்‌.
நான்‌ உடல்‌, மனம்‌ என்ற எண்ணத்திற்கு விபரீத பாவனை என்று பெயர்‌. ப்ரஹ்மனை சரீரமாக நினைக்கின்ற எண்ணத்திற்கு விபரீத பாவனை என்று பெயர்‌. இந்த விபரீத பாவனை நீங்குவதற்காக நிதித்யாஸனம்‌ செய்ய வேண்டும்‌.
எந்த ஒரு கருத்தை ச்ரவணத்தினால்‌ அறிந்து, மனனத்தினால்‌ உறுதிசெய்து கொண்டோமோ, அந்தக்‌ கருத்தை இடைவிடாமல்‌ மனதில்‌ த்யானம்‌ செய்வதுதான்‌ நிதித்யாஸனம்‌.
நான்‌ பரம்பொருளாக இருக்கிறேன்‌ என்ற அறிவு உறுதிபெறுவதற்காக நிதித்யாஸநம்‌ செய்ய வேண்டும்‌.
நிதித்யாஸனம்‌ என்பது வேதாந்த கருத்துக்களை உள்ளத்தில்‌ ஆழ்ந்து எண்ணுகிற த்யானம்‌ ஆகும்‌.
மனதில்‌ ஆசை தோன்றினால்‌, “ஆசைப்படுவது மனதின்‌ வேலை. எனக்கு ஒன்றும்‌ தேவையில்லை, நான்‌ பூர்ணமாக இருக்கிறேன்‌. குறைவு இருந்தால்தானே நிறைவைத்‌ தேட வேண்டும்‌? நான்‌ குறைவிலா நிறைவு வடிவமாக நான்‌ இருக்கிறேன்‌. குறை என்பது வெறும்‌ தோற்றமே" என்று த்யானம்‌ பண்ண வேண்டும்‌. உடலிலோ, மனதிலோ தூய்மை இல்லையென்றால்‌, “தூய்மையின்மை என்பது உடலின்‌ தன்மை, மனதின்‌ தன்மை. நான்‌ ஆத்ம ஸ்வரூபம்‌, ப்ரஹ்ம ஸ்வரூபம்‌. நான்‌ தூய்மையானவன்‌. மனதில்தான்‌ அழுக்கு, நான்‌ தூய்மையாகத்தான்‌ இருக்கிறேன்‌" என த்யானம்‌ செய்ய வேண்டும்‌.
நிதித்யாஸநம்‌ செய்வதன்‌ மூலம்தான்‌ மெய்யறிவில்‌ நிலைத்திருக்க முடியும்‌.
ச்ரவண, மனனம்‌ செய்யாமல்‌, நான்‌ பரம்பொருளாக இருக்கிறேன்‌ என்று த்யானம்‌ செய்ய முடியாது.
ச்ரவண மனனத்திற்குப்‌ பிறகுதான்‌ நிதித்யஸனம்‌ செய்வதற்குத்‌ தகுதி ஏற்படும்‌.
7.6 நிதித்யாஸநம்‌ செய்வது எதற்காக?
நிதித்யாஸனம்‌ என்பது ஞானத்தைப்‌ பெறுவதற்காக அல்ல. பெற்ற ஞானத்தைத்‌ தக்க வைத்துக்கொள்வதற்காகத்தான்‌ நிதித்யாஸனம்‌.
நிதித்யாஸனம்‌ முக்திபெறுவதற்காக அல்ல. மோக்ஷம்‌ என்பது, அடையப்படக்கூடியது அல்ல என்பது ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டது. அறிந்துகொள்ளக்கூடியது, அறிந்துகொள்வது ச்ரவணத்தின்போது நிகழ்கிறது.
நிதித்யாஸனம்‌ என்பது புதிய அனுபவத்தைப்‌ பெறுவதற்காக அல்ல. யாண்டும்‌ நித்ய அனுபவமாக இருக்கின்ற பொருளை நன்கு மனதில்‌ சிந்திப்பதற்காக உள்ள ஸாதனை.
தியானத்தின்போது ஏதேனும்‌ அனுபவங்கள்‌ ஏற்படலாம்‌. கண்ணைத்‌ திறந்துகொண்டிருக்கும்போது எத்தனையோ அனுபவங்கள்‌ ஏற்படுவதுபோல, கண்ணை மூடிக்‌ கொண்டிருந்தாலும்‌ நமக்கு எத்தனையோ அனுபவங்கள்‌ வரும்‌. அந்த அனுபவங்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கக்‌ கூடாது.
அது எப்பேர்ப்பட்ட தெய்விக அனுபவமாக இருந்தாலும்‌, அந்த அனுபவங்கள்‌ அனைத்தும்‌ புறப்பொருளைச்‌ சார்ந்தவை, அநித்யமானவை. எனவே அந்த அனுபவங்களுக்கு நாம்‌ முக்கியத்துவம்‌ தரக்கூடாது.
தியானம்‌ செய்யும்போது ஏற்படுகின்ற அனுபவங்கள்‌ மனிதருக்கு மனிதர்‌ மாறுபடும்‌, ஆத்மா மாறாதது. ஸ்வரூபமாக இருக்கக்கூடிய ஆத்மா எல்லோருக்கும்‌ ஒரே அனுபவமாகத்தான்‌ இருக்கிறது. புதிய அனுபவங்கள்‌ தோன்றினால்‌, அது தியானத்திற்கு இடைஞ்சலே தவிர, அது தியானத்தின்‌ வளர்ச்சியைக்‌ குறிப்பதாகாது.
ஞானத்தில்‌ நிலைத்திருப்பதற்கு எந்த ஓர்‌ எண்ணத்தை மறுபடி மறுபடி நினைக்க வேண்டுமோ அந்த எண்ணத்தை மறுபடி மறுபடி நினைத்து, அதனை உறுதிப்படுத்துவதுதான்‌, நிதித்யாஸனத்தின்‌ வேலையே தவிர, புது அனுபவங்களுக்காகவோ, ஞானத்திற்காகவோ, முக்திக்காகவோ, ஆத்ம தரிசனத்திற்காகவோ நிதித்யாஸநம்‌ செய்யப்படுவதல்ல.
7.7 ஆத்மதரிசனம்‌
ஆத்மாதான்‌ அனைத்தையும்‌ தரிசிக்கிறது. ஆத்மாவை எப்படி தரிசிக்க முடியும்‌? நான்‌ எப்படி இந்த உடலை உணர்கிறேனோ, அதேபோன்று ஆத்மாவை உணர வேண்டும்‌ என்று சிலர்‌ கூறுகிறார்கள்‌.
நாம்‌ உடலை உணர்வதே ஆத்மாவினால்தான்‌. ஆத்மா இல்லையென்றால்‌, உடலையே உணர முடியாது. நம்மை உணர்ந்துதான்‌ உடலை உணர்கிறோம்‌. நம்மை உணராமல்‌ உடலை உணர முடியாது. உடலில்லாமல்‌ நம்மை நாம்‌ உணர முடியாது.
உணர்வை உணர்வதற்கு உடலும்‌ மனமும்‌ தேவை. உணர்வாக இருப்பதற்கு உடலும்‌ மனமும்‌ தேவையில்லை.
ஆத்மாவை உணர வேண்டும்‌ என்று கூறுவது பொருந்தாது. அவ்வாறு கூறினால்‌, ஆத்மா அனுபவிக்கப்படும்‌ பொருளாகிவிடும்‌. அதனை அனுபவிப்பவன்‌ யார்‌ என்ற கேள்வி எழும்‌. அனுபவிப்பவனை எப்படி அனுபவிக்க முடியும்‌? ஒருநாளும்‌ அனுபவிக்க முடியாது.
ஆத்மாநுபவம்‌ பெற்றவர்‌ என்று சொல்கிறோம்‌. ஆத்ம அனுபவம்‌ அல்ல, எல்லோருக்கும்‌, யாண்டும்‌ ஆத்மாவாக இருக்கும்‌ தன்னைப்‌ புரிந்துகொண்டவர்‌ என்று அதற்குப்‌ பொருள்‌.
பெரும்பாலான மக்கள்‌ ஆத்மானுபவம்‌, ப்ரஹ்மானுபவம்‌ பெறுவதற்காக ஏங்குகிறார்கள்‌. ஆத்மாவை, ப்ரஹ்மனை அனுபவிக்க முடியாது, அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. அனுபவிக்கப்படும்‌ எதுவும்‌ அநாத்மாவில்தான்‌ சேரும்‌. அனுபவிப்பவனே ஆத்மா. அனுபவிப்பவனை அனுபவிக்க முடியாது.
எனவே, ஆத்ம அனுபவம்‌ பெறுவதற்காக தியானம்‌ பண்ண வேண்டிய அவசியமில்லை.
ஆத்மா எப்பொழுதும்‌ அபரோக்ஷ அனுபவமாக இருக்கிறது. அபரோக்ஷமாக இருக்கக்கூடிய ஆத்மாவைப்‌ பற்றிய விஷயத்தைத்தான்‌ உபநிஷத்‌ பேசுகிறது. சாஸ்த்ரம்‌ படிக்கின்றபோதே, நாம்‌ பெறுவது அபரோக்ஷ ஞானத்தைத்தான்‌. அந்த அபரோக்ஷ ஞானத்தை உறுதிபடுத்துவதற்குத்தான்‌ நிதித்யாஸனம்‌.
அபரோக்ஷ ஞானம்‌, தடைகளோடு கூடியிருந்தால்‌, அந்தத்‌ தடைகளை நீக்கிக்கொள்வதற்காக, நிதித்யாஸனம்‌ செய்ய வேண்டும்‌. விபரீத பாவனை என்ற தடையை நீக்குவதற்காகத்தான்‌. நிதித்யாஸனம்‌. நான்‌ ப்ரஹ்மமாக இருக்கிறேன்‌ என்பதை ஆழ்ந்து எண்ணுவதற்காகத்தான்‌ நிதித்யாஸனம்‌.
உபாஸனையில்‌ ஸகுண ப்ரஹ்ம த்யானம்‌ செய்கிறோம்‌, நிதித்யாஸனத்தில்‌ நிர்குண ப்ரஹ்ம த்யானம்‌ செய்யப்படுகிறது. ஸகுண ப்ரஹ்மத்தை புறப்பொருளாக நாம்‌ தியானிக்க முடியும்‌. நிர்குண ப்ரஹ்மத்தை புறப்பொருளாக த்யானிக்க முடியாது. ஏனென்றால்‌ நிர்குண ப்ரஹ்மன்‌ வேறு, நாம்‌ வேறு அல்ல. நிர்குண ஆத்மாவும்‌, நிர்குண ப்ரஹ்மனும்‌ ஒன்றே. குடத்துக்குள்‌ இருக்கும்‌ ஆகாசமும்‌, கட்டிடத்தில்‌ இருக்கும்‌ ஆகாசமும்‌ ஒன்றாக இருப்பதைப்போல.
உபாதியில்தான்‌ வேற்றுமையே தவிர, உபஹிதத்தில்‌ வேற்றுமை இல்லை. குடமும்‌ கட்டிடமும்‌ உபாதி, ஆகாசம்‌ உபஹிதம்‌. அதுபோல, ஜீவன்‌ ஈச்வரன்‌ எல்லாம்‌ உபாதி, தூய உணர்வு அல்லது ப்ரஹ்மன்‌ உபஹிதம்‌.
உபாதியின்‌ கோணத்தில்தான்‌ வேற்றுமை, உபஹிதத்தின்‌ கோணத்தில்‌ வேற்றுமை இல்லை.
அஜ்ஞானியும்‌ ஆத்மஸ்வரூபம்தான்‌, ஞானியும்‌ ஆத்மஸ்வரூபம்தான்‌. ஞானிக்குத்‌ தான்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ என்ற ஞானம்‌ இருக்கிறது, அஜ்ஞானிக்கு, தான்‌ உடலுக்கு அந்நியமான ஆத்ம ஸ்வரூபம்‌ என்ற ஞானம்‌ இல்லை. தெரியவில்லை என்றாலும்‌, அவன்‌ ப்ரஹ்மாத்ம ஸ்வரூபம்தான்‌.
ஞானி எச்செயலைச்‌ செய்தாலும்‌ எப்பொழுதும்‌ நான்‌ ப்ரஹ்மம்தான்‌, செயல்கள்‌ அனைத்தும்‌ இந்த உடலைச்‌ சேர்ந்தவை என்ற விழிப்புணர்வோடு இருக்கிறான்‌.
அவனிடம்‌ நிம்மதியைத்‌ தேடி அலையும்‌ போரட்டம்‌ ஓய்ந்துவிட்டது. எங்கு சென்றால்‌ நிம்மதி கிடைக்கும்‌ என்று நிம்மதியைத்‌ தேடுகின்ற எண்ணத்தையே சாஸ்த்ரம்‌ நீக்கிவிடுகிறது.
அமைதியின்‌ ஸ்வரூபத்தை அறிந்து, அமைதியை அடைய வேண்டும்‌ என்ற எண்ணத்தை விடுவதே பேரமைதியாகும்‌. அமைதி என்றால்‌ என்னவென்றே தெரியாமல்‌, சும்மா விட்டுவிட்டேன்‌ என்று சொல்ல முடியாது. நானே அமைதியின்‌ ஸ்வரூபம்‌ என்ற ஞானமே ஒருவனுக்கு மனதில்‌ உள்ள துன்பங்களையெல்லாம்‌ போக்கிவிடும்‌. அவன்‌ நிலைத்த அமைதியை அடைகிறான்‌.
7.8 செய்யும்‌ செய்கை செய்து முடித்தவன்‌
பந்தமே ஒரு தோற்றம்‌ என்று சொல்லும்போது, முக்தியை மெய்‌ என்று எப்படிச்‌ சொல்ல முடியும்‌? பந்தமும்‌ ஒரு தோற்றம்‌, முக்தியும்‌ ஒரு தோற்றமே. உண்மையில்‌ நாம்‌ பந்தப்படவும்‌ இல்லை, நாம்‌ முக்தியடைய வேண்டிய அவசியமும்‌ இல்லை.
நாம்‌ பந்தப்பட்டால்தானே பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டும்‌ என்ற விருப்பம்‌ தோன்றும்‌? பந்தத்தை நீக்கிவிட்ட பிறகு, மோக்ஷத்தை அடைய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எங்கே வரப்போகிறது ?
அதன்‌ பிறகு, ஒருவன்‌ தன்னுடைய முன்னேற்றத்திற்காகச்‌ செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை. அடைய வேண்டிய குறிக்கோளை அடைந்துவிட்ட நிறைவு உள்ளத்தில்‌ தோன்றுகிறது. ஏதேனும்‌ ஒன்றை அடைய வேண்டும்‌ என்றால்தான்‌ ஒன்றைச்‌ செய்ய வேண்டும்‌. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.
அவனைச்‌ “செய்யும்‌ செய்கை செய்துமுடித்தவன்‌" என்று கைவல்ய நவநீதம்‌ குறிப்பிடுகிறது. மோக்ஷம்‌ என்றால்‌ என்னவென்று தெரிந்துகொண்டவன்‌, அடைய வேண்டியதை அடைந்துவிட்ட திருப்தியில்‌ இருக்கிறான்‌.
அடுத்து 8 வது ச்லோகத்தில்‌ நூலாசிரியர்‌ வேதாந்தத்தோடு யோக சாஸ்த்ரத்தை இணைக்கிறார்‌. இவ்வாறு இணைத்தல்‌ வித்யாரண்யர்‌ காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.
ப்ரஹ்மஸ9த்ரத்தில்‌ ஆதிசங்கரர்‌, யோக சாஸ்த்ரத்தை கண்டனம்‌ செய்திருக்கிறார்‌. யோக சாஸ்த்ரம்‌ ஆத்மா பல என்று சொல்கிறது, இந்த உலகம்‌ உண்மை என்று சொல்கிறது, ஈச்வரன்‌ வேறு, ஜீவன்‌ வேறு என்று சொல்கிறது. இப்படி முரண்பட்ட கருத்துக்களைக்‌ கொண்ட யோக சாஸ்த்ரம்‌ அத்வைத ஞானத்தைத்‌ தர முடியாது; முக்தியை அருளாது என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில்‌ நிராகரணம்‌ செய்திருக்கிறார்‌.
ஆனால்‌ யோக சாஸ்த்ரமானது, மனதைப்‌ பண்படுத்துகின்ற வழிமுறைகளுள்‌ மிகவும்‌ முக்கியமானது என்பதை எவரும்‌ மறுக்க முடியாது. யோக சாஸ்த்ரத்திற்கு சில ஆதாரங்கள்‌ வேதங்களில்‌ இருப்பதாகக்‌ கூறுகிறார்கள்‌.
யோக ஸூத்ரத்தைக்‌ கடைப்பிடிக்கவில்லையென்றாலும்‌, மோக்ஷம்‌ கிடைக்கும்‌. ஆனால்‌ நடைமுறையில்‌ பல சிக்கல்கள்‌ இருக்கின்றன. என்னதான்‌ சாஸ்த்ரம்‌ படித்தாலும்‌, புரிந்துகொண்டாலும்‌ மனம்‌ சிலநேரம்‌ படாதபாடு படுத்தத்தான்‌ செய்கிறது.
ஏதாவது தியானம்செய்து, அந்தத்‌ தொந்தரவை நீக்க முயற்சி செய்கிறார்கள்‌. விஷயம்‌ புரிந்திருக்கிறது, இருந்தாலும்‌, மனதில்‌ வாஸனைகள்‌ குறையவே இல்லை. அதை ஒரு பெரிய பிரச்சனையாகப்‌ பலர்‌ கருதுகிறார்கள்‌. அதனை நீக்குவதற்கு ஒரு ஸாதனையாக ஸமாதி அப்யாஸம்‌ கூறப்பட்டுள்ளது.
மெய்யறிவில்‌ நிலைத்திருப்பதற்கு நிதித்யாஸனத்தை முறையாகத்‌ தொடர்ந்து செய்தாலே போதுமானது. நிதித்யாஸனம்‌ செய்தும்‌ நிஷ்டை வரவில்லை என்றால்‌, சரியாகச்‌ செய்யவில்லை என்று பொருள்‌.
இந்த ச்லோகத்தில்‌ கூறப்படுகின்ற ஸாதனைகளை நாம்‌ ஏற்கவும்‌ இல்லை, மறுக்கவும்‌ இல்லை. அதில்‌ கூறப்பட்டுள்ள ஸாதனைகளை விரும்பினால்‌ செய்யலாம்‌, செய்தே ஆக வேண்டும்‌ என்று அவசியமில்லை.
ஶ்லோகம்‌ 8
ब्रह्मज्ञोऽपि स वासनाक्षयमनोनाशौ विधाय क्रमात्
स्वात्मारामपरोऽनिशं सुखघन: मुक्त: स जीवन्नपि।
प्रारब्धे क्षपिते च देहविलये मुक्तिं विदेहाङ्गत:
सच्चित्सौख्यमये ह्युपाधिरहिते मज्जत्वपारे परे॥ 8
ப்ரஹ்மஜ்ஞோ(அ)பி ஸ வாஸநாக்ஷயமநோநாஶௌ விதாய க்ரமாத்
ஸ்வாத்மாராமபரோ(அ)நிஶம் ஸுந: முக்த: ஸ ஜீவந்நபி।
ப்ராரப்தே க்ஷபிதே ச தேஹவிலயே முக்திம் விதேஹாங்த:
ஸச்சித்ஸௌக்யமயே ஹ்யுபாதிரஹிதே மஜ்ஜத்வபாரே பரே॥ 8
பதவுரை
ஸ: - அவன்‌, ப்ரஹ்மஜ்ஞ: அபி - பரம்பொருளை அறிந்தவனாக இருப்பினும்‌, க்ரமாத்‌ - முறையே, வாஸநாக்ஷய - எண்ணப்பதிவுகளை அழித்தலையும்‌, மநோநாமெள - மனதை அழித்தலையும்‌, விதாய - செய்து, அநிரம்‌ - இரவும்‌ பகலும்‌, ஸ்வாத்மாராமபர: - தன்னில்‌ இன்புறுகின்றவனாக (விளங்கட்டும்‌). ஸ: ஸுககந: - அப்பேரின்ப வடிவினன்‌, ஜீவந்நபி - உடலில்‌ உயிர்‌ தாங்கியிருந்தாலும்‌, முக்த: ஏவ - (பிறவித்‌ துன்பத்திலிருந்து) விடுபட்டவனே ஆவான்‌.
ப்ராரப்தே க்ஷபிதே ச - வினைப்பயன்‌ முடிந்து, தேஹவிலயே - உடல்‌ ஒடுங்கும்பொழுது, விதேஹாம்‌ முக்திம்‌ கத: - விதேஹ முக்தியை அடையப்‌ பெற்றவனாய்‌, உபாதிரஹிதே - உபாதிகளற்ற, அபாரே - கரைகளற்ற, பரே - மேலான, ஸச்சித்ஸெளக்யமயே ஹி - ஸச்சிதாநந்த ஸ்வரூபத்தில்‌, மஜ்ஜது- மூழ்கட்டும்‌.
பொழிப்புரை
அவன்‌ பரம்பொருளை அறிந்தவனாக இருப்பினும்‌, முறையே எண்ணப்பதிவுகளை அழித்தலையும்‌, மனதை அழித்தலையும்‌ செய்து, இரவும்‌ பகலும்‌ தன்னில்‌ இன்புறுகின்றவனாக (விளங்கட்டும்‌).
அப்பேரின்ப வடிவினன்‌ உடலில்‌ உயிர்‌ தாங்கியிருந்தாலும்‌, (பிறவித்‌ துன்பத்திலிருந்து) விடுபட்டவனே ஆவான்‌. வினைப்பயன்‌ முடிந்து, உடல்‌ ஒடுங்கும்பொழுது விதேஹ முக்தியை அடையப்‌ பெற்றவனாய்‌ உபாதிகளற்ற, கரைகளற்ற மேலான ஸச்சிதாநந்த ஸ்வரூபத்தில்‌ மூழ்கட்டும்‌!
விளக்கவுரை
நிர்குண ப்ரஹ்மத்தை அறிந்தவன்‌ ப்ரஹ்மஜ்ஞன்‌. அவன்‌ வாஸனா க்ஷயம்‌ என்கின்ற ஸாதனையையும்‌, மனோநாசம்‌ என்கின்ற ஸாதனையையும்‌ முறையாகச்‌ செய்ய வேண்டும்‌.
8.1 வாஸனாக்ஷயம்‌
நம்‌ உள்ளத்தில்‌ ஏகப்பட்ட எண்ணங்கள்‌ எத்தனையோ பிறவிகளாகப்‌ பதிந்திருக்கின்றன. அந்த வாஸனைகளை அழிக்க வேண்டும்‌. யோக சாஸ்த்ரத்தில்‌, எண்ணங்களை ஐந்தாகப்‌ பிரித்து, அவற்றை அழிப்பதற்கு வழி கூறப்படுகிறது.
8.2 மநோநாஶம்‌
வேதாந்தத்தில்‌ மனதையே பொய்‌ என்று கூறிய பிறகு, மனதை அழிக்க ஏன்‌ முயற்சி செய்ய வேண்டும்‌? என்று கேட்கப்படுகிறது.
மனதை அழிப்பது என்பது ஸாத்தியமில்லை. மனோநாசம்‌ என்ற சொல்லுக்கு உண்மையிலேயே பொருள்‌ இல்லை.
ஞானி மனோநாசம்‌ செய்தான்‌ என்று கூறினால்‌, ஞானி ப்ராரப்த கர்மத்தை அனுபவிக்கிறான்‌ என்ற கருத்துக்கு விரோதம்‌ வரும்‌. ஞானிக்கு மனம்‌ அழிந்துவிடும்‌ என்கிறார்கள்‌. ஞானத்தைப்‌ பெற்றாலும்‌, வினைப்பயன்களை எல்லோரும்‌ அனுபவித்துத்தான்‌ ஆக வேண்டும்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. வினைப்பயன்களை அனுபவிப்பதற்கு மனம்‌ வேண்டும்‌.
  1. மனம்‌ இல்லாமல்‌, வினைப்பயன்களை அனுபவிக்க முடியாது.
  2. ஞானம்‌ அடைந்தவுடன்‌ மனம்‌ அழிந்துவிட்டதென்றால்‌, சிஷ்யர்களுக்கு அதனைக்‌ கற்றுக்கொடுக்க முடியாது. கற்றுக்கொடுப்பதற்கு மனம்‌ வேண்டும்‌. குரு-சிஷ்ய ஸம்ப்ரதாயமே இல்லாமல்‌ போய்விடும்‌.
  3. ஜீவன்முக்தி என்பது ஸாத்தியமில்லை.
மனமற்ற நிலை என்கிறார்கள்‌. அது உறக்கத்தில்‌ நாள்தோறும்‌ அனுபவிக்கப்படுகிறது.
நாம்‌ துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும்‌ என்றுதான்‌ நினைக்கிறோம்‌, மனம்‌ அழிய வேண்டும்‌ என்று நினைக்கவில்லை.
தீய எண்ணங்களை அழிப்பதுதான்‌ மனோநாசம்‌, விருப்பு-வெறுப்பை நீக்குவது மனோநாசம்‌ என வேதாந்த சாஸ்த்ரத்தில்‌, மனோநாசத்திற்கு மேலெழுந்தவாரியான பொருள்‌ கூறப்படுகிறது.
மனோநாசத்திற்கு ஆழமான விளக்கமும்‌ கூறப்படுகிறது - மனதை ஒரு மாயத்தோற்றம்‌ என்று தெரிந்துகொள்வதே மனோநாசமாகும்‌. மனதின்‌ மித்யா தன்மையைப்‌ புரிந்துகொள்வதே மனோநாசம்‌.
8.3 மனம்‌ ஒரு மாயத்தோற்றம்‌ (மித்யா)
மனம்‌ நம்‌ படைப்பன்று, இறைவனுடைய படைப்பு. இறைவனுடைய படைப்பை யாரும்‌ அழிக்க முடியாது. அந்தப்‌ படைப்பில்‌ நாம்‌ வைத்திருக்கின்ற அபிமானத்தை வேண்டுமானால்‌ நீக்கிக்கொள்ளலாம்‌. படைப்பை நீக்க முடியாது. அந்த மனம்‌ நான்‌ என்று நினைப்பது நம்‌ ஸ்ருஷ்டி.
அண்டத்தில்‌ இருப்பது பிண்டத்தில்‌ இருக்கிறது. இந்த உலகம்‌ என்றாவது ஒரு குறையில்லாமல்‌ இருக்கப்‌ போகிறதா? நாம்‌ உறங்கினாலும்‌, உலகம்‌ இயங்கிக்‌ கொண்டுதான்‌ இருக்கிறது. நாம்‌ உறங்கும்போது, மனம்‌ ஒடுங்கியிருக்கிறது. மனம்‌ லயமாகுமே (தவிர, அழியாது. ப்ரளயத்தில்‌ கூட, உலகம்‌ ஒடுங்கியிருக்குமே தவிர, நாசமாகாது.
ப்ரபஞ்சத்திற்கும்‌ நாசமில்லை, மனதிற்கும்‌ நாசமில்லை. இரண்டையும்‌ மித்யா என்று புரிந்துகொள்ளலாம்‌. மித்யா என்று புரிந்துகொள்வதைத்‌ தவிர வேறு வழியில்லை.
அதனால்தான்‌ ப்ரஹ்ம ஸத்யம்‌, ஜகத்‌ அஸத்யம்‌ என்று சொல்லாமல்‌, மித்யா என்று சொல்கிறோம்‌. மித்யாவிற்கும்‌, அஸத்யத்திற்கும்‌ வேறுபாடு இருக்கிறது.
கிம்‌ மித்யா?
யத்‌ வித்யாநாஸ்யம்‌ தந்‌ மித்யா। (ப்ரச்னோத்தர ரத்நமாலிகா)
எது அறிவினால்‌ அழிக்கப்படுமோ, அது மித்யா.
மித்யா என்றால்‌ பொய்‌, இல்லவே இல்லாதது என்று பொருள்‌ அல்ல. எது அனுபவத்திற்கு மெய்யாகவும்‌, அறிவுக்குப்‌ பொய்யாகவும்‌ இருக்கிறதோ, அது மித்யா. முழுக்க முழுக்க பொய்‌, அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதற்கு முயல்கொம்பு, ஆகாசத்‌ தாமரை முதலியவை உதாரணங்களாகும்‌.
ஆனால்‌, மனமும்‌, உலகமும்‌ அப்படிப்பட்டவை அல்ல. அனுபவத்திற்கு உண்மை, அறிவுபூர்வமாகச்‌ சிந்தித்துப்‌ பார்த்தால்‌ பொய்‌.
ஸூர்யன்‌ உதிப்பதும்‌ மறைவதும்‌ உண்மை என்று அனுபவம்‌ கூறுகிறது, பொய்‌ என்று அறிவு சொல்கிறது.
என்னதான்‌ படித்தாலும்‌, பலருக்கு நடைமுறையில்‌ மனதில்‌ பிரச்சனைகள்‌ தோன்றுகின்றன. மனம்‌ ஸத்யம்‌ என்ற எண்ணம்‌ இருக்கின்ற வரை, ஸாதனை செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ இருந்துகொண்டுதான்‌ இருக்கும்‌. மனதை மித்யா என்று புரிந்துகொண்டால்‌, ஸாதனை செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ தோன்றாது.
ஸாதனைகள்‌ செய்வதால்‌, மனதில்‌ சஞ்சலங்கள்‌ குறையுமே தவிர, மனம்‌ அழியாது.
“மனோநாசம்‌ சொரூபநாசம்‌ அரூபநாசம்‌ என்று இருவகைப்படும்‌. சொரூபநாசம்‌ ஞானத்தினால்‌ உண்டாகும்‌, அரூபநாசம்‌ விதேஹமுக்தியில்‌ உண்டாகும்‌” என கைவல்ய நவநீதம்‌ மனோநாசத்தைத்‌ தெளிவுபடுத்துகிறது.
அஜ்ஞானிக்கு அரூப நாசமில்லை, இறந்த பிறகு அவன்‌ மீண்டும்‌ பிறப்பான்‌.
நூலாசிரியர்‌ வேதாந்த யோகியாக இருப்பதால்‌, இந்த ஸாதனைகளைப்‌ பரிந்துரைத்திருக்கிறார்‌. அவற்றைச்‌ செய்தால்தான்‌ நிதித்யாஸனத்தில்‌ பயன்பெற முடியும்‌ என்று பலர்‌ கருதுகிறார்கள்‌. ஸமாதி பயிற்சி செய்வது ஞானநிஷ்டைக்கு உதவிபுரியும்‌.
நான்‌ பரம்பொருளாக இருக்கிறேன்‌ என்று தியானம்‌ செய்ய வேண்டும்‌ என்று உட்காரும்போது, வாஸனைகள்‌ விடுவதில்லை.
மனம்‌ பெரிய பாரமாக இருக்கிறது என்று பலர்‌ நினைக்கிறார்கள்‌, அதற்கு நிதித்யாஸனம்‌ ஒன்றே போதும்‌.
ஆனால்‌ குறிப்பாக வாஸனைகளை நீக்கிக்‌ கொள்வதற்காக தியானம்‌ பழக வேண்டும்‌ என்று பலர்‌ நினைக்கிறார்கள்‌.
வாஸனா க்ஷயம்‌, மனோநாசம்‌ ஆகியவற்றை நிதித்யாஸனத்திலேயே கொண்டுவந்துவிடலாம்‌. மனதை மித்யா என்று நினைத்து த்யானம்‌ செய்வதும்‌, நிதித்யாஸனத்தில்‌ ஓர்‌ அம்சம்‌. நான்‌ பூர்ணமாக இருக்கிறேன்‌ என்று நினைத்து தியானம்‌ செய்வதும்‌ நிதித்யாஸனத்தில்‌ ஓர்‌ அம்சம்தான்‌.
வாஸனா க்ஷயம்‌ என்பது நம்மிடமுள்ள தீய எண்ணங்களை நீக்கிக்கொள்வது, அதற்கு உபாஸனையில்‌ நாம்‌ செய்கின்ற பண்புத்‌ தியானமே போதுமானது.
8.4 ஜீவந் முக்தி
தன்னை மெய்பொருளாக உணர்ந்தவன்‌, இரவும்‌ பகலும்‌ ஆத்மாநந்தமே வடிவெடுத்தவனாக இருக்கிறான்‌. உலக விவகாரங்கள்‌ அவனைச்‌ சிறிதளவுகூட பாதிப்பதில்லை. அவன்‌ வாழ்ந்துகொண்டிருந்தாலும்‌, அனைத்திலிருந்தும்‌ விடுபட்டவனாக இருக்கிறான்‌.
வாஸனா க்ஷயம்‌ செய்து, மனோநாசம்‌ செய்து, ஆனந்தமாக இருக்கிறான்‌. ஜீவன்முக்தனாக இருக்கிறான்‌.
தன்னைப்‌ பற்றிய தெளிந்த அறிவோடு வினைப்பயனை அனுபவிப்பதற்குப்‌ பெயர்‌ ஜீவன்முக்தி. ஜீவன்முக்தன்‌ உடல்‌ வாழ்க்கையில்‌ இருக்கின்ற இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்‌. ஆனால்‌ அறிவினால்‌ வினைப்பயனிலிருந்து விடுபட்டிருக்கிறான்‌.
மனமும்‌ உடலும்‌ இருப்பதால்‌, வினைப்பயன்‌ இருக்கிறது. ஆனால்‌ அறிவினால்‌ விடுபட்டிருக்கிறான்‌.
அவன்‌ உடலின்‌ கோணத்தில்‌ வினைப்பயனை அனுபவிப்பவன்‌, அறிவின்‌ கோணத்தில்‌ முக்தன்‌.
அனுபவிப்பவனாக இருந்தாலும்‌, அனுபவிப்பவனாக இருக்கும்‌ தன்மை அவனைச்‌ சிறிதும்‌ பாதிப்பதில்லை.
8.5 விதேஹமுக்தி
வினைப்பயன்‌ முடிந்தவுடன்‌, ஞானியின்‌ உடல்‌ நன்றாக ஒடுங்கிவிடுகிறது. அவனது ஸ்தூல சரீரம்‌ ஸ்தூல பஞ்ச பூதங்களோடு ஒடுங்கிவிடுகிறது. ஸூக்ஷ்ம சரீரமும்‌ ஸூக்ஷ்ம பஞ்சபூதங்களில்‌ ஒடுங்கிவிடுகிறது.
மாதர்மேதினி தாத மாருத ஸகே தேஜ: ஸுபந்தோஜல
ப்ராதர்வ்யோமநிபத்த ஏவ பவதாமந்த்ய: ப்ராணாமாஞ்ஜலி:।
யுஷ்மத்ஸங்கவஸோபஜாத ஸாக்ருதஸ்பார ஸ்புரந்நிர்மல
ஜ்ஞாநாபாஸ்த ஸமஸ்தமோஹமஹிமா லீயே பரப்ரஹ்மணி।
ஹே தாயான பூமியே! தந்தையான காற்றே! நண்பனான நெருப்பே! உறவினனான நீரே! உடன்பிறந்தவனான ஆகாசமே! உங்களுக்கு நான்‌ கடைசியாகக்‌ கைகூப்பி நமஸ்காரம்‌ செய்கிறேன்‌.
உங்களுடைய தொடர்பால்‌, நான்‌ அறிவொளியை அடைந்து, மோஹத்தைத்‌ தள்ளி, மேலான பரம்பொருளில்‌ ஒடுங்குகிறேன்‌ என்று பர்த்ருஹரி வைராக்ய சதகத்தில்‌ கூறுகிறார்‌.
உடலிலிருந்து பஞ்சபூதங்களும்‌ அதனதன்‌ அம்சங்களை எடுத்துக்கொள்கின்றன.
முதலில்‌ உபாதியோடு கூடிய ஸச்சிதாநந்த ஸ்வரூபமாக இருந்தான்‌. இப்பொழுது, உபாதி இல்லாத ஸச்சிதாநந்த ஸ்வரூபமாக இருக்கிறான்‌.
எல்லையற்ற கரைகாணாத அந்த மேலான, ஸச்சிதானந்தத்தில்‌ மூழ்கியிருக்கிறான்‌. அதுவாகவே ஆகிவிடுகிறான்‌.
ஆசிரியர்‌ இந்நூலை இந்த ச்லோகத்தில்‌ அழகாக நிறைவு செய்கிறார்‌.
ஶ்லோகம்‌ 9
इत्थं वेदवचोभिरेव नियते मार्गे वयं यात्रिका:
धर्माख्ये च सनातने कृतपदा वर्णाश्रमाचारिण:।
गच्छाम: क्रमशश्च मोक्षपदवीमानन्दरूपां यथा
श्रद्धाभक्तिमथस्तथा धृतियुतानस्मान् विदध्याद् गुरु:॥ 9
இத்ம் வேவசோபிரேவ நியதே மார்கே வயம் யாத்ரிகா:
ர்மாக்யே ச ஸநாதநே க்தபதா வர்ணாஶ்ரமாசாரிண:।
ச்சாம: க்ரமஶஶ்ச மோக்ஷபவீமாநந்ரூபாம் யதா
ஶ்ரத்தாக்திமஸ்ததா த்தியுதாநஸ்மாந் வித்யாத் குரு:॥ 9
பதவுரை
ஸநாதநே தர்மாக்யே ச - ஸநாதந தர்மம்‌ எனப்படுகின்ற. (வோாழ்க்கைமுறையில்‌), க்ருதபதா: - அடியெடுத்து வைத்திருக்கின்ற, வர்ணாஸ்ரமாசாரிண: - வர்ணாச்ரம தர்மங்களைக்‌ கடைப்பிடிக்கின்ற, வயம்‌ - நாம்‌ எல்லோரும்‌, இத்தம்‌ - இத்தகைய, வேதவசோபி: நியதே மார்கே ஏவ - வேதவாக்கியங்களால்‌ காட்டப்படும்‌ வழியில்தான்‌, யாத்ரிகா: - பயணிகளாக இருக்கிறோம்‌. யதா - எவ்வாறு, ஆநந்தரூபாம்‌ மோக்ஷபதவீம்‌ - பேரின்பவடிவமாகிய மோக்ஷ பதவியை, க்ரமா: கச்சாம: - முறைப்படி அடைவோமோ, ததா - அவ்வாறே, குரு: - குருநாதர்‌, ச்ரத்தாபக்திமத: - ச்ரத்தை, பக்தி உடையவர்களாகவும்‌, த்ருதியுதாந்‌ - நல்லுறுதி உடையவர்களாகவும்‌, அஸ்மாந்‌ விதத்யாந்‌ - அருள்‌ புரியட்டும்‌.
பொழிப்புரை
ஸநாதந தர்மம்‌ எனப்படுகின்ற (வாழ்க்கைமுறையில்‌) அடியெடுத்து வைத்திருக்கின்ற வர்ணாச்ரம தர்மங்களைக்‌ கடைப்பிடிக்கின்ற நாம்‌ எல்லோரும்‌, இத்தகைய வேதவாக்கியங்களால்‌ காட்டப்படும்‌ வழியில்தான்‌ பயணிகளாக இருக்கிறோம்‌. எவ்வாறு பேரின்பவடிவமாகிய மோக்ஷ பதவியை முறைப்படி அடைவோமோ அவ்வாறே, குருநாதர்‌ சரத்தை, பக்தி உடையவர்களாகவும்‌, நல்லுறுதி உடையவர்களாகவும்‌ நம்மை அருளட்டும்‌.
விளக்கவுரை
வேதநெறிப்படி வாழ்வதற்காக நாம்‌ இந்த ஜீவ யாத்திரையில்‌ அடியெடுத்து வைத்திருக்கிறோம்‌. வர்ணாச்ரம தர்மமாகிய ஸநாதந தர்மத்தைக்‌ கடைப்பிடிக்கின்ற விஷயத்தில்‌, நாம்‌ பயணிகளாக இருக்கிறோம்‌. நாம்‌ அனைவரும்‌ வேதமொழிகளால்‌ கூறப்பட்ட பாதையில்‌ பயணிகளாக இருக்கிறோம்‌.
நூலாசிரியர்‌ கூறிய உபதேசங்கள்‌ வேதத்தில்‌ கூறப்பட்டவையே ஆகும்‌.
வேதத்தில்‌ ச்ரத்தை வைப்பது, கர்மங்களை முறையாகச்‌ செய்வது, காலப்போக்கில்‌ பற்றற்றதன்மை உருவாவது, அதில்‌ நிலைத்திருப்பதற்காகக்‌ கர்மயோகம்‌ உபாஸனைகளைச்‌ செய்வது, ஞானத்தைப்‌ பெறுவதற்காக குருவிடம்‌ சென்று ச்ரவண, மனன, நிதித்யாஸனம்‌ செய்வது, செய்த பிறகும்‌ மனதில்‌ ஏதேனும்‌ பிரச்சனை தோன்றினால்‌, அதற்காக ஸமாதி பழகுவது என ஸாதனைகளை அழகாகக்‌ கூறினார்‌ நூலாசிரியர்‌.
வேதம்‌ அந்தந்த வர்ணத்துக்குரிய ஆச்ரமத்துக்குரிய கடமைகளைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று சொல்கிறது.
குடும்பத்தில்‌ ஒவ்வொருவருக்கென்று கடமைகள்‌ இருக்கின்றன. அதனை ஒவ்வொருவரும்‌ சரியாகச்‌ செய்தால்தான்‌, குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்‌. அதுபோன்று, ஸமூகம்‌ நன்றாக இருக்க வேண்டுமானால்‌, அவரவர்களுக்குரிய கடமைகளை அவரவர்கள்‌ செய்ய வேண்டும்‌. அதற்காக ஏற்படுத்தப்பட்டதே வர்ண தர்மம்‌ ஆகும்‌.
ஸமுதாய நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது வர்ணதர்மம்‌.
தனிமனிதனின்‌ நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது ஆச்ரம தர்மம்‌.
எல்லோரும்‌ கடவுளை வணங்க வேண்டும்‌. சிலருக்கு வழிபாடு செய்வதே வேலையாக இருக்கும்‌. சிலருக்கு இடத்தைத்‌ தூய்மைப்படுத்துவதே வேலையாக இருக்கும்‌. இதில்‌ உயர்வு தாழ்வு இல்லை. ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸந்யாஸ ஆச்ரமங்கள்‌ என தனிமனிதனின்‌ வாழ்க்கைமுறை நான்காகப்‌ பிரித்துக்‌ கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆச்ரமத்திற்கும்‌ ஒரு தர்மம்‌ இருக்கிறது. கல்வி கற்கும்‌ பருவம்‌ ப்ரஹ்மசர்ய ஆச்ரமம்‌. வேதத்தில்‌ கூறப்பட்டுள்ள விசேஷமான கர்மங்களைச்‌ செய்வதற்காக இருக்கக்கூடியது க்ருஹஸ்தாச்ரமம்‌. வானப்ரஸ்த ஆசர்மத்தில்‌ மனதால்‌ செய்யப்படும்‌ மாநஸ கர்மங்களுக்கு முக்கியத்துவம்‌ அளிக்கப்படுகிறது. துறவறத்தில்‌, வேதாந்த சாஸ்த்ரத்தைக்‌ கற்பதற்கு முக்கியத்துவம்‌ அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும்‌ ஸமுதாயத்திற்குச்‌ செய்ய வேண்டிய கடமையும்‌ இருக்கிறது, தனக்குச்‌ செய்துகொள்ள வேண்டிய கடமையும்‌ இருக்கிறது.
ச்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ வர்ணாச்ரம தர்மங்களை உபதேசித்திருக்கின்றன. அதில்‌ ச்ரத்தை இருப்பதால்‌, நாம்‌ வர்ணாச்ரம தர்மத்தை அநுஷ்டிக்கிறோம்‌. வர்ணாச்ரமத்தைக்‌ கடைப்பிடிக்கும்போது, ஸமுதாயத்திற்கு நன்மை ஏற்படுவது மட்டுமல்லாமல்‌, நமக்கு எத்தனையோ பல நன்மைகள்‌ ஏற்படுகின்றன.
எப்படி முறையாக ஆநந்தவடிவமான மோக்ஷபதவியை அடைவோமோ அப்படி, குருவானவர்‌ நம்மை,சாஸ்த்ரத்தில்‌ ச்ரத்தையோடும்‌, அந்த சாஸ்த்ரத்தினால்‌ காட்டப்படும்‌ ஈச்வரனிடத்தில்‌ பரிபூர்ண பக்தியும்‌ உடையவர்களாகவும்‌, ஆன்மிக வாழ்வில்‌ நல்ல பிடிப்புள்ளவர்களாகவும்‌ விளங்க வேண்டுமென்று அருள்மழை பொழிவாராக! என்று கூறி நூலாசிரியர்‌ நூலை நிறைவுசெய்கிறார்‌.
ஜீவயாத்ரா நூலின்‌ ஸாரம்‌
முதல்‌ ச்லோகம்‌ மனிதனின்‌ குறிக்கோளைப்‌ பின்வருமாறு கூறுகிறது. எல்லோரும்‌ பேராநந்தத்தை விரும்புகிறார்கள்‌. அதற்காகத்தான்‌ முயற்சிக்கிறார்கள்‌. ஆனால்‌ நாம்‌ பேராநந்தத்தைத்தான்‌ விரும்புகிறோம்‌. அதற்காகத்தான்‌ முயற்சிக்கிறோம்‌ என்று அவர்களுக்குச்‌ சரியாகத்‌ தெரியவில்லை. இவ்வளவு காலமாக எத்தனையோ முயற்சி செய்தும்‌, அவர்கள்‌ அந்த பேராநந்தத்தை அடையாததிலிருந்தே, அவர்களுக்கு தங்களுடைய குறிக்கோளைப்‌ பற்றியும்‌, குறிக்கோளை அடைவதற்கான வழிமுறையைப்‌ பற்றியும்‌, சரியாகத்‌ தெரியவில்லை என்பது தெரிகிறது.
இரண்டாவது ச்லோகம்‌, அந்தக்‌ குறிக்கோள்‌ என்ன என்பது பற்றியும்‌, அதனை அடைவதற்கான வழியைப்‌ பற்றியும்‌, வேதங்கள்‌ நமக்கு உபதேசித்திருக்கின்றன. அதிலும்‌ குறிப்பாக கடோபநிஷத்தில்‌ ஒரு மந்த்ரம்‌, அனைத்து சாஸ்த்ரங்களின்‌ ஸாரமாக ஒரு கருத்தை எடுத்துரைப்பதாகக்‌ கூறுகிறது.
மூன்றாவது ச்லோகம்‌, அந்த மந்த்ரத்தை ச்லோகரூபமாகக்‌ கூறியது. ஜீவாத்மா பயணி, புத்தி தேரோட்டி, மனம்‌ கடிவாளக்‌ கயிறு, பொறிகள்‌ குதிரைகள்‌, புலன்கள்‌ பாதைகள்‌, அடைய வேண்டிய குறிக்கோள்‌ ஆநந்தம்‌ என ஸாதனையை ஒரு தேர்‌ பயணத்தோடு ஒப்பிட்டுக்‌ கூறியது.
நான்காவது ச்லோகம்‌ உண்மையில்‌ இது செயல்ரூபமான பயணம்‌ அல்ல. இந்த்ரியங்களைக்‌ கட்டுப்படுத்தி, அறிவைக்‌ கொண்டு அறிந்துகொள்ள வேண்டிய அறிவுபூர்வமான பயணம்‌ என்று கூறி, மோக்ஷம்‌ என்ற சொல்லை அறிமுகப்படுத்தி, ஞானத்தினால்தான்‌ மோக்ஷத்தை அடைய முடியும்‌ என்று தெளிவாகக்‌ கூறினார்‌.
ஐந்தாவது ச்லோகம்‌ முதல்‌ எட்டாவது ச்லோகம்‌ வரை, ஒரு மனிதன்‌ ஆன்மிக வாழ்க்கையில்‌ மேற்கொள்ள வேண்டிய ஸாதனைகள்‌. கூறப்பட்டன. ச்ரத்தா, கர்மாநுஷ்டானம்‌, நிராசை, விவேகம்‌, அது உறுதிபெறுவதற்கு கர்மயோகம்‌, உபாஸனை, தத்துவ ஞானத்தைப்‌ பெறுவதற்காக ச்ரவணம்‌, மனனம்‌, நிதித்யாஸனம்‌, ஆழமான பிரச்சினைகள்‌ இருக்குமானால்‌, ஸமாதி பழகுவதும்‌ நல்லதே என்று கூறி நிறைவு செய்தார்‌.
ஒன்பதாவது ச்லோகத்தில்‌, நாம்‌ எல்லோரும்‌ இந்த வேதவழியில்தான்‌ பயணிகளாக இருக்கிறோம்‌. இந்த வழியில்‌ செல்கின்ற நமக்கு குருநாதர்‌, ச்ரத்தையையும்‌, பக்தியையும்‌, உறுதியையும்‌ அருள்வாராக! என்று கூறி நிறைவு செய்திருக்கிறார்‌.
2021-05-07